பாடல் #11

பாடல் #11: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

அயலும் புடையும்எம் ஆதியை நோக்கில்
இயலும் பெருந்தெய்வம் யாதுமொன் றில்லை
முயலும் முயலின் முடிவும்மற் றாங்கே
பெயலும் மழைமுகிற் பேர்நந்தி தானே.

விளக்கம்:

அனைத்திற்கும் ஆதியாகிய சதாசிவமூர்த்தியை எண்ணினால் அவருக்கு நிகரான பெருந்தெய்வத்தை தூரத்திலும் அருகிலும் பார்க்க முடியவில்லை. நம்முடைய முயற்சியும் அவனே. நம் முயற்சியின் பயனும் அவனே .மழை பொழிகின்ற மேகமும் அவனே. அவன் பெயர் நந்தி ஆகும்.

பாடல் #12

பாடல் #12: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

கண்ணுத லான்ஒரு காதலின் நிற்கவும்
எண்ணிலி தேவர் இறந்தார் எனப்பலர்
மண்ணுறு வார்களும் வானுறு வார்களும்
அண்ணல் இவன்என் றறியகி லார்களே.

விளக்கம்:

சிவபெருமான் நெற்றிக் கண்ணால் அருள் கொடுத்து நின்ற போது எண்ணில் அடங்காத தேவர்கள் அழிவில்லாத அமர வாழ்வைப் பெற்றார்கள். மண்ணில் வாழ்பவர்களும் விண்ணில் வாழ்பவர்களும் சிவபெருமானின் அருளைப்பற்றி தெரிந்து கொள்ளாமல் அவருடைய நெற்றிக் கண்ணால் நிறைய பேர் இறந்து விட்டதாக அறியாமையால் எண்ணிக்கொண்டு இருக்கின்றார்கள்.

பாடல் #13

பாடல் #13: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

மண்ணளந் தான்மல ரோன்முதல் தேவர்கள்
எண்ணளந் தின்னம் நினைக்கிலார் ஈசனை
விண்ணளந் தான்தன்னை மேல்அளந் தாரில்லை
கண்ணளந் தெங்குங் கடந்துநின் றானே.

விளக்கம்:

மூவுலகையும் மூன்று அடிகளால் அளந்த திருமால் தாமரை மலரில் அமர்ந்த பிரம்மன் முதலிய அனைத்துத் தேவர்களும் இன்னமும் தங்களின் எண்ணத்தால் கூட அளக்க முடியாத சதாசிவமூர்த்தியின் பெருமையைப் பற்றி எண்ணாமல் இருக்கின்றார்கள். அடிமுடி காண முடியாத சதாசிவமூர்த்தியை அளந்து பார்த்தவர்கள் ஒருவரும் இல்லை. கண் பார்க்கக்கூடிய எதையும் கடந்து அளவிட முடியாமல் அனைத்தையும் தனக்குள் உள்ளடக்கி நிற்கின்றான்.

பாடல் #14

பாடல் #14: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

கடந்துநின் றான்கம லம்மல ராதி
கடந்துநின் றான்கடல் வண்ணன்எம் மாயன்
கடந்துநின் றான்அவர்க் கப்புறம் ஈசன்
கடந்துநின் றான்எங்கும் கண்டுநின் றானே.

விளக்கம்:

தாமரை மீது அமர்ந்து கொண்டு முதலாவதாகிய படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மனையும் கடந்து நிற்கின்றவன் சதாசிவமூர்த்தி. உயிர்களைக் காப்பாற்றும் தொழிலைச் செய்யும் நீல வண்ணனாகிய திருமாலையும் கடந்து நிற்கின்றவன் சதாசிவமூர்த்தி. இவர்கள் இருவருக்கும் அப்புறம் உயிர்களின் மாயையை அழிக்கும் ஈசுவரனையும் கடந்து நிற்கின்றவன் சதாசிவமூர்த்தி. இவ்வாறு மூவரையும் கடந்து அனைத்திற்கும் இறைவனாக இருக்கின்ற சதாசிவமூர்த்தியை யாம் காணும் இடமெல்லாம் கண்டு நின்றோம்.

பாடல் #15

பாடல் #15: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

ஆதியு மாய்அர னாய்உட லுள்நின்ற
வேதியு மாய்விரிந் தார்ந்திருந் தான்அருட்
சோதியு மாய்ச்சுருங் காததோர் தன்மையுள்
நீதியு மாய்நித்த மாகிநின் றானே.

விளக்கம்:

உயிரின் ஆரம்பத்திலிருந்து உயிர்களுக்குப் பாதுகாப்பாக உடலுக்குள்ளே நின்று உலகின் அனைத்து வினை மாற்றங்களுக்கு காரணமாகவும்  எங்கும் பரவி விரிந்து இருப்பவனும் உயிர்களுக்குள்ளேயே உணரப்படுபவனுமாய் இருந்து என்றும் அருள் வழங்கும் குறையாத தன்மையுடைய மாபெரும் ஜோதியாகவும் அனைத்திற்கும் நீதியுமாகவும் என்றும் அழியாத சக்தியுமாகவும் இறைவன் நிலைத்து நிற்கின்றான்.

பாடல் #16

பாடல் #16: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

கோது குலாவிய கொன்றைக் குழற்சடை
மாது குலாவிய வாள்நுதல் பாகனை
யாது குலாவி அமரருந் தேவரும்
கோது குலாவிக் குணம்பயில் வாரே

விளக்கம்:

நரம்போடு இருக்கும் கொன்றைப் பூவைச் சூடிக்கொண்டு சுருள் சுருளான சடையை உடையவரும், அழகு நிறைந்து பிரகாசிக்கும் நெற்றியைக் கொண்டிருக்கும் உமாதேவியை தமது இடபாகத்தில் உடையவரும், ஒரு மாசில்லாத தூய்மையானவருமான இறைவனை, மும்மல பற்றுக்கள் இன்னும் நீங்காமல் இருக்கும் அமரர்களும் தேவர்களும் எப்படிக் கூடிக் குலாவுவார்கள்? ஆதலால், இறைவனின் இயல்பை அவர்கள் அறியாமலேயே இருக்கின்றனர்.

பாடல் #17

பாடல் #17: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

காயம் இரண்டும் கலந்து கொதிக்கினும்
ஆயம் கத்தூரி அதுமிகும் அவ்வழி
தேசம் கலந்தொரு தேவனென் றெண்ணினும்
ஈசன் உறவுக் கெதிரில்லை தானே.

விளக்கம்:

வெங்காயம் பெருங்காயம் ஆகிய இரண்டையும் ஒன்றாக கொதிக்க வைத்தாலும் அதிலிருந்து வரும் வாசனையை விட கருமையான கத்தூரியிலிருந்து வரும் வாசம் அதிகமாகும். அதுபோலவே உலகெங்கும் எத்தனை தெய்வங்களைத் தேடி அடைந்து அவர்களே இறைவன் என்று எண்ணிக்கொண்டு அவர்களோடு கலந்து முயன்றாலும் அனைத்திற்கும் இறைவனான ஈசுவரனை (சதாசிவமூர்த்தியை) கலந்து பெறும் உறவுக்கு (பேரின்பத்திற்கு) அது கொஞ்சம் கூட ஈடாகாது.

உள் விளக்கம்:

வெங்காயம் என்பது பருமையான தேகத்தையும் (அன்னமயகோஷம்) பெருங்காயம் என்பது நுண்மையான தேகம் (மனோமய கோஷத்தையும்) குறிக்கும். இவ்விரண்டு தேகங்களும் உயிர்களின் உடலுக்குள்ளே கலந்து இருந்தாலும் அது இறைவனோடு கலந்து பெறும் சூக்கும தேகத்திற்கு ஈடாகாது. ஆகவே உலகப் பற்றுக்கள் எவ்வளவுதான் இன்பத்தைத் தருவதாக இருந்தாலும் அவை அனைத்தும் இறைவனோடு இரண்டறக் கலந்து பெறும் பேரின்பத்திற்கு ஈடாகாது.

பாடல் #18

பாடல் #18: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

அதிபதி செய்து அளகை வேந்தனை
நிதிபதி செய்த நிறைதவம் நோக்கி
யதுபதி யாதரித் தாக்கம தாக்கென
இதுபதி கொள்என்ற எம்பெரு மானே.

விளக்கம்:

குபேரன் இறைவன் மேல் கொண்ட தீராத பக்தியினால் அவரை நோக்கிச் செய்த நிறைவான தவத்தை கண்டு மெச்சிய இறைவன் அவனை உலகத்திலுள்ள செல்வங்களுக்கெல்லாம் தலைவனாக ஆக்கிவிட்டு இனி வடக்குத் திசையிலிருக்கும் அழகாபுரியே உன்னுடைய ஊர் நீ அதற்கு அரசன் என்றும் தம்மை நாடி வருபவர்களை ஆதரித்து அவர்களைத் தம் உறவினர்போல ஆதரவு கொடுத்து அவர்களுக்கும் வேண்டிய செல்வம் வழங்குவாயாக என்றும் அருளிய மாபெரும் கருணையாளன் எம்பெருமானே.

