பாடல் #1249

பாடல் #1249: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

மாயம் புணர்க்கும் வளர்சடை யானடித்
தாயம் புணர்க்குஞ் சலந்தீ யமலனைக்
காயம் புணர்க்குங் கலவியுள் மாசத்தி
ஆயம் புணர்க்குமவ் வியோனியு மாமே.

விளக்கம்:

அசையா சக்தியாகிய இறைவனுக்குள் அண்ட சராசரங்களையும் அதிலிருக்கும் அனைத்து உலகங்களையும் அதற்குள் அனைத்து உயிர்களையும் படைக்க வேண்டும் என்கிற எண்ணம் வரும் போது அவரிடமிருந்து அசையும் சக்தியாகப் பிரிந்து வருகின்ற இறைவியின் மாயா அம்சத்தோடு உலகங்களும் உயிர்களும் உருவாக வேண்டும் என்ற காரணத்திற்காக சேருகின்ற நீண்ட சடையை உடைய மாசற்ற இறைவன் தம்மை அறிந்து அடைய வேண்டும் என்று ஆசைப்படுகின்ற உயிர்களுக்கு அருள வேண்டும் என்கிற பெருங்கருணையில் உயிர்களின் உடலை பஞ்ச பூதங்களிலுள்ள நீரையும் நெருப்பையும் கலந்து உருவாக்கும் போது தமது திருவடியையும் சேர்த்தே வைத்து உருவாக்கி அருளுகின்றான். உயிர்கள் பிறவி எடுப்பதற்கு தேவையான உடலை உருவாக்க வேண்டி இறைவனுடன் சேர்ந்து கலக்கின்ற பராசக்தியாகிய இறைவியும் தங்களின் கலப்புக்குள்ளிருந்து பலவித உருவங்களோடு உயிர்கள் அனைத்தையும் ஒரு மாபெரும் கூட்டமாக உலகங்கள் அனைத்திலும் சேர்ந்து பிறப்பதற்கு மாபெரும் காரணமாக இருக்கின்றாள்.

உட்கருத்து:

கர்மங்களைத் தீர்த்துக் கொள்ள மாயையுடன் உயிர்களைப் படைத்தாலும் அந்த மாயை நீங்கி உண்மையை உணர்ந்து தம்மிடம் வந்து அடைவதற்கான ஆதாரமாக தமது திருவடியை உயிர்களுக்குள் வைத்தே படைத்து அருளுகின்றான் இறைவன். தமக்குள் ஆதாரமாக இருக்கின்ற இறைவனின் திருவடிகளை உணர்ந்து பற்றிக் கொண்ட உயிர்களுக்கு கிடைக்கும் மாபெரும் ஆதேயமாக இறைவனின் திருவருள் இருக்கின்றது.

பாடல் #1250

பாடல் #1250: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

உணர்ந்தொழிந் தேனுவ னாமெங்க ளீசன்
புணர்ந்தொழிந் தேன்புவ னாபதி யாரை
அணைந்தொழிந் தேனெங்க ளாதிதன் பாதம்
பிணைந்தொழிந் தேன்தன் னருள்பெற்ற வாறே.

விளக்கம்:

பாடல் #1249 இல் உள்ளபடி எமக்குள் ஆதாரமாக இருக்கின்ற இறைவனின் திருவடிகளை உணர்ந்து மாயையை ஒழித்து பலவிதமான பெயர்களால் அழைக்கப்படுகின்ற பரம்பொருள் ஒருவனே என்பதை உணர்ந்து கொண்டேன். அவனோடு ஒன்றாகக் கலந்து நின்று நான் எனும் அகங்காரத்தை ஒழித்தேன். அனைத்து உலகங்களுக்கும் அதிபதியாக இருக்கின்ற அவனோடு ஒன்றாகச் சேர்ந்து நின்று அவனது திருவடிகளைத் தவிர வேறு பற்றுக்கள் அனைத்தையும் ஒழித்தேன். அவனோடு பின்னிப் பிணைந்து என்னையே நான் ஒழித்துவிட்டேன். ஆதலால் யானும் இறைவனும் ஒன்றே எனும் திருவருளை யாம் பெற்ற வழி இதுவே.

