பாடல் #401

பாடல் #401: இரண்டாம் தந்திரம் – 9. சர்வ சிருஷ்டி (அனைத்தும் உருவாகிய முறை)

அளியார் முக்கோணம் வயிந்தவந் தன்னில்
அளியார் திரிபுரை யாம்அவள் தானே
அளியார் சதாசிவ மாகி அமைவாள்
அளியார் கருமங்கள் ஐந்துசெய் வாளே.

விளக்கம்:

பரவிந்து, அபரநாதம், அபரவிந்து எனும் மூன்று முக்கோணம் போன்ற ஒளி ஒலியாகிய அசையும் சக்தியின் மையப்பகுதியில் இருந்து திரிபுரை என்ற பெயருடைய சக்தி தோன்றுவாள். அவளே சதாசிவமூர்த்தியின் தொழிலை செயல்படுத்துவாள். அவளது மாபெரும் கருணையினால் சிவன், மகேசுவரன், உருத்திரன், திருமால், பிரம்மன் ஆகிய ஐந்து மூர்த்திகளின் சக்தியாக உடன் இருந்து அருளல், மறைத்தல், அழித்தல், காத்தல், படைத்தல் ஆகிய ஐந்து தொழில்களையும் செய்வாள்.

பாடல் #402

பாடல் #402: இரண்டாம் தந்திரம் – 9. சர்வ சிருஷ்டி (அனைத்தும் உருவாகிய முறை)

வாரணி கொங்கை மனோன்மணி மங்கலி
காரண காரிய மாகக் கலந்தவள்
வாரணி ஆரணி வானவர் மோகினி
பூரணி போதஅதி போதமு மாமே.

விளக்கம்:

சூரிய சந்திரனை மார்புக் கச்சையாக சூடியிருக்கும் சிவனின் சக்தியான மனோன்மணி மங்கள சொரூபமானவள். அவளே அனைத்திற்கும் காரணமாகிய அசையா சக்தியான இறைவனுடன் அசையும் சக்தியாகவும் உலக காரியங்களை செய்யும் சிவன், மகேசுவரன், உருத்திரன், திருமால், பிரம்மன் ஆகியோருடன் காரிய சக்திகளாகவும் கலந்து நிற்கின்றாள். அவளே ஓங்கார வடிவாகவும் அழிக்கும் தொழிலில் வாரணியாகவும் படைக்கும் தொழிலில் ஆரணியாகவும் காக்கும் தொழிலில் வானவர் கொண்டாடும் மோகினியாகவும், மறைக்கும் தொழிலில் பூரணியாகவும் பேரறிவாக இருக்கின்றாள்.

உட்கருத்து: அசையா சக்தியாகிய இறைவனின் அசையும் சக்தியாகிய இறைவி உலகம் உருவாக வேண்டும் என்கிற காரணத்தில் பேரறிவு ஞானமாக இருந்து அதை செயலாக்கும் பொருட்டு காரிய சக்திகளாக ஐந்து தேவர்களுடன் ஐந்து தேவிகளாக இருந்து அனைத்தையும் செயல்படுத்துகின்றாள்.

காரணம் – இறைவன் (அசையாசக்தி) – இறைவி (அசையும்சக்தி) – அனைத்தும் உருவாக்குதல்
காரியம் – பிரம்மன் – ஆரணி (சரஸ்வதி) – படைத்தல்
காரியம் – திருமால் – மோகினி (இலட்சுமி) – காத்தல்
காரியம் – உருத்திரன் – வாரணி – அழித்தல்
காரியம் – மகேஸ்வரன் – பூரணி (உமா மகேஸ்வரி) – மறைத்தல்
காரியம் – சிவன் – மனோன்மணி (பார்வதி) – அருளல்

பாடல் #403

பாடல் #403: இரண்டாம் தந்திரம் – 9. சர்வ சிருஷ்டி (அனைத்தும் உருவாகிய முறை)

நின்றது தானாய் நிறைந்த மகேசுரன்
சென்றங் கியங்கி அரன்திரு மாலவன்
மன்றது செய்யும் மலர்மிசை மேலயன்
என்றிவ ராக இசைந்துஇருந் தானே.

