பாடல் #381

பாடல் #381: இரண்டாம் தந்திரம் – 9. சர்வசிருஷ்டி (அண்டங்கள் அனைத்தும் உருவாகிய முறை)

ஆதியோ டந்தம் இலாத பராபரம்
போதம தாகப் புணரும் பராபரை
சோதி யதனிற் பரந்தோன்றத் தோன்றுமாந்
தீதில் பரையதன் பால்திகழ் நாதமே.

விளக்கம்:

முதலும் முடிவும் இல்லாத பரம்பொருள் அசையா சக்தியாகிய பராபரமாக இருக்கிறார். அறிவு வடிவாக இருக்கும் அந்த பராபரத்தில் உலகை படைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதும் அசையும் சக்தியாகிய பராபரை உருவாகிறது. அசையும் சக்தி உருவானதும் அதிலிருந்து சோதி உருவாகிறது. அந்த சோதியில் இருந்து ஒலி உருவாகிறது.

பாடல் #382

பாடல் #382: இரண்டாம் தந்திரம் – 9. சர்வ சிருஷ்டி (அண்டங்கள் அனைத்தும் உருவாகிய முறை)

நாதத்தில் விந்துவும் நாதவிந் துக்களில்
தீதற் றகம்வந்த சிவன்சத்தி என்றே
பேதித்து ஞானங் கிரியை பிறத்தலால்
வாதித்த விச்சையில் வந்தெழும் விந்துவே.

விளக்கம்:

பாடல் #381 இல் உள்ளபடி பராபரையாகிய எண்ணத்தில் சுத்தமான ஒலியும் ஒளியும் இருக்கிறது. அந்த சுத்தமான ஒலி ஒளிக்கு சிவன் சக்தி என்று பெயர். அந்த பராபரையாகிய எண்ணம் ஒலி ஒளி என்று பிரிந்து இருப்பதற்கு காரணம் அசையாத அறிவு சக்தியில் இருந்து உலகை உருவாக்கும் செயல் சக்தி பிறப்பதற்காக. அசையாத அறிவு சக்தியில் அசைகின்ற எண்ண சக்தி கலக்க ஒலியும் ஒளியும் தோன்றுகிறது.

பாடல் #383

பாடல் #383: இரண்டாம் தந்திரம் – 9. சர்வ சிருஷ்டி ( அண்டங்கள் அனைத்தும் உருவாகிய முறை)

இல்லது சத்தி இடந்தனில் உண்டாகிக்
கல்லொளி போலக் கலந்துள் இருந்திடும்
வல்லது ஆக வழிசெய்த அப்பொருள்
சொல்லது சொல்லிடில் தூராதி தூரமே.

விளக்கம்:

ஒலியாய் இருக்கும் சிவத்தோடு எப்போதும் பிரியாமல் ஒளியாய் இருக்கும் சக்தி சேர்ந்தே இருக்கிறது. நவரத்தினத்தில் உள்ள வைரமும் அந்த வைரத்தில் இருந்து வரும் ஒளியும் வேறு வேறாய் அறியப்பட்டாலும் இரண்டும் ஒன்றே ஆகும். அது போல் சிவமும் சக்தியும் ஒன்றேவாகும். இப்படி இருக்கின்ற சிவசக்தியை உருவாக்கிய பரம்பொருளின் வலிமைகளை விளக்கிச் சொல்லினால் அது பலகாத தூரத்திற்கும் நீண்டு போய்க்கொண்டே இருக்குமே தவிர முடியாது.

பாடல் #384

பாடல் #384: இரண்டாம் தந்திரம் – 9. சர்வ சிருஷ்டி (அண்டங்கள் அனைத்தும் உருவாகிய முறை)

தூரத்திற் சோதி தொடர்ந்தொரு சத்தியாய்
ஆர்வத்து நாதம் அணைந்தொரு விந்துவாய்
பாரச் சதாசிவம் பார்முதல் ஐந்துக்கும்
சார்வத்துச் சத்திஒரு சாத்துமா னாமே.

விளக்கம்:

வார்த்தைகளில் விவரிக்க இயலாத மாபெரும் வல்லமை பொருந்திய ஜோதி வடிவான இறைவன் அண்டம் முதல் அனைத்தையும் உருவாக்க எண்ணி தனது ஒரு கூறு சக்தியை சேர்ந்தே இருக்கும் ஒலிக்கும் ஒளிக்கும் கொடுத்து பஞ்ச பூதங்கள் முதல் உலகம் வரை அனைத்தையும் உருவாக்குகின்றான்.

பாடல் #385

பாடல் #385: இரண்டாம் தந்திரம் – 9. சர்வ சிருஷ்டி (அனைத்தும் உருவாகிய முறை)

மானின்கண் வானாகி வாயு வளர்ந்திடும்
கானின்கண் நீரும் கலந்து கடினமாய்த்
தேனின்கண் ஐந்துஞ் செறிந்தைந்து பூதமாய்ப்
பூவின்கண் நின்று பொருந்தும் புவனமே.

விளக்கம்:

ஜோதி வடிவான இறைவனின் மாபெரும் சக்தியிலிருந்து ஒளியும் ஓலியும் தோன்றி இரண்டும் கலந்து அதிலிருந்து ஆகாயம் உருவாகியது. ஆகாயத்திலிருந்து காற்று உருவாகியது. காற்றிலிருந்து வெப்பம் (நெருப்பு) உருவாகியது. வெப்பம் குளிர்ந்து நீர் உருவாகியது. இவை நான்கும் கலந்து நிலம் உருவாகியது. இவை ஐந்தும் முழுமையடைந்து உலகம் உருவாகியது. பூவுக்குள் கலந்திருக்கும் தேன் போல உலகங்களில் பஞ்சபூதங்களான ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், நிலம் கலந்திருக்கிறது.

Related image

பாடல் #386

பாடல் #386: இரண்டாம் தந்திரம் – 9. சர்வ சிருஷ்டி (அனைத்தும் உருவாகிய முறை)

புவனம் படைப்பான் ஒருவன் ஒருத்தி
புவனம் படைப்பார்க்குப் புத்திரர் ஐவர்
புவனம் படைப்பானும் பூமிசை யானாய்
புவனம் படைப்பானப் புண்ணியன் தானே.

விளக்கம்:

உலகங்களைப் படைப்பது ஒலியாகிய சிவமும் ஒளியாகிய சக்தியுமாகும். அந்த உலகங்களில் பல தொழில்களைப் புரிவதற்காக இவர்களின் சக்தியிலிருந்து தோன்றிய பிள்ளைகள் ஐந்து பேர். அவர்கள் உயிர்களைப் படைக்கும் பிரம்மன் உயிர்களைக் காக்கும் திருமால் உயிர்களை அழிக்கும் உருத்திரன் உயிர்களை மாயையால் மறைக்கும் மகேசுவரன் உயிர்களுக்கு அருளும் சதாசிவன் ஆகிய ஐந்து பேராவார்கள். அனைத்தையும் படைப்பதற்குக் காரணமான சதாசிவமூர்த்தியே ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை மலரில் வீற்றிருந்து உலகங்கள் அனைத்துமாகவும் அதிலிருக்கும் உயிர்கள் அனைத்துமாகவும் இருக்கின்றான்.

பாடல் #387

பாடல் #387: இரண்டாம் தந்திரம் – 9. சர்வ சிருஷ்டி (அனைத்தும் உருவாகிய முறை)

புண்ணியன் நந்தி பொருந்தி உலகெங்கும்
தண்ணிய மானை வளர்த்திடும் சத்தியும்
கண்ணியல் பாகக் கலவி முழுதுமாய்
மண்ணியல் பாக மலர்ந்தெழு பூவிலே.

விளக்கம்:

குளிர்ந்த நீரையும் மண்ணையும் படைத்து அதற்கான தன்மைகளை குருவாக இருந்து சதாசிவமூர்த்தி கொடுக்கின்றார். அதன் மூலம் நல்வினைகளை அருளி சதாசிவமூர்த்தியுடன் ஒன்றாகச் சேர்ந்து உலகங்கள் அனைத்திலும் நீரையும் மண்ணையும் சக்தி வளர்க்கின்றாள். சதாசிவமூர்த்தியின் அசையும் சக்தியான எண்ணத்திலே உதித்த கருத்தானது சிவத்துடன் கலந்து மண்ணாகவும் சக்தியோடு கலந்து நீராகவும் இரண்டும் கலந்து உலகங்களாகவும் மாறுகின்றது. இதில் சிவமும் சக்தியும் மலரில் கலந்திருக்கும் வாசனை போல உலகமெங்கும் ஒன்றாகக் கலந்தே இருக்கின்றனர்.

பாடல் #388

பாடல் #388: இரண்டாம் தந்திரம் – 9. சர்வ சிருஷ்டி (அனைத்தும் உருவாகிய முறை)

நீரகத் தின்பம் பிறக்கும் நெருப்பிடை
காயத்திற் சோதி பிறக்கும்அக் காற்றிடை
ஓர்வுடை நல்லுயிர்ப் பாதம் ஒலிசத்தி
நீரிடை மண்ணின் நிலைப்பிறப்பு ஆமே.

விளக்கம்:

இறைவனது தன்மையானது பஞ்ச பூதங்களில் நீரில் சுவையாகவும் நெருப்பில் ஒளியாகவும் காற்றில் உணர்வாகவும் ஆகாயத்தில் ஒலியாகவும் நிலத்தில் உடல் சார்ந்த உயிர்களாகவும் பிறந்து இருக்கின்றது.

உட்கருத்து: பஞ்ச பூதங்கள் ஐந்தும் இறைவனது பண்புகளில் இருந்து உருவானவையே. உலகங்கள் அனைத்தும் இவற்றில் அடக்கம்.

பாடல் #389

பாடல் #389: இரண்டாம் தந்திரம் – 9. சர்வ சிருஷ்டி (அனைத்தும் உருவாகிய முறை)

உண்டுல கேழும் உமிழ்ந்தான் உடனாகி
அண்டத் தமரர் தலைவனும் ஆதியும்
கண்டச் சதுமுகக் காரணன் தன்னொடும்
பண்டுஇவ் வுலகம் படைக்கும் பொருளே.

விளக்கம்:

ஏழு உலகங்களையும் காப்பாற்றி பிறகு வெளிப்படுத்திய திருமால் அண்டங்கள் அனைத்திலும் இருக்கின்ற தேவர்களின் தலைவனாகவும் ஆதிமூல நாயகனாகவும் விளங்குகின்ற சிவபெருமான் கர்வத்தினால் தனது ஐந்து தலைகளில் ஒன்றை இறைவனால் கொய்யப்பட்டு நான்கு முகங்களை மட்டுமே கொண்டவனாகிய பிரம்மன் ஆகிய இந்த மூவருடனும் கலந்து இருந்து பழமை வாய்ந்த இந்த உலகங்கள் அனைத்தையும் படைக்கும் பரம்பொருள் சதாசிவமூர்த்தி ஒருவனே ஆவான்.

பாடல் #390

பாடல் #390: இரண்டாம் தந்திரம் – 9. சர்வ சிருஷ்டி (அனைத்தும் உருவாகிய முறை)

ஓங்கு பெருங்கடல் உள்ளுறு வானொடும்
பாங்குஆர் கயிலைப் பராபரன் தானும்
வீங்குங் கமல மலர்மிசை மேலயன்
ஆங்குஉயிர் வைக்கும் அதுவுணர்ந் தானே.

விளக்கம்:

ஓங்கிய பாற்கடலின் மேல் இருக்கும் திருமாலும் அழகிய கயிலை மலையின் மேல் இருக்கும் பரம்பொருளான சிவபெருமானும் மலர்ந்து விரிந்து இருக்கின்ற தாமரை மலரின் மேல் இருக்கும் பிரம்மனும் ஒவ்வொரு உயிருக்குள்ளும் ஆன்மாவை வைக்கின்ற மூலப் பொருளான சதாசிவமூர்த்தியை உணர்ந்து இருக்கின்றார்கள்.

உட்கருத்து: பிரம்மன் படைத்தலும், திருமால் காத்தலும், சிவன் அழித்தலும் செய்யும் உயிர்கள் அனைத்திலும் ஆன்மாவாக இருப்பது சதாசிவமூர்த்தியே என்பதை மூவரும் உணர்ந்திருக்கின்றார்கள்.

Related image