பாடல் #1251

பாடல் #1251: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

பெற்றாள் பெருமை பெரிய மனோன்மணி
நற்றா ளிறைவனே நற்பய னேயென்பர்
கற்றா னறியுங் கருத்தறி வார்கட்குப்
பொற்றா ளுலகம் புகல்தனி யாமே.

விளக்கம்:

பாடல் #1250 இல் உள்ளபடி சாதகர் பெற்ற திருவடிகளின் பெருமையை உடையவள் அனைத்திற்கும் மேலான இறைவனோடு எப்போதும் சரிசமமாக சேர்ந்தே இருக்கும் மனோன்மணி எனும் இறைவியாவாள். நன்மையைத் தருகின்ற திருவடிகளைக் கொண்ட பரம்பொருளான இறைவனை சென்று அடைவதே இந்த உலகத்தில் கிடப்பதற்கு மிகவும் அரிய பயனாகும் என்பதை அவனது திருவடிகளை அடைந்தவர்கள் கூறுவார்கள். அப்படி அடைந்த திருவடிகளால் பெற்ற ஞானத்தின் மூலம் இறைவனை அறிந்து கொண்டு தமது எண்ணத்திலும் அவனை வைத்து முழுவதும் அறிந்து கொள்ள முடிந்தவர்களுக்கு பொன் போன்ற இறைவனின் திருவடிகளை இந்த உலகத்திலேயே அடைய முடியும் என்பதால் அதற்காக இந்த உலகத்தில் பிறவி எடுத்து வந்து அவனோடு ஏகாந்தத்தில் தனித்திருப்பதும் கிடைப்பதற்கு அரிய மிகப்பெரும் பேறாகும்.

பாடல் #1252

பாடல் #1252: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

தனிநாய கன்றனோ டென்னெஞ்ச நாடி
இனியா ரிருப்பிட மேழுல கென்பர்
பனியான் மலர்ந்தபைம் போதுகை யேந்திக்
கனியா நினைவதென் காரண மம்மையே.

விளக்கம்:

பாடல் #1251 இல் உள்ளபடி இறைவனோடு ஏகாந்தத்தில் தனித்து வீற்றிருக்கும் கிடைப்பதற்கு அரிய பேறைப் பெற்று எமது தலைவனாகிய அவனோடு எப்போதும் ஏகாந்தத்தில் இருப்பதையே எமது நெஞ்சம் விரும்புகின்றது. இந்தப் பேறைப் பெற்று பேரின்பத்தை அனுபவித்தவர்களும் இறைவனோடு தாங்கள் ஏகாந்தத்தில் சேர்ந்து இருக்கின்ற இடம் ஏழு உலகங்களும் என்று கூறுவார்கள். இந்தப் பேற்றை யாம் பெறுவதற்கு காரணம் பனிபடர்ந்து புத்தம் புதிதாகப் பூத்து மலர்ந்திருக்கும் வாசனை மிக்க மலர்களை கையில் ஏந்திச் சென்று எமது அம்மையாகிய இறைவியின் மீதுள்ள பேரன்பினால் கசிந்து உருகிய உள்ளத்தோடு அவளை நினைத்து எப்போதும் வணங்கியதை அவள் ஏற்றுக் கொண்டு அருளியதால் ஆகும்.

பாடல் #1253

பாடல் #1253: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

அம்மனை யம்மை யரிவை மனோன்மணி
செம்மனை செய்து திருமங்கை யாய்நிற்கும்
இம்மனை செய்த விருநில மங்கையும்
அம்மனை யாகி யமர்ந்துநின் றாளே.

விளக்கம்:

பாடல் #1252 இல் உள்ளபடி எமது வேண்டுதலை ஏற்றுக் கொண்டு இறைவனோடு சேர்ந்து இருக்கும் ஏகாந்தத்தை அருளியவளும் இறைவனுக்கு துணைவியாக இருக்கின்றவளும் எமக்கும் அனைத்து உயிர்களுக்கும் தாயாக இருக்கின்றவளும் என்றும் இளமையுடன் இருக்கின்றவளும் இறைவனுடன் சரிசமமாக சேர்ந்து இருக்கின்ற மனோன்மணியானவளும் ஆகிய இறைவியை எமது உடலுக்குள் வந்து வீற்றிருப்பதற்கு ஏற்றபடி செழுமையான இடமாