பாடல் #1763: ஏழாம் தந்திரம் – 6. ஞான லிங்கம் (உருவம், அருவம், அருவுருவம் ஆகிய மூன்றுமாக இருக்கின்ற சதாசிவத்தை ஞான இலிங்கமாக உணர்வது)
உருவு மருவு மருவோ டுருவு
மருவும் பரசிவன் மன்பல் லுயிர்க்குக்
குருவு மெனநிற்குங் கொள்கைய னாகுந்
தருவென நல்குஞ் சதாசிவன் தானே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
உருவு மருவு மருவொ டுருவு
மருவும பரசிவன மனபல லுயிரககுக
குருவு மெனநிறகுங கொளகைய னாகுந
தருவென நலகுஞ சதாசிவன றானெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
உருவும் அருவும் அருவோடு உருவும்
அருவும் பர சிவன் மன் பல் உயிர்க்கு
குருவும் என நிற்கும் கொள்கையன் ஆகும்
தரு என நல்கும் சதா சிவன் தானே.
பதப்பொருள்:
உருவும் (உருவமாகவும்) அருவும் (உருவமில்லாத அருவமாகவும்) அருவோடு (அருவத்தோடு நிற்கின்ற) உருவும் (உருவமாகவும் [அருவுருவம் / இலிங்க வடிவம்])
அருவும் (அருவமாக இருக்கின்ற) பர (பரம்பொருளாகிய) சிவன் (சிவம்) மன் (உலகத்தில் உள்ள) பல் (பல விதமான) உயிர்க்கு (உயிர்களுக்கு)
குருவும் (உள்ளுக்குள் இருக்கின்ற குருவும்) என (தாமே என்று) நிற்கும் (நிற்கின்ற) கொள்கையன் (தம்மை அடைவதை கொள்கையாக கொண்ட அடியவர்களுக்கு) ஆகும் (கொள்கையாக உடையவனும் ஆகும்)
தரு (கற்பகத் தரு) என (போல) நல்கும் (அவர்கள் வேண்டிய அனைத்தையும் கொடுத்து அருளுகின்றவனும்) சதா (சதா) சிவன் (சிவப் பரம்பொருள்) தானே (தான்).
விளக்கம்:
அருவமாக இருக்கின்ற பரம்பொருளாகிய சிவமே உருவமாகவும், உருவமில்லாத அருவமாகவும், அருவத்தோடு நிற்கின்ற உருவமாகவும் [அருவுருவம் / இலிங்க வடிவம்], உலகத்தில் உள்ள பல விதமான உயிர்களில் தம்மை அடைவதையே கொள்கையாக கொண்ட அடியவர்களுக்கு உள்ளுக்குள் குருவுமாகவும் நின்று கற்பகத் தரு போல அவர்கள் வேண்டிய அனைத்தையும் கொடுத்து அருளுகின்றான். அவனே சதா சிவப் பரம்பொருள் ஆகும்.