பாடல் #398: இரண்டாம் தந்திரம் – 9. சர்வ சிருஷ்டி (அனைத்தும் உருவாகிய முறை)
ஆணவச் சத்தியும் ஆம்அதில் ஐவருங்
காரிய காரண ஈசர் கடைமுறை
பேணிய ஐந்தொழி லால்விந்து விற்பிறந்
தாணவம் நீங்கா தவரென லாகுமே.
விளக்கம்:
சதாசிவமூர்த்தியாகிய பரம்பொருளின் திருவிளையாடலால் ஆணவ மாயையில் நின்று உயிர்களைப் படைக்கும் தொழிலை பிரம்மனும் காக்கும் தொழிலை திருமாலும் அழிக்கும் தொழிலை உருத்திரனும் மாயையால் மறைக்கும் தொழிலை மகேசுவரனும் கருணையால் அருளும் தொழிலை சதாசிவனும் செய்கின்றனர். இவர்களும் உடலெடுத்து உயிர்களாகப் பிறந்து இறைவனை வேண்டித் தவமிருந்து இறைவனது அருளால் இந்த ஐந்து தொழில்களையும் பெற்று அவரவர்களுக்கு உரிய தொழிலைச் செய்தாலும் ஆணவம் முற்றிலும் நீங்காமல் இருப்பவர்கள் தான்.
குறிப்பு: பிரம்மன், திருமால், உருத்திரன், மகேசுவரன், சதாசிவன் ஆகிய ஐந்து தேவர்களும் சிறிதளவு ஆணவம் இருப்பதினால் தான் அவர்கள் ஐந்து பெயர்களில் குறிக்கப்பட்டு தனியாக ஐந்து தொழில்களை செய்து கொண்டிருக்கின்றனர். அந்த சிறிதளவு ஆணவமும் இல்லையெனில் அவர்கள் அசையா சக்தியாக இருக்கும் சதாசிவமூர்த்தியுடன் கலந்திருப்பார்கள். இவர்களும் உடலெடுத்து உயிர்களாக பிறப்பெடுத்து சிவனடியார்களாக இருந்தவர்கள் தான் என்பதை திருமந்திரம் பாடல் எண் 302, 380 பாடல்களின் மூலம் அறியலாம்.