பாடல் #362

பாடல் #362: இரண்டாம் தந்திரம் -5 பிரளயம்

கருவரை மூடிக் கலந்தெழும் வெள்ளத்
திருவருங் கோவென் றிகல இறைவன்
ஒருவனும் நீருற ஓங்கொளி யாகி
அருவரை யாய்நின் றருள் புரிந் தானே.

விளக்கம்:

பிரளய வெள்ளத்தில் பெரிய மலைகளும் நீரில் மூழ்கின. உலகெங்கும் படைத்தல் தொழில் நின்றது. அந்நேரத்தில் பிரமனும் திருமாலும் தங்கள் கடமையை செய்யாமல் யாமே தலைவர் என்று ஒருவருக்கொருவர் மாறுபட்டு கூறிக்கொண்டனர். சதாசிவமூர்த்தியான இறைவன் பேரொளி மிகுந்த நெருப்பு மலையாக நின்று வெள்ள நீரெல்லாம் வற்றச் செய்தான். சதாசிவமூர்த்தியின் ஆற்றலைக் கண்ட பிரமனும் திருமாலும் தலைவன் யார் என்பதை உணர்ந்தார்கள். தம் தவற்றை உணர்ந்த அவர்களுக்கு சதாசிவமூர்த்தி நெருப்பு மலையாக நின்று அருள் செய்தார்.

Related image

பாடல் #363

பாடல் #363: இரண்டாம் தந்திரம் -5 பிரளயம்

அலைகடல் ஊடறுத் தண்டத்து வானோர்
தலைவன் எனும்பெயர் தான்றலை மேற்கொண்
டுலகார் அழலைக்கண் டுள்வீழா தோடி
அலைவாயில் வீழாமல் அஞ்சலென் றானே.

விளக்கம்

பாடல் #362ல் உள்ளபடி பேரோளி மிகுந்த நெருப்பு மலையாக இருந்த சதாசிவமூர்த்தி கடலை உடுறுவி கீழையும் வானத்தை ஊடுறுவி மேலேயும் இருந்து வானவர்கள் அனைவருக்கும் தலைவன் என்னும் பெயர் பெற்று உலகம் முழுவதும் நிறைந்த ஊழித்தீயில் உலக மக்கள் நெருப்புப் பிழம்பைப் பார்த்துப் பயந்து வெள்ள நீரில் விழுந்து விடாதபடிக்கு யாரும் அஞ்சாதீர்கள் என்று கூறி அருள் செய்தான்.

Related image

பாடல் #364

பாடல் #364: இரண்டாம் தந்திரம் -5 பிரளயம்

தண்கடல் விட்ட தமரருந் தேவரும்
எண்கடல் சூழெம் பிரானென் றிறைஞ்சுவர்
விண்கடல் செய்தவர் மேலெழுந் தப்புறங்
கண்கடல் செய்யுங் கருத்துஅறி யாரே.

விளக்கம்

உலகம் முழுவதும் நிறைந்து இருந்த குளிர்ந்த பிரளய கடல் நீர் வடிந்தது. வானகத்தவர்களும் தேவர்களும் கடல் போன்ற எங்கள் எண்ணங்களில் சிவத்தைப் பற்றிய நினைவே வெள்ளம் போல சூழ்ந்து இருக்க வேண்டும் என்று வேண்டினார்கள். கடல்நீரை விண்ணகம் வரை பரவச் செய்த இறைவனும் கடைக்கண் பார்வையால் அருள் புரிந்து பேரொளியாய் எழுந்தருளினன். இத்தகைய பிரளயத்தை ஏற்படுத்தி பின்பு அனைவருக்கும் அருள் செய்த இறைவன் திருவுள்ளத்தை யாரும் அறியவில்லை.

Related image

பாடல் #365

பாடல் #365: இரண்டாம் தந்திரம் -5 பிரளயம்

சமைக்கவல் லானைச் சயம்புவென் றேத்தி
அமைக்கவல் லாரிவ் வுலகத்து ளாரே
திகைத்ததெண் ணீரிற் கடலொலி யோசை
மிகைக்கொள அங்கி மிகாமைவைத் தானே.

விளக்கம்:

பிரளயத்தின் போது எழுந்த கடலோசையைக் கேட்ட உலகத்தவர் திகைத்துப் போனார்கள். அங்கு பேரோளி மிகுந்த நெருப்பு மலையாக இருந்த சதாசிவமூர்த்தியை அனைத்தையும் படைத்து சுயம்புவாய் தோன்றியவனே என்று இறைவனை மனதில் வைத்து வழிபட்ட உலகத்தில் உள்ள உயிர்களுக்காக கடல்நீர் வெள்ளம் கடலோசை மேலும் அதிகரிக்காமல் இருக்க அந்த நீரில் அக்னியை உண்டாக்கினார் இறைவன்.

உட்கருத்து: பிரளயத்தை ஏற்படுத்தி அனைத்தையும் அழித்த இறைவன் தன்னை வழிபட்டு சரணடைந்த உயிர்களை காப்பாற்றினார்.

Related image

பாடல் #366

பாடல் #366: இரண்டாம் தந்திரம் – 5. பிரளயம்

பண்பழி செய்வழி பாடுசென் றப்புறங்
கண்பழி யாத கமலத் திருக்கின்ற
நண்பழி யாளனை நாடிச்சென் றச்சிரம்
விண்பழி யாத விருத்தியைக்கொண் டானே.

விளக்கம்:

இறைவனை ஏற்காமல் அவரை குற்றப்படுத்தும் வழிகளைப் பின்பற்றி நடக்கும் உயிர்களை பிரளய காலத்தில் மாபெரும் அழிவிலிருந்து காப்பாற்ற தன் மேல் உண்மையான அன்பை வைக்க முடியாதபடி அந்த உயிர்களின் தலையின் உச்சியில் இருந்து ஆட்சி செய்யும் ஆணவத்தை அழித்து அவர்களையும் ஆட்கொண்டு விண்ணுலகத் தேவர்களும் குற்றம் கூற முடியாதபடி புதிய உலகங்களையும் உயிர்களையும் உருவாக்கினான்.

உட்கருத்து: பிரளய காலத்தில் தம் மீது அன்புகொண்ட அடியவர்களை மட்டுமே காப்பாற்றுவான் என்று இல்லாமல் தம்மை பழிக்கும் உயிர்களையும் காப்பாற்றும் பெரும் கருணை கொண்டவன் இறைவன். பிரளய காலத்தில் தம் மீது அன்பு கொள்ளாத பிற உயிர்களின் தலையில் இருக்கும் அகங்காரம் ஆணவத்தை அழித்து அந்த உயிர்களையும் ஆட்கொண்டு அருளும் இறைவன் பிறகு புதியதாக உலகங்களையும் உயிர்களையும் உருவாக்கி அருளுகின்றான்.

Image result for சதாசிவ மூர்த்தி