பாடல் #1686: ஆறாம் தந்திரம் – 13. அபக்குவன் (இறைவனை அறிவதற்கான மன முதிர்ச்சி இல்லாதவர்கள்)
கன்றல் கருதலுங் கருமை சேர்தலுந்
தின்றல் சுவைத்தலுந் தீமைகள் செய்தலும்
பின்றமை யென்றலும் பெருமை கூறலு
மென்றிவை யிறைபா லிசைகை யல்லவே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
கனறல கருதலுங கருமை செரதலுந
தினறல சுவைததலுந தீமைகள செயதலும
பினறமை யெனறலும பெருமை கூறலு
மெனறிவை யிறைபா லிசைகை யலலவெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
கன்றல் கருதலும் கருமை சேர்தலும்
தின்றல் சுவைத்தலும் தீமைகள் செய்தலும்
பின் தமை என்றலும் பெருமை கூறலும்
என்ற இவை இறை பால் இசைகை அல்லவே.
பதப்பொருள்:
கன்றல் (அகங்காரத்தினால் வரும் கோபத்தை) கருதலும் (எண்ணி இருப்பதும்) கருமை (நான் என்கின்ற எண்ணத்தோடு செயல்களை செய்து கர்மங்களை) சேர்தலும் (சேர்த்துக் கொள்வதும்)
தின்றல் (உயிரை வளர்ப்பதற்காக சாப்பிடாமல்) சுவைத்தலும் (வாய் சுவைக்காக ஆசைப் பட்டு சாப்பிடுவதும்) தீமைகள் (தர்மத்திற்கு எதிரான தீய செயல்களை) செய்தலும் (செய்வதும்)
பின் (அனைவரும் பின்னால்) தமை (தாமே முன்னால்) என்றலும் (என்கின்ற சுய நலத்தோடு இருப்பதும்) பெருமை (தற்பெருமை) கூறலும் (பேசுவதும்)
என்ற (ஆகிய) இவை (இந்த ஆறு விதமான தன்மைகளும்) இறை (இறைவனின்) பால் (மேல்) இசைகை (பொருந்தி இருக்கும் நிலைக்கு) அல்லவே (கொண்டு செல்லாது).
விளக்கம்:
அகங்காரத்தினால் வரும் கோபத்தை எண்ணி இருப்பதும், நான் என்கின்ற எண்ணத்தோடு செயல்களை செய்து கர்மங்களை சேர்த்துக் கொள்வதும், உயிரை வளர்ப்பதற்காக சாப்பிடாமல் வாய் சுவைக்காக ஆசைப் பட்டு சாப்பிடுவதும், தர்மத்திற்கு எதிரான தீய செயல்களை செய்வதும், தமக்கு பின்பு தான் மற்றவர்கள் என்கிற சுய நலத்தோடு இருப்பதும், தற்பெருமை பேசுவதும், ஆகிய இந்த ஆறு விதமான தன்மைகளும் இறைவனோடு சேர்ந்து இருக்கும் நிலைக்கு கொண்டு செல்லாது.