விளக்கம்:

அசையா சக்தியும் அசையும் சக்தியும் சேர்ந்த ரூபமான அருளல் தொழிலை செய்யும் சிவனின் அம்சம் முழுவதும் நிறைந்து தாமாகவே சதாசிவனிடமிருந்து தோன்றியவர் மறைத்தல் தொழில் செய்யும் மகேஸ்வரன். இவரே காத்தலையும் அழித்தலையும் செய்யும் உருத்திரன் திருமாலின் செயல்களில் இயக்கமாக இருக்கிறார். திருமாலின் தொப்புள் கொடியிலிருந்து வெளி வந்த தாமரை மலரின் மீது உருவானவர் அனைத்தையும் படைக்கும் தொழிலை செய்யும் பிரம்மன் ஆவார். ஆகவே இந்த ஐந்து தேவர்களாகவும் அசையா சக்தியான இறைவன் ஒருவனே ஒவ்வொருவருடனும் ஒவ்வொருவராகக் கலந்து இருக்கின்றான்.

பாடல் #404

பாடல் #404: இரண்டாம் தந்திரம் – 9. சர்வ சிருஷ்டி (அனைத்தும் உருவாகிய முறை)

ஒருவனு மேஉல கேழும் படைத்தான்
ஒருவனு மேஉல கேழும் அளித்தான்
ஒருவனு மேஉல கேழும் துடைத்தான்
ஒருவனு மேஉட லோடுயிர் தானே.

விளக்கம்:

ஏழு உலகங்களையும் படைக்கின்ற பிரம்மனாகவும் ஏழு உலகங்களையும் காக்கின்ற திருமாலாகவும் ஏழு உலகங்களையும் அழிக்கின்ற சிவபெருமானாகவும் இருப்பவன் இறைவன் ஒருவனே. சதாசிவமூர்த்தியாக இருந்து ஒவ்வொரு உயிரின் உடலோடு உயிராக கலந்து இருப்பவனும் இறைவன் ஒருவனே.

பாடல் #405

பாடல் #405: இரண்டாம் தந்திரம் – 9. சர்வ சிருஷ்டி (அனைத்தும் உருவாகிய முறை)

செந்தா மரைவண்ணன் தீவண்ணன் எம்இறை
மஞ்சார் முகில்வண்ணன் மாயஞ்செய் பாசத்துக்
கொந்தார் குழலியர் கூடிய கூட்டத்து
மைந்தார் பிறவியை அமைந்துநின் றானே.

விளக்கம்:

சிவந்த தாமரை மலரின் நிறத்தைப் போன்ற பிரம்மனும் கொழுந்து விட்டு எரியும் தீப் பிழம்பின் நிறத்தைக் கொண்ட எமது இறைவன் சிவபெருமானும் நீர் நிறைந்த மேகங்களைப் போன்ற கருமை நிறம் கொண்ட திருமாலும் சேர்ந்து மாயையால் பாசப்பிணைப்புகளை உண்டாக்கி உயிர்களை மயக்கி பூக்களை தங்களது கூந்தலில் சூடியிருக்கின்ற பெண்கள் கூட்டத்துடன் ஆண்களை கூடுமாறு செய்து அவர்களின் கூடுதலில் பிறவியை அமைத்து நிற்கின்றான் இறைவன்.

பாடல் #406

பாடல் #406: இரண்டாம் தந்திரம் – 9. சர்வ சிருஷ்டி (அனைத்தும் உருவாகிய முறை)

தேடும் திசைஎட்டுஞ் சீவன் உடலுயிர்
கூடும் பிறவிக் குணஞ்செய்த மாநந்தி
ஊடும் அவர்தம துள்ளத்தி னுள்நின்று
நாடும் வழக்கமும் நானுமறிந் தேனே.

விளக்கம்:

உயிர்கள் தேடிப் பார்க்கக்கூடிய எட்டுத் திசைகளிலும் உடலோடு உயிராக ஆன்மா கூடித் தனது வினையின் பயனாக பிறவி எடுக்கும்படி செய்த மாபெரும் குருவான இறைவன் ஆணாகவும் பெண்ணாகவும் பிறவி பெற்ற அந்த உயிர்களின் உள்ளத்துக்குள் நின்று காதல் மயக்கத்தினால் ஒருவரை ஒருவர் நாடிச் சென்று மேலும் பிறவிகளை உருவாக்க காரணமாகவும் இருப்பதை இறைவனது திருவருளால் யான் அறிந்துகொண்டேன்.

பாடல் #407

பாடல் #407: இரண்டாம் தந்திரம் – 9. சர்வ சிருஷ்டி (அனைத்தும் உருவாகிய முறை)

ஓராய மேஉல கேழும் படைப்பதும்
ஓராய மேஉல கேழும் அளிப்பதும்
ஓராய மேஉல கேழும் துடைப்பதும்
ஓராய மேஉட லோடுஉயிர் தானே.

விளக்கம்:

தேவர்கள் உடல் கொண்ட மூர்த்தியாகவும் தேவியர்கள் உயிர்கொண்ட சக்தியாகவும் கூடி நின்று ஏழு உலகங்களையும் படைத்து காத்து அழிக்கின்றனர்.

பாடல் #408

பாடல் #408: இரண்டாம் தந்திரம் – 9. சர்வ சிருஷ்டி (அனைத்தும் உருவாகிய முறை)

நாதன் ஒருவனும் நல்ல இருவரும்
கோது குலத்தொடுங் கூட்டிக் குழைத்தனர்
ஏது பணியென் றிசையும் இவர்கட்கு
ஆதி இவனேதான் அருளுகின் றானே.

விளக்கம்:

அனைத்திற்கும் தலைவனாகிய சிவம் ஒருவனும் அவனிடமிருந்து நன்மை புரியத் தோன்றிய சிவன் சக்தியாகிய இருவரும் சேர்ந்து அசுத்த மாயையில் பிறக்கும் மனித பிறப்பினரோடு சுத்தமாயையை கூட்டிச் சேர்த்து தேவர்களைப் படைத்தனர். இந்த தேவர்கள் இறைவனிடம் வந்து எங்களுக்கு இடும் பணி என்ன என்று கேட்டுப் பெற்று அப்படியே செய்வதாக ஏற்றுக்கொண்டு அதை செயல் படுத்துகின்றனர். இந்த தேவர்கள் அனைவருக்கும் தத்தமது பணிகளை கருணையால் அருளுபவன் ஆதியிலிருந்தே இருக்கின்ற இறைவன் ஆவான்.

உட்கருத்து:

தேவர்கள் அனைவருமே முதலில் மனிதர்களாகப் பிறந்து பிறகு தவம் செய்து இறைவனிடம் தமக்கு கொடுக்கும் வேலைகளைக் கேட்டு அவனது அருளால் பெற்று அதை நடத்துபவர்களாகும். இதை 302, 380, 398 பாடல்களின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

பாடல் #409

பாடல் #409: இரண்டாம் தந்திரம் – 9. சர்வ சிருஷ்டி (அனைத்தும் உருவாகிய முறை)

அப்பரி செண்பத்து நான்குநூ றாயிரம்
மெய்ப்பரி செய்தி விரிந்துயி ராய்நிற்கும்
அப்பரி சேதென்று புகலும் மனிதர்
அப்பரி சேஇருளாய் மூடிநின் றாரே.

விளக்கம்:

இறைவன் உலகத்தில் பரிசாகக் கொடுத்தது என்பத்து நான்கு இலட்சம் வகை உயிரினங்களாகும். இந்த அனைத்து உயிர்களிலும் உண்மையான பரிசாக அவற்றுடன் கலந்து உயிராக நிற்பது இறைவனே ஆகும். ஆனால் இறைவனை தமக்குள் அறியாமல் ஆணவத்தால் அவன் எங்கே இருக்கின்றான் என்று கேட்கும் மனிதர்களை மாயை என்னும் ஆணவ இருளாய் உயிர்களுக்கு பரிசாய் இருக்கும் இறைவனே மூடியிருகின்றான்.

பாடல் #410

பாடல் #410: இரண்டாம் தந்திரம் – 9. சர்வ சிருஷ்டி (அனைத்தும் உருவாகிய முறை)

ஆதித்தன் சந்திரன் அங்கி எண்பாலர்கள்
போதித்த வானொலி பொங்கெரி நீர்புவி
வாதித்த சத்தாதி வாக்கு மனாதிகள்
ஓதுற்ற மாயையின் விந்துவின் உற்றதே.

விளக்கம்:

சூரியன், சந்திரன் மற்றும் அக்கினி, இந்திரன், இயமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகிய எட்டுத்திசைகளுக்கான காவலர்களும் போதனை செய்யும் ஆகாயம், ஒலியை பரப்பும் காற்று, சுட்டெரிக்கும் நெருப்பு, நீர் இருக்கும் பூமி ஆகிய பஞ்ச பூதங்களும், கேட்டல், ருசித்தல், முகர்தல், பார்த்தல், உணர்தல் ஆகிய ஐந்து ஞானேந்திரியங்களும் வாக்கு, கைகள், கால்கள், உடல்கழிவுகளை வெளியே தள்ளும் உறுப்புகள் பிறப்புறுப்புக்கள் ஆகிய ஐந்து கர்மேந்திரியங்களும். செயல், புத்தி, சித்தம், அஹங்காரம் என நான்கு அந்தக்கரணங்கள் இவை அனைத்தும் அசையா சக்தி அசையும் சக்தியினால் தோன்றிய சுத்தமாயை அசுத்த மாயையில் இருந்து தோன்றியவையாகும்.