பாடல் #1803

பாடல் #1803: ஏழாம் தந்திரம் – 9. திருவருள் வைப்பு (இறைவன் கொடுத்த அருளை காப்பாற்றுதல்)

பிறவா நெறிதந்த பேரரு ளாளன்
மருவா வருள்தந்த மாநந்தி யார்க்கு
மறவாழி யந்தண னாதிப் பராபர
னுறவாகி வந்தெனுளம் புகுந் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பிறவா நெறிதநத பெரரு ளாளன
மருவா வருளதநத மாநநதி யாரககு
மறவாழி யநதண னாதிப பராபர
னுறவாகி வநதெனுளம புகுந தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பிறவா நெறி தந்த பேர் அருளாளன்
மருவா அருள் தந்த மா நந்தி யார்க்கும்
அற வாழி அந்தணன் ஆதி பராபரன்
உறவு ஆகி வந்து என் உளம் புகுந்தானே.

பதப்பொருள்:

பிறவா (இனி எப்போதும் பிறக்காத) நெறி (வழி முறையை) தந்த (எமக்கு கொடுத்த) பேர் (மிகப் பெரிய) அருளாளன் (அருளாளன்)
மருவா (என்றும் மாறாத) அருள் (அருளை) தந்த (எமக்கு கொடுத்த) மா (மாபெரும்) நந்தி (குருநாதனாகிய இறைவன்) யார்க்கும் (எவருக்கும்)
அற (தர்மத்தின்) வாழி (வழியில் வாழுகின்ற) அந்தணன் (வழி முறைகளை கற்றுக் கொடுக்கின்ற வேதத்தின் எல்லையாக இருக்கின்றவன்) ஆதி (ஆதியிலிருந்தே இருக்கின்ற) பராபரன் (அனைத்திற்கும் மேலான அசையா சக்தியாகிய பரம் பொருளானவன்)
உறவு (எம்மோடு உறவு) ஆகி (கொண்டு) வந்து (வந்து) என் (எமது) உளம் (உள்ளத்திற்குள்) புகுந்தானே (புகுந்தானே).

விளக்கம்:

இனி எப்போதும் பிறக்காத வழிமுறையை எமக்கு கொடுத்தவன் பேரருளாளன். என்றும் மாறாத அருளை எமக்கு கொடுத்தவன் மாபெரும் குருநாதனாகிய இறைவன். வேதங்கள் சொல்லுகின்ற தர்மங்களை கற்றுக்கொடுத்து அதன் வழியில் வாழுகின்ற அனைவரும் சென்று அடைகின்ற அந்த வேதத்தின் எல்லையாக இருக்கின்றவன். ஆதியிலிருந்தே இருக்கின்ற அனைத்திற்கும் மேலான அசையா சக்தியாகிய அந்த பரம்பொருளே எம்மோடு உறவு கொண்டாடி எமது உள்ளத்திற்குள் புகுந்து கொண்டான்.

பாடல் #1802

பாடல் #1802: ஏழாம் தந்திரம் – 9. திருவருள் வைப்பு (இறைவன் கொடுத்த அருளை காப்பாற்றுதல்)

பாசத்தி லிட்ட தருள்தந்த பாசத்தில்
நேசத்தை விட்ட தருள்தந்த நேசத்திற்
கூசற்ற முத்தி யருள்தந்த கூட்டத்தில்
நேசமற்றுந் தோன்றா நிலையரு ளாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பாசததி லிடட தருளதநத பாசததில
நெசததை விடட தருளதநத நெசததிற
கூசறற முததி யருளதநத கூடடததில
நெசமறறுந தொனறா நிலையரு ளாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பாசத்தில் இட்டது அருள் தந்த பாசத்தில்
நேசத்தை விட்டது அருள் தந்த நேசத்தில்
கூசு அற்ற முத்தி அருள் தந்த கூட்டத்தில்
நேசம் அற்றும் தோன்றா நிலை அருள் ஆமே.

பதப்பொருள்:

பாசத்தில் (குடும்ப பாசத்தில்) இட்டது (இருக்கும் படி செய்தது) அருள் (இறையருள்) தந்த (கொடுத்த) பாசத்தில் (பாசத்தினால் ஆகும்)
நேசத்தை (அந்த பாசத்தை அனுபவித்து முடித்த பின் ஆசையை) விட்டது (விடும் படி செய்தது) அருள் (இறையருள்) தந்த (கொடுத்த) நேசத்தில் (பேரன்பினால் ஆகும்)
கூசு (அந்த பேரன்பில் நிலை குறைவு) அற்ற (இல்லாத) முத்தி (முக்தியானது) அருள் (இறையருள்) தந்த (கொடுத்த) கூட்டத்தில் (திருவருள் சேர்க்கையினால் ஆகும்)
நேசம் (அந்த திருவருள் சேர்க்கையினால் பாசமும் ஆசையும்) அற்றும் (இல்லாத) தோன்றா (எண்ணங்கள் தோன்றாத) நிலை (நிலையே) அருள் (பேரருள்) ஆமே (ஆகும்).

விளக்கம்:

பாடல் #1801 இல் உள்ளபடி இறைவன் எம்மீது கொண்ட மாபெரும் கருணையாகிய திருவருளால் குடும்ப பாசத்தில் இருக்கும் படி எம்மை வைத்து, அந்த பாசத்தை அனுபவித்து முடித்த பின் ஆசையை விடும் படி செய்து, உள்ளத்தில் ஊற்றெடுத்து வரும் பேரன்பில் குறைவு இல்லாத முக்தி நிலையை கொடுத்து, அவனது திருவருளை எம்மோடு சேர்த்துக் கொடுத்தான். அந்த திருவருள் சேர்க்கையினால் பாசமும் ஆசையும் இல்லாத, எண்ணங்கள் தோன்றாத, அமைதியான நிலையே பேரருள் ஆகும்.

பாடல் #1801

பாடல் #1801: ஏழாம் தந்திரம் – 9. திருவருள் வைப்பு (இறைவன் கொடுத்த அருளை காப்பாற்றுதல்)

அருளா லமுதப் பெருங்கட லாட்டி
யருளா லடிபுனைந் தாரமுந் தந்திட்
டருளான வானந்தத் தாரமு தூட்டி
யருளா லென்னந்தி யகம்புகுந் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அருளா லமுதப பெருஙகட லாடடி
யருளா லடிபுனைந தாரமுந தநதிட
டருளான வானநதத தாரமு தூடடி
யருளா லெனனநதி யகமபுகுந தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அருள் ஆல் அமுத பெரும் கடல் ஆட்டி
அருள் ஆல் அடி புனைந்து ஆரமும் தந்து இட்டு
அருள் ஆன ஆனந்தத்து ஆர் அமுது ஊட்டி
அருள் ஆல் என் நந்தி அகம் புகுந்தானே.

பதப்பொருள்:

அருள் (அவனது திருவருள்) ஆல் (மூலம்) அமுத (அமுதத்தால் நிறைந்த) பெரும் (மிகப் பெரிய) கடல் (கடலில்) ஆட்டி (எம்மை மூழ்க வைத்து நீராட்டி)
அருள் (அவனது திருவருள்) ஆல் (மூலம்) அடி (அவனுடைய திருவடியை) புனைந்து (எமது தலைமேல் இருக்கும் படி செய்து) ஆரமும் (அவன் கழுத்தில் அணிகின்ற மாலையையும்) தந்து (எமக்கு கொடுத்து) இட்டு (யாம் அணியம் படி செய்து)
அருள் (அவனது திருவருள்) ஆன (ஆகிய) ஆனந்தத்து (பேரானந்தத்தினால்) ஆர் (நிறைந்து இருக்கும்) அமுது (அமிழ்தத்தை) ஊட்டி (எமக்கு ஊட்டிக் கொடுத்து)
அருள் (அவனது திருவருள்) ஆல் (மூலம்) என் (எமது) நந்தி (குருநாதனாகிய இறைவன்) அகம் (எமக்குள்) புகுந்தானே (புகுந்து கொண்டானே).

விளக்கம்:

இறைவன் எம்மீது கொண்ட மாபெரும் கருணையாகிய திருவருளால் அமுதத்தால் நிறைந்த மிகப் பெரிய கடலில் எம்மை மூழ்க வைத்து நீராட்டி, அவனது திருவடிகளை எமது தலை மேல் வைத்து, அவன் கழுத்தில் அணிகின்ற மாலையையும் எம்மை அணிய வைத்து, பேரானந்தமாகிய அமிழ்தத்தை எமக்கு ஊட்டி, எமது குருநாதனாகிய இறைவனே எமக்குள் புகுந்து கொண்டான்.

பாடல் #1800

பாடல் #1800: ஏழாம் தந்திரம் – 9. திருவருள் வைப்பு (இறைவன் கொடுத்த அருளை காப்பாற்றுதல்)

அருளில் பிறந்திட் டருளில் வளர்ந்திட்
டருளிலிழிந் திளைப் பாற்றி மறைந்திட்
டருளான வானந்தத் தாரமு தூட்டி
யருளா லென்னந்தி யகம்புகுந் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அருளில பிறநதிட டருளில வளரநதிட
டருளிலிழிந திளைப பாறறி மறைநதிட
டருளான வானநதத தாரமு தூடடி
யருளா லெனனநதி யகமபுகுந தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அருளில் பிறந்து இட்டு அருளில் வளர்ந்து இட்டு
அருளில் இழிந்து இளைப்பு ஆற்றி மறைந்து இட்டு
அருள் ஆன ஆனந்தத்து ஆர் அமுது ஊட்டி
அருள் ஆல் என் நந்தி அகம் புகுந்தானே.

பதப்பொருள்:

அருளில் (இறைவன் தமது திருவருளாலே) பிறந்து (உயிர்களை அவர்களின் ஆசைகளுக்கு ஏற்ற பிறவி எடுக்கும் படி) இட்டு (செய்து) அருளில் (இறையருளாலே) வளர்ந்து (அந்த ஆசைகளை அனுபவித்து உயிர்கள் வளரும் படி) இட்டு (செய்து)
அருளில் (இறையருளாலே ஆசைகள் தீர்கின்ற நிலையில்) இழிந்து (ஆசைகளை குறையும் படி செய்து) இளைப்பு (ஆசைகள் நீங்கிய சோர்வு நிலையை) ஆற்றி (நீக்கி) மறைந்து (உள்ளுக்குள் மறைந்து இருக்கின்ற இறை சக்தியை) இட்டு (வெளிப்படும் படி செய்து)
அருள் (இறையருளால்) ஆன (கிடைக்கின்ற) ஆனந்தத்து (பேரானந்தத்தை அனுபவிக்க வைத்து) ஆர் (தெகிட்டாத) அமுது (அமிழ்தத்தை) ஊட்டி (ஊட்டிக் கொடுத்து)
அருள் (இறையருள்) ஆல் (ஆகவே) என் (எமது) நந்தி (குருநாதராகிய இறைவன்) அகம் (எமக்குள்) புகுந்தானே (புகுந்தார்).

விளக்கம்:

இறைவன் தமது திருவருளாலே உயிர்களை அவர்களின் ஆசைகளுக்கு ஏற்ற பிறவி எடுக்கும் படி செய்து, இறையருளாலே அந்த ஆசைகளை அனுபவித்து உயிர்கள் வளரும் படி செய்து, இறையருளாலே ஆசைகள் தீர்கின்ற நிலையில் ஆசைகளை குறையும் படி செய்து, ஆசைகள் நீங்கிய சோர்வு நிலையை நீக்கி, உள்ளுக்குள் மறைந்து இருக்கின்ற இறை சக்தியை வெளிப்படும் படி செய்து, இறையருளால் கிடைக்கின்ற பேரானந்தத்தை அனுபவிக்க வைத்து, தெகிட்டாத அமிழ்தத்தை ஊட்டிக் கொடுத்து, இறையருள் ஆகவே எமது குருநாதராகிய இறைவன் எமக்குள் புகுந்தார்.

பாடல் #1799

பாடல் #1799: ஏழாம் தந்திரம் – 9. திருவருள் வைப்பு (இறைவன் கொடுத்த அருளை காப்பாற்றுதல்)

அறிவி லணுக வறிவது நல்கிப்
பொறிவழி யாசை புகுத்திப் புணர்த்தி
யறிவது வாக்கி லருளது நல்குஞ்
செறிவோடு நின்றார் சிவமாயி னாரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அறிவி லணுக வறிவது நலகிப
பொறிவழி யாசை புகுததிப புணரததி
யறிவது வாககி லருளது நலகுஞ
செறிவொடு நினறார சிவமாயி னாரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அறிவில் அணுக அறிவு அது நல்கி
பொறி வழி ஆசை புகுத்தி புணர்த்தி
அறிவு அது ஆக்கில் அருள் அது நல்கும்
செறிவோடு நின்றார் சிவம் ஆயினாரே.

பதப்பொருள்:

அறிவில் (ஞானத்தின் மூலம்) அணுக (இறைவனை அடைவதற்கு) அறிவு (தேவையான அறிவை) அது (உள்ளுக்குள்ளே குருநாதராக இருக்கின்ற இறைவன்) நல்கி (கொடுத்து)
பொறி (உடலில் உள்ள ஐந்து விதமான புலன்களின்) வழி (வழியே) ஆசை (பல விதமான ஆசைகளை) புகுத்தி (உடலுக்குள் புகுத்தி) புணர்த்தி (அந்த உடலோடு தாமும் கலந்து நின்று அந்த ஆசைகளை அனுபவிக்கச் செய்து)
அறிவு (ஆசைகள் தீர்ந்த நிலையில் அவற்றிற்கு மேலான) அது (ஞானத்தை) ஆக்கில் (உயிர்கள் பெற்றுவிட்டால்) அருள் (அதன் பலனாக திருவருளை) அது (உள்ளுக்குள் இருக்கின்ற இறைவனே) நல்கும் (கொடுத்து)
செறிவோடு (அந்த அருளில் உச்ச நிலையை அடைந்து) நின்றார் (நிற்கின்ற அடியவர்கள்) சிவம் (சிவமாகவே) ஆயினாரே (ஆகி விடுவார்கள்).

விளக்கம்:

ஞானத்தின் மூலம் இறைவனை அடைவதற்கு தேவையான அறிவை உள்ளுக்குள்ளே குருநாதராக இருக்கின்ற இறைவன் கொடுத்து, உடலில் உள்ள ஐந்து விதமான புலன்களின் வழியே பல விதமான ஆசைகளை உடலுக்குள் புகுத்தி, அந்த உடலோடு தாமும் கலந்து நின்று அந்த ஆசைகளை அனுபவிக்கச் செய்து, ஆசைகள் தீர்ந்த நிலையில் அவற்றிற்கு மேலான ஞானத்தை உயிர்கள் பெற்றுவிட்டால் அதன் பலனாக திருவருளை உள்ளுக்குள் இருக்கின்ற இறைவனே கொடுப்பான். அப்படி இறைவன் கொடுத்த அருளில் உச்ச நிலையை அடைந்து நிற்கின்ற அடியவர்கள் சிவமாகவே ஆகி விடுவார்கள்.

பாடல் #1798

பாடல் #1798: ஏழாம் தந்திரம் – 9. திருவருள் வைப்பு (இறைவன் கொடுத்த அருளை காப்பாற்றுதல்)

அருளெங் குமான வளவை யறியா
ரருளை நுகரா ரமுத முகந்தோ
ரருளைங் கருமத் ததிசூக்க முன்னா
ரருளெங் குங்கண்ணான தாரறி வாரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அருளெங குமான வளவை யறியா
ரருளை நுகரா ரமுத முகநதொ
ரருளைங கருமத ததிசூகக முனனா
ரருளெங குஙகணணான தாரறி வாரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அருள் எங்கும் ஆன அளவை அறியார்
அருளை நுகரார் அமுதம் உகந்தோர்
அருள் ஐங் கருமத்து அதி சூக்கம் உன்னார்
அருள் எங்கும் கண் ஆனது ஆர் அறிவாரே.

பதப்பொருள்:

அருள் (இறையருளே) எங்கும் (அண்டசராசரங்கள் எங்கும் மற்றும் உலக வாழ்க்கையின் அனைத்து செயல்களிலும்) ஆன (வியாபித்து இருக்கின்ற) அளவை (அளவை) அறியார் (யாரும் அறிவதில்லை)
அருளை (இறையருளை) நுகரார் (அனுபவிக்காதவர்கள்) அமுதம் (அதன் மூலமே கிடைக்கக் கூடிய அமிழ்தத்தை) உகந்தோர் (மட்டும் அருந்த விரும்புகின்றார்கள்)
அருள் (இறையருளே) ஐங் (ஐந்து விதமான) கருமத்து (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய தொழில்களின்) அதி (மிக) சூக்கம் (நுண்ணியமான மூல சக்தியாகவும் இயக்க சக்தியாகவும் இருப்பதை) உன்னார் (நினைத்து பார்க்காமல் இருக்கின்றார்கள்)
அருள் (இறையருளே) எங்கும் (அனைத்தையும்) கண் (பார்க்கின்ற கண்கள்) ஆனது (ஆகவும் இருப்பதை) ஆர் (யாரும்) அறிவாரே (அறியாமல் இருக்கின்றார்கள்).

விளக்கம்:

இறையருளே அண்டசராசரங்கள் எங்கும் மற்றும் உலக வாழ்க்கையின் அனைத்து செயல்களிலும் வியாபித்து இருக்கின்ற அளவை யாரும் அறிவதில்லை. இறையருளை அனுபவிக்காதவர்கள் அதன் மூலமே கிடைக்கக் கூடிய அமிழ்தத்தை மட்டும் அருந்த விரும்புகின்றார்கள். இறையருளே படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து விதமான தொழில்களின் மிக நுண்ணியமான மூல சக்தியாகவும் இயக்க சக்தியாகவும் இருப்பதை நினைத்து பார்க்காமல் இருக்கின்றார்கள். இறையருளே அனைத்தையும் பார்க்கின்ற கண்களாகவும் இருப்பதை யாரும் அறியாமல் இருக்கின்றார்கள்.

பாடல் #1797

பாடல் #1797: ஏழாம் தந்திரம் – 9. திருவருள் வைப்பு (இறைவன் கொடுத்த அருளை காப்பாற்றுதல்)

நானறிந் தன்றே யிருக்கின்ற வீசனை
வானறிந் தாரறி யாது மயங்கின
ரூனறிந் துள்ளே யுயிர்க்கின்ற வொண்சுடர்
தானறி யானை பின்னையாரறி வாரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நானறிந தனறெ யிருககினற வீசனை
வானறிந தாரறி யாது மயஙகின
ரூனறிந துளளெ யுயிரககினற வொணசுடர
தானறி யானை பினனையாரறி வாரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நான் அறிந்து அன்றே இருக்கின்ற ஈசனை
வான் அறிந்தார் அறியாது மயங்கினர்
ஊன் அறிந்து உள்ளே உயிர்க்கின்ற ஒண் சுடர்
தான் அறியானை பின்னை யார் அறிவாரே.

பதப்பொருள்:

நான் (எமக்குள்ளே யான் ஆராய்ந்து) அறிந்து (அறிந்து கொண்டவனாகிய) அன்றே (உயிர்கள் பிறவி எடுக்கின்ற அன்றே) இருக்கின்ற (அதற்குள் மறைந்து நிற்கின்ற) ஈசனை (இறைவனை)
வான் (வானுலகத்து தேவர்களும்) அறிந்தார் (இறைவன் இருப்பதை அறிந்து கொண்டாலும்) அறியாது (அவனின் உண்மையான தன்மை எதுவென்று அறியாமல்) மயங்கினர் (நான் என்கின்ற ஆணவத்தில் மயங்கி நிற்கின்றார்கள்)
ஊன் (நான் என்கின்ற உடம்பு எது என்று) அறிந்து (அறிந்து கொண்டு) உள்ளே (அதற்கு உள்ளே) உயிர்க்கின்ற (உயிராக) ஒண் (ஒன்றி இருக்கின்ற) சுடர் (ஒளி வடிவான இறைவனை)
தான் (தமக்குள்ளே ஆராய்ந்து) அறியானை (தனது வாழ்நாள் காலத்திலேயே அறிந்து கொள்ளாதவன்) பின்னை (உயிர் போன பின்பு) யார் (எப்படி) அறிவாரே (அறிந்து கொள்ளப் போகின்றான்?).

விளக்கம்:

எமக்குள்ளே யான் ஆராய்ந்து அறிந்து கொண்ட இறைவனே உயிர்கள் பிறவி எடுக்கின்ற அன்றே அதற்குள் மறைந்து நிற்கின்றான். வானுலகத்து தேவர்களும் அந்த இறைவன் இருப்பதை அறிந்து கொண்டாலும் அவனின் உண்மையான தன்மை எதுவென்று அறியாமல் நான் என்கின்ற ஆணவத்தில் மயங்கி நிற்கின்றார்கள். நான் என்கின்ற உடம்பு எது என்று அறிந்து கொண்டு அதற்கு உள்ளே உயிராக ஒன்றி இருக்கின்ற ஒளி வடிவான இறைவனை தமக்குள்ளே ஆராய்ந்து தனது வாழ்நாள் காலத்திலேயே அறிந்து கொள்ளாதவன், உயிர் போன பின்பு எப்படி அறிந்து கொள்ளப் போகின்றான்?

பாடல் #1792

பாடல் #1792: ஏழாம் தந்திரம் – 9. திருவருள் வைப்பு (இறைவன் கொடுத்த அருளை காப்பாற்றுதல்)

பொருள் பேதமீச னிரவும் பகலு
முருவது வாவ துடலு முயிரு
மருளது வாவ தறமுந் தவமும்
பொருளது வுண்ணின்ற போகம தாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பொருள பெதமீச னிரவும பகலு
முருவது வாவ துடலு முயிரு
மருளது வாவ தறமுந தவமும
பொருளது வுணணினற பொகம தாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பொருள் பேதம் ஈசன் இரவும் பகலும்
உரு அது ஆவது உடலும் உயிரும்
அருள் அது ஆவது அறமும் தவமும்
பொருள் அது உள் நின்ற போகம் அது ஆமே.

பதப்பொருள்:

பொருள் (மாயையாகிய உலகத்தில் பொருளாக) பேதம் (பிரித்து அறிந்து கொள்ள) ஈசன் (இறைவன் அருளியது) இரவும் (இரவும்) பகலும் (பகலுமாகிய இரண்டு நிலைகளே ஆகும்)
உரு (அதை அனுபவிக்கின்ற உருவம்) அது (அது) ஆவது (ஆக இருப்பது) உடலும் (இறைவன் அருளிய உடலும்) உயிரும் (அதற்குள் இருக்கின்ற உயிரும் ஆகும்)
அருள் (இறைவன் கொடுக்கின்ற திருவருள்) அது (அது) ஆவது (ஆக இருப்பது) அறமும் (அடியவர்கள் கடைபிடிக்கின்ற தர்மங்களும்) தவமும் (மேற்கொள்ளுகின்ற தவங்களும் ஆகும்)
பொருள் (உண்மைப் பொருள்) அது (அது ஆக இருப்பது) உள் (அடியவருக்குள்) நின்ற (இறையருளாக நிற்கின்ற) போகம் (பேரின்பம்) அது (அதுவே) ஆமே (ஆகும்).

விளக்கம்:

மாயையாகிய உலகத்தில் பொருளாக பிரித்து அறிந்து கொள்ள இறைவன் அருளியது இரவும் பகலுமாகிய இரண்டு நிலைகளே ஆகும். அதை வினைகளுக்கு ஏற்ப அனுபவிக்கின்ற உருவமாக இருப்பது இறைவன் அருளிய உடலும் அதற்குள் இருக்கின்ற உயிரும் ஆகும். அப்படி வினைகளை அனுபவித்துக் கொண்டு இருந்தாலும் இறையருளால் உள்ளுக்குள் உணர்த்தப்பட்ட தர்மத்தை முறைப்படி கடை பிடிக்கின்றவர்களுக்கு அந்த தர்மத்தின் பலனும் அவர்கள் மேற்கொண்ட தவத்தின் பலனுமே இறைவன் கொடுக்கின்ற திருவருளாக இருக்கின்றது. அந்த திருவருளே உண்மைப் பொருளாக அடியவருக்குள் நிற்கின்ற பேரின்பம் ஆகும்.

பாடல் #1793

பாடல் #1793: ஏழாம் தந்திரம் – 9. திருவருள் வைப்பு (இறைவன் கொடுத்த அருளை காப்பாற்றுதல்)

காண்டற் கரியன் கருத்தில னந்தியுந்
தீண்டற்குஞ் சார்தற்குஞ் சேயனாதந் தோன்றிடும்
வேண்டிக் கிடந்து விளக்கொளி யாய்நேச
மீண்டிக் கிடந்தங்கு இருளறு மாறே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

காணடற கரியன கருததில னநதியுந
தீணடறகுஞ சாரதறகுஞ செயனாதந தொனறிடும
வெணடிக கிடநது விளககொளி யாயநெச
மீணடிக கிடநதஙகு இருளறு மாறெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

காண்டற்கு அரியன் கருத்து இலன் நந்தியும்
தீண்டற்கும் சார்தற்கும் சேயன் நாதம் தோன்றிடும்
வேண்டி கிடந்து விளக்கு ஒளி ஆய் நேசம்
ஈண்டி கிடந்து அங்கு இருள் அறும் ஆறே.

பதப்பொருள்:

காண்டற்கு (கண்களால் பார்த்து அறிந்து கொள்ளுவதற்கு) அரியன் (மிகவும் கடினமானவன்) கருத்து (எண்ணங்களால் யோசித்து பார்த்து அறிந்து கொள்ள) இலன் (முடியாதவன்) நந்தியும் (உள்ளுக்குள் குருநாதனாக இருந்து வழிகாட்டுகின்ற இறைவன்)
தீண்டற்கும் (வெளியில் தீண்டி பார்ப்பதற்கும்) சார்தற்கும் (பற்றிக் கொண்டு இருப்பதற்கும்) சேயன் (முடியாதபடி தொலைவில் இருக்கின்றவன்) நாதம் (உள்ளுக்குள்ளே நாதமாக) தோன்றிடும் (தோன்றுபவன்)
வேண்டி (அவன் மட்டுமே வேண்டும் என்று வேண்டி) கிடந்து (கிடக்கின்ற அடியவர்களுக்கு) விளக்கு (உள்ளுக்குள் விளக்கில் இருக்கின்ற) ஒளி (ஜோதி) ஆய் (ஆகிய) நேசம் (அன்பின் வடிவமாக வருகின்றவன்)
ஈண்டி (திருவளாகிய இவற்றை பெற்றுக் கொண்டு) கிடந்து (அதிலேயே கிடக்கும் போது) அங்கு (அடியவரின் உள்ளுக்குள் இருக்கின்ற) இருள் (அனைத்து விதமான மலங்களும்) அறும் (நீங்கிப் போய்விடும்) ஆறே (வழியாக அதுவே இருக்கும்).

விளக்கம்:

கண்களால் பார்த்து அறிந்து கொள்ளுவதற்கு மிகவும் கடினமானவன், எண்ணங்களால் யோசித்து பார்த்து அறிந்து கொள்ள முடியாதவன், உள்ளுக்குள் குருநாதனாக இருந்து வழிகாட்டுகின்ற இறைவன், வெளியில் தீண்டி பார்ப்பதற்கும் பற்றிக் கொண்டு இருப்பதற்கும் முடியாதபடி தொலைவில் இருக்கின்றவன், உள்ளுக்குள்ளே நாதமாக தோன்றுபவன், அவன் மட்டுமே வேண்டும் என்று வேண்டி கிடக்கின்ற அடியவர்களுக்கு உள்ளுக்குள் விளக்கில் இருக்கின்ற ஜோதியாகிய அன்பின் வடிவமாக வருகின்றவன். இப்படிப்பட்ட இறைவனின் திருவருளை பெற்றுக் கொண்டு அதிலேயே கிடக்கும் போது அடியவரின் உள்ளுக்குள் இருக்கின்ற அனைத்து விதமான மலங்களும் நீங்கிப் போய்விடும் வழியாக அதுவே இருக்கும்.

பாடல் #1794

பாடல் #1794: ஏழாம் தந்திரம் – 9. திருவருள் வைப்பு (இறைவன் கொடுத்த அருளை காப்பாற்றுதல்)

குறிப்பினி னுள்ளே குவலையந் தோன்றும்
வெறுப்பிரு ணீக்கில் விகிர்தனு நிற்குஞ்
செறிப்புறு சிந்தையைச் சிக்கென நாடி
லறிப்புறு காட்சி யமரரு மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

குறிபபினி னுளளெ குவலையந தொனறும
வெறுபபிரு ணீககில விகிரதனு நிறகுஞ
செறிபபுறு சிநதையைச சிககென நாடி
லறிபபுறு காடசி யமரரு மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

குறிப்பினின் உள்ளே குவலயம் தோன்றும்
வெறுப்பு இருள் நீக்கில் விகிர்தனும் நிற்கும்
செறிப்பு உறு சிந்தையை சிக்கென நாடில்
அறிப்பு உறு காட்சி அமரரும் ஆமே.

பதப்பொருள்:

குறிப்பினின் (உள்ளுக்குள் தோன்றும் ஜோதியாகிய இறைவனையே குறிக்கோளாக கொண்டு தியானிக்கின்ற அடியவர்களின்) உள்ளே (உள்ளே) குவலயம் (அண்ட சராசரங்களும் அதிலுள்ள அனைத்தும்) தோன்றும் (உண்மைப் பொருளாக தோன்றும் அந்த திருவருள் ஜோதியால்)
வெறுப்பு (ஆணவமாகிய) இருள் (மலத்தை) நீக்கில் (நீக்கி விட்டால்) விகிர்தனும் (அனைத்திலும் மாறுபட்டவனாகிய இறைவன்) நிற்கும் (அடியவருக்குள் வந்து நிற்பான்)
செறிப்பு (அந்த இறைவனுக்கு நெருக்கமாக இருப்பதில்) உறு (உறுதியாக நிற்கின்ற) சிந்தையை (சிந்தனையை) சிக்கென (விடாது பற்றிக் கொண்டு) நாடில் (இறைவனை தேடும் போது)
அறிப்பு (உள்ளுக்குள் உணரக்கூடிய) உறு (முழுமையான) காட்சி (திருவருள் காட்சி தோன்றும்) அமரரும் (அதை தரிசித்து தாமும் இறப்பு இல்லாத நிலையை) ஆமே (அடையலாம்).

விளக்கம்:

உள்ளுக்குள் தோன்றும் ஜோதியாகிய இறைவனையே குறிக்கோளாக கொண்டு தியானிக்கின்ற அடியவர்களின் உள்ளே அண்ட சராசரங்களும் அதிலுள்ள அனைத்தும் உண்மைப் பொருளாக தோன்றும். அந்த திருவருள் ஜோதியால் ஆணவமாகிய மலத்தை நீக்கி விட்டால் அனைத்திலும் மாறுபட்டவனாகிய இறைவன் அடியவருக்குள் வந்து நிற்பான். அந்த இறைவனுக்கு நெருக்கமாக இருப்பதில் உறுதியாக நிற்கின்ற சிந்தனையை விடாது பற்றிக் கொண்டு இறைவனை தேடும் போது உள்ளுக்குள் உணரக்கூடிய முழுமையான திருவருள் காட்சி தோன்றும். அதை தரிசித்து தாமும் இறப்பு இல்லாத நிலையை அடையலாம்.