பாடல் #57

பாடல் #57: பாயிரம் – 3. ஆகமச் சிறப்பு

அஞ்சன மேனி அரிவைஓர் பாகத்தன்
அஞ்சொ டிருபத்து மூன்றுள ஆகமம்
அஞ்சலி கூப்பி அறுபத் தறுவரும்
அஞ்சா முகத்தில் அரும்பொருள் கேட்டதே.

விளக்கம்:

நீல நிற தேகத்தை உடைய உமா மகேஸ்வரியை இடது பாகத்தில் கொண்ட இறைவன் தனது மேல் நோக்கிய ஐந்தாவது முகமான ஈசான முகத்திலிருந்து அரிதான இருபத்து எட்டு ஆகமங்களை தன்னைக் கைகூப்பி வேண்டிக்கொண்ட அறுபத்து ஆறு யோகபுருஷர்களுக்கு மொழிந்து அருளினான்.

இருபத்து எட்டு ஆகமங்களும் அதைக் கேட்ட அறுபத்து ஆறு யோகபுருஷர்களும்:

1. காமிகம்: பிரணவர், திரிகலர், ஹரர்
2. யோகஜம்: சுதா, பஸ்மர், விபு,
3. சிந்தியம்: சுதீப்தர், கோபதி, அம்பிகை
4. காரணம்: காரணர், சர்வருத்ரர், பிரஜாபதி
5. அஜிதம்: சுசிவர், சிவர், அச்சுதர்
6. தீப்தம்: ஈசர், ஈசானர், ஹூதாசனர்
7. சூட்சுமம்: சூட்சுமர், வைஸ்சிரவணர், பிரபஞ்சனர்
8. சகஸ்ரம்: காலர், பீமர், தருமர்
9. அம்சுமான்: அம்புசம்யமர், அர்க்கர், ரவி
10. சுப்ரபேதம்: தசேசர், விக்னேசர், சசி
11. விஜயம்: அனாதிருத்தர், பரமேசுவரர்
12. நிஸ்வாசம்: தசாரணர், சைலசர்
13. சுவாயம்புவம்: நிதனேசர், பிரமர்
14. அனலம்: வியோமர், அக்கினி
15. வீரம்: தேஜஸ், பிரஜாபதி
16. ரெளரவம்: பிரம்மேசர், நந்திகேசர்
17. மகுடம்: சிவர், மகாதேவர்
18. விமலம்: சர்வாத்மகர், வீரபத்திரர்
19. சந்திரஞானம்: அனந்தர், கிரஹஸ்பதி
20. பிம்பம்: பிரசாந்தர், ததீசி
21. புரோத்கீதம்: சூலி, கவசர்
22. லளிதம்: லயர், ஆலயர்
23. சித்தம்: பிந்து, சண்டேசுவரர்
24. சந்தானம்: சிவநிஷ்டர், வாயு
25. சர்வோக்தம்: சோமதேவர், நிருசிம்மர்
26. பாரமேசுரம்: ஸ்ரீதேவி, உசனஸ்
27. கிரணம்: தேவவிபவர், சம்வர்த்தகர்
28. வாதுளம்: சிவர், மகாகாளர்

பாடல் #58

பாடல் #58: பாயிரம் – 3. ஆகமச் சிறப்பு

அண்ணல் அருளால் அருளும் சிவாகமம்
எண்ணில் இருபத்தெண் கோடிநூ றாயிரம்
விண்ணவர் ஈசன் விழுப்பம் உரைத்தனர்
எண்ணிநின் றன்பொருள் ஏத்துவன் யானே.

விளக்கம்:

சதாசிவமூர்த்தி உயிர்கள் உய்யும் பொருட்டு அருளிய சிவாகமங்களை எண்ணினால் அது இருபத்து எட்டு கோடி நூறாயிரம் இவற்றையே விண்ணில் இருக்கும் தேவர்களும் சிவபெருமானின் சிறப்புக்களாகக் கூறினார்கள். அவற்றையே நானும் சிந்தனை செய்து நின்று அவற்றின் பொருளைப் புகழ்ந்து பாடிப் பரப்புகின்றேன்.

பாடல் #59

பாடல் #59: பாயிரம் – 3. ஆகமச் சிறப்பு

பண்டித ராவார் பதினெட்டுப் பாடையும்
கண்டவர் கூறும் கருத்தறிவார் என்க
பண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடையும்
அண்ட முதலான் அரன்சொன்ன வாறே.

விளக்கம்:

இறைவனை அடைய ஆகமங்கள் கூறும் பதினெட்டு நிலைகளையும் அதன் உண்மையையும் உணர்ந்தவர்கள் பண்டிதர்கள் ஆவார்கள். இந்தப் பதினெட்டு நிலைகளையும் அரன் எனும் பெயரால் அறியப்படுபவனும் உலகங்கள் அனைத்திற்கும் முதல்வனுமான இறைவன் கூறியவையாகும். இறைவன் கூறியவற்றை அவன் கூறியபடியே விளக்குபவர்களே உண்மையான பண்டிதர்கள் ஆவார்கள்.

பாடல் #60

பாடல் #60: பாயிரம் – 3. ஆகமச் சிறப்பு

அண்ணல் அருளால் அருளும்திவ் யாகமம்
விண்ணில் அமரர் தமக்கும் விளங்கரிது
எண்ணில் எழுபது கோடிநூ றாயிரம்
எண்ணிலும் நீர்மேல் எழுத்தது ஆகுமே.

விளக்கம்:

உயிர்கள் தன்னை அடைய இறைவன் அருளிய திவ்யமான ஆகமங்களை விண்ணகத்தில் இருக்கும் அமரர்க்கும் பொருள் விளங்க அரிதானவையாகும். மொத்தம் உள்ள ஆகமங்களை எண்ணினால் அது எழுபது கோடி நூறாயிரம் ஆகும். இத்தனை கோடி ஆகமங்களை எண்ணிக்கொண்டு இருந்தால் நீர் மேல் எழுதிய எழுத்தை எப்படிப் படிக்க முடியாதோ அதுபோல இத்தனை கோடி ஆகமங்களின் பொருளை உணரமுடியாமல் போய்விடும்.

பாடல் #61

பாடல் #61: பாயிரம் – 3. ஆகமச் சிறப்பு

பரனாய்ப் பராபரம் காட்டி உலகின்
தரனாய்ச் சிவதன்மம் தானேசொல் காலத்து
அரனாய் அமரர்கள் அர்ச்சிக்கும் நந்தி
உரனாய் ஆகமம் ஓங்கிநின் றானே.

விளக்கம் :

பரமாகிய சிவமும் பராவாகிய சக்தியும் சேர்ந்து பராபரமாகிய அனைத்திற்கும் மேலான சதாசிவமூர்த்தி உலகின் தலைவனாய் நின்று எல்லா உயிர்களும் இறைவனை அடைய ஆகமங்களை அருளிய நேரத்தில் அமரர்களுக்கு குருவாய் நிற்கும் இறைவனை அரன் என்று அவர்களால் அர்ச்சிக்கப்பட்டு ஆகமங்கள் கூறும் ஞானத்தின் மொத்த அறிவு உருவமாக உயர்ந்து நின்றான்.

பாடல் #62

பாடல் #62: பாயிரம் – 3. ஆகமச் சிறப்பு

சிவமாம் பரத்தினில் சத்தி சதாசிவம்
உவமா மகேசர் உருத்திர தேவர்
தவமால் பிரமீசர் தம்மில்தாம் பெற்ற
நவஆ கமம்எங்கள் நந்திபெற் றானே.

விளக்கம்:

பரமாகிய சிவமும் பராவாகிய சக்தியும் சேர்ந்து சதாசிவம் எனும் மாபெரும் பரம்பொருளாக விளங்கி அந்தப் பரம்பொருள் மகேசுவரன், ருத்திரன், திருமால், பிரமன், ஈசுவரன் ஆகிய ஐவர்களும் சதாசிவமூர்த்தியிடமிருந்து பெற்றது மொத்தம் ஒன்பது ஆகமங்கள் ஆகும். அந்த ஒன்பது ஆகமங்களை எங்கள் குருவான நந்தி பெற்று எமக்கு அருளினான்.

பாடல் #63

பாடல் #63: பாயிரம் – 3. ஆகமச் சிறப்பு

பெற்றநல் ஆகமம் காரணம் காமிகம்
உற்றநல் வீரம் உயர்சித்தம் வாதுளம்
மற்றவ் வியாமள மாகுங்கா லோத்தரம்
துற்றநற் சுப்பிரம் சொல்லும் மகுடமே.

விளக்கம்:

எங்கள் குருவான நந்தியிடமிருந்து பெற்ற நல்வழியைக் காட்டும் ஒன்பது ஆகமங்கள் 1. காரணம், 2. காமிகம், 3. அமையப்பெற்ற வீரம், 4. உயர்வான சித்தம், 5. வாதுளம், 6. மற்றவைகளான யாமளம், 7. அனைத்துமாகும் காலோத்தரம், 8. நிறைவுடைய சுப்பிரம், 9. சொல்லிய மகுடம் ஆகியவையாகும்.

பாடல் #64

பாடல் #64: பாயிரம் – 3. ஆகமச் சிறப்பு

அண்ணல் அருளால் அருளும் சிவாகமம்
எண்ணிலி கோடி தொகுத்திடு மாயினும்
அண்ணல் அறைந்த அறிவறி யாவிடின்
என்ணிலி கோடியும் நீர்மேல் எழுத்தே.

விளக்கம்:

உயிர்கள் தன்னை அடைய இறைவன் அருளிய சிவாகமங்களை தொகுத்தால் பல கோடிகளாக இருக்கும் என்றாலும் இறைவனை எண்ணி அவனருள் வேண்டி அவன் கொடுக்கும் ஞானத்தை வைத்து அறிந்து கொள்ளலாம். அவ்வாறு இறைவன் கொடுத்த ஞானத்தை கொண்டு ஆகமத்தை உணராமல் வெறும் வார்த்தைகளைக் கொண்டு பொருள் புரியாமல் ஓதினால் அந்த எண்ண முடியாத கோடிகள் அனைத்தும் நீர் மேல் எழுதிய எழுத்துக்கள் போல யாருக்கும் உபயோகம் இல்லாமலேயே இருக்கும்.

பாடல் #65

பாடல் #65: பாயிரம் – 3. ஆகமச் சிறப்பு

மாரியும் கோடையும் வார்பனி தூங்கநின்று
ஏரியும் நின்றங் கிளைக்கின்ற காலத்து
ஆரிய மும்தமி ழும்உட னேசொல்லிக்
காரிகை யார்க்குக் கருணைசெய் தானே.

விளக்கம்:

மழைக்காலம் கோடைக்காலம் பனி பெய்யும் குளிர்காலம் என எல்லாக் காலமும் ஏரிகளெல்லாம் நீர்வற்றி அனைத்தும் யுகங்களின் முடிவான ஊழிக்காலத்தில் அழியும். ஆரிய மொழியாகிய சமஸ்கிருதத்திலும் தமிழிலும் வேதங்களையும் ஆகமங்களையும் புதுயுகத்தில் பிறக்கும் உயிர்களின் தாயான உமாதேவிக்கு அந்த உயிர்கள் இறைவனை அடையும் பொருட்டு உடனே வழங்கி இறைவன் மாபெரும் கருணை செய்தான்.

பாடல் #66

பாடல் #66: பாயிரம் – 3. ஆகமச் சிறப்பு

அவிழ்க்கின்ற வாறும் அதுகட்டு மாறும்
சிமிழ்த்தலைப் பட்டுயிர் போகின்ற வாறும்
தமிழ்ச்சொல் வடசொல் எனும்இவ் விரண்டும்
உணர்த்தும் அவனை உணரலு மாமே.

விளக்கம்:

மும்மலங்கள் உயிர்களைவிட்டு விலகுகின்ற முறையையும் மும்மலங்கள் உயிர்களைக் கட்டிப்போடும் முறையையும் பந்தபாசத்தால் பிறந்த இந்த உடலைவிட்டு உயிர் பிரிந்து போகும் முறையையும் இன்னும் பலவற்றை ஆகமங்கள் கூறுகின்றன. தமிழ் மொழி சமஸ்கிருத மொழி ஆகிய இரண்டு மொழியிலும் ஆகமங்கள் கூறி உணர்த்தும் ஒரே உண்மை இறைவன் வழங்கிய ஆகமங்களை அவன் அருளாலேயே ஞானம் பெற்று உணர வேண்டும்.