உள் விளக்கம்:

உலகப் பற்றுக்களில் விருப்பம் வைக்காமல் இறைவனின் மேல் தீராத அன்பு கொண்டு அவனை எண்ணி வடதிசை நோக்கி (இங்கே வடதிசை என்பது ஏழாவது சக்கரமான சுழுமுனை நாடியின் உச்சமான சகஸ்ரரதளத்தைக் குறிக்கும்) தியானம் செய்தால் அளவிடமுடியாத அளவு செல்வங்களைக் (உலக செல்வங்களுக்கும் மேலான செல்வங்களான சித்திகளையும் முக்தியையும்) கொடுத்து அந்தச் செல்வங்களுக்கெல்லாம் நம்மைத் தலைவனும் ஆக்குபவன் எம்பெருமான் இறைவனே.

பாடல் #19

பாடல் #19: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

இதுபதி ஏலம் கமழ்பொழில் ஏழும்
முதுபதி செய்தவன் மூதறி வாளன்
விதுபதி செய்தவன் மெய்த்தவம் நோக்கி
அதுபதி யாக அமருகின் றானே.

விளக்கம்:

இந்த உலகத்தில் ஏலக்காயின் சுகந்தமான வாசனை வீசக்கூடிய ஏழுவிதமான காடுகளை உருவாக்கியவன் இறைவன் அவற்றை பேரழிவுக் காலத்தில் வெறும் சாம்பல் காடுகளாகவும் மாற்றுபவனும் அவனே. அவன் அனைத்தும் அறிந்த பேரறிவாளன். பிறை நிலாச் சந்திரனை தன் திருமுடியில் அணிந்திருக்கும் இறைவன் தன்னை நோக்கி உயிர்கள் புரியும் உண்மையான தவத்தை மெச்சி அந்த உயிர்களின் உடலையே தான் கொண்ட திருக்கோயிலாக எழுந்தருளும் மாபெரும் அருளாளன்.

உள் விளக்கம்:

சுகந்தமான வாசனை வீசும் ஏழு காடுகள் என்பது அற்புதமான சக்தியை தமக்குள் அடக்கியிருக்கும் ஏழு சக்கரங்களைக் குறிக்கும். உயிர்களின் உடலில் இருக்கும் இந்த ஏழு சக்கரங்களே அவற்றை முக்திக்கு அழைத்துச் செல்லும் வழியை கொடுக்கக்கூடியவை. சக்திவாய்ந்த ஏழு சக்கரங்கள் இருந்தாலும் அவற்றை முறைப்படி தியானத்தால் சக்தியூட்டாமல் விட்டுவிட்டால், உயிர்களின் உடல் ஒரு நாள் அழிந்து வெறும் சாம்பலாக மாறிவிடும் என்பதையே சாம்பலாகும் காடுகள் குறிக்கிறது. இறைவன் முக்காலமும் அறிந்தவன் அவன் பேரறிவாளன் என்பது அவனிடமிருந்து எதையுமே மறைக்க முடியாது என்பதைக் குறிக்கிறது. மாபெரும் அன்பானவன், சந்திரனை விட குளிர்ச்சியை உடைய இறைவனை நோக்கி உண்மையான தவம் இருந்தால், அந்த உயிர்களின் உடலே இறைவனே மகிழ்ந்து வந்து தங்கும் இடமாகிவிடும். இதுவே முக்தியடையும் வழியுமாகும்.

பாடல் #20

பாடல் #20: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த
அடிகள் உறையும் அறநெறி நாடில்
இடியும் முழக்கமும் ஈசர் உருவம்
கடிமலர்க் குன்றம் மலையது தானே.

விளக்கம்:

படைப்புக்கள் அனைத்திற்கும் ஆரம்பம் எப்போது அழிவு எப்போது என்பதை முன்னமே தீர்மானித்து அதன்படியே படைத்து அருளுபவனும் தன்னை வணங்கி வழிபடும் அடியவருக்கும் அடியவனாக இருப்பவனும் இறைவனின் தன்மையை உணர்த்தும் அறங்களையும் நெறிகளையும் தேடினால் அது வேதங்களே ஆகும். அத்தகைய இறைவனின் உருவம் எப்படி இருக்கும் என்று தேடினால் இடி இடிக்கும் போது வானத்தில் தோன்றும் மின்னல் ஒளியும் அவன் உருவமே. அப்போது கேட்கும் இடியின் ஓசையும் அவன் உருவமே ஆகும். இப்படி அனைத்தையும் தன் உருவமாகக் கொண்டிருக்கும் இறைவனின் இருப்பிடம் எது என்று தேடினால் வாசனை மிக்க மலர்கள் சூழ்ந்த சோலைகளைக் கொண்ட குன்றுகளெல்லாம் அவன் இருப்பிடமே அந்தக் குன்றுகள் இருக்கும் மாபெரும் மலைகளும் அவன் இருப்பிடமே.