பாடல் #1778

பாடல் #1778: ஏழாம் தந்திரம் – 8. சம்பிரதாயம் (இறையருளால் உணர்த்தப் பட்ட தர்மத்தை முறையாக கடைபிடிப்பது)

உடல்பொரு ளாவி யுதகத்தாற் கொண்டு
படர்வினை பற்றறப் பார்த்துக் கைவைத்து
நொடியிலடி வைத்து நுண்ணுணர் வாக்கிக்
கடிய பிறப்பறக் காட்டின னந்தியே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

உடலபொரு ளாவி யுதகததாற கொணடு
படரவினை பறறறப பாரததுக கைவைதது
நொடியிலடி வைதது நுணணுணர வாககிக
கடிய பிறபபறக காடடின னநதியெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

உடல் பொருள் ஆவி உதகத்தால் கொண்டு
படர் வினை பற்று அற பார்த்து கை வைத்து
நொடியில் அடி வைத்து நுண் உணர்வு ஆக்கி
கடிய பிறப்பு அற காட்டினன் நந்தியே.

பதப்பொருள்:

உடல் (உடல்) பொருள் (உடலுக்குள் பொருளாக மறைந்து இருக்கின்ற இறைவன்) ஆவி (ஆன்மா ஆகிய மூன்றும் சேர்ந்து) உதகத்தால் (தாயின் கர்ப்பப் பைக்குள் இருக்கின்ற தண்ணீரில் பிறவி) கொண்டு (எடுத்துக் கொண்டு வரும் படி செய்து)
படர் (அந்த பிறவியில் தமது ஆசைகளை தீர்த்துக் கொள்ளும் போது அதனால் சேர்ந்து கொள்ளுகின்ற) வினை (பல விதமான வினைகளால்) பற்று (உருவாகுகின்ற பற்றுக்கள்) அற (நீங்கும் படி) பார்த்து (தமது திருக்கண்ணால் பார்த்து [நயன தீட்சை]) கை (தமது திருக்கரங்களை) வைத்து (வைத்து அபயம் கொடுத்து [ஸ்பரிச தீட்சை])
நொடியில் (ஒரு கண நேரத்தில்) அடி (தமது திருவடிகளை) வைத்து (வைத்து [திருவடி தீட்சை]) நுண் (அதன் மூலம் ஞானமாகிய நுண்ணியமான) உணர்வு (உணர்வுகளை [ஞான தீட்சை]) ஆக்கி (ஆக்கிக் கொடுத்து)
கடிய (துன்பங்களால் நீண்டு கொண்டே இருக்கின்ற) பிறப்பு (பிறவி சுழற்சியிலிருந்து) அற (நீங்குவதற்கான) காட்டினன் (வழியை காட்டி அருளினான்) நந்தியே (உள்ளுக்குள் குருநாதனாக இருக்கின்ற இறைனவன்).

விளக்கம்:

உடல், அதற்குள் பொருளாக மறைந்து இருக்கின்ற இறைவன், ஆன்மா ஆகிய மூன்றும் சேர்ந்து தாயின் கர்ப்பப் பைக்குள் இருக்கின்ற தண்ணீரில் பிறவி எடுத்துக் கொண்டு வரும் படி செய்து, அந்த பிறவியில் தமது ஆசைகளை தீர்த்துக் கொள்ளும் போது அதனால் சேர்ந்து கொள்ளுகின்ற பல விதமான வினைகளால் உருவாகுகின்ற பற்றுக்கள் நீங்கும் படி தமது திருக்கண்ணால் பார்த்து (நயன தீட்சை), தமது திருக்கரங்களை வைத்து அபயம் கொடுத்து (ஸ்பரிச தீட்சை), ஒரு கண நேரத்தில் தமது திருவடிகளை வைத்து (திருவடி தீட்சை), அதன் மூலம் ஞானமாகிய நுண்ணியமான உணர்வுகளை (ஞான தீட்சை) ஆக்கிக் கொடுத்து, துன்பங்களால் நீண்டு கொண்டே இருக்கின்ற பிறவி சுழற்சியிலிருந்து நீங்குவதற்கான வழியை காட்டி அருளினான் உள்ளுக்குள் குருநாதனாக இருக்கின்ற இறைவன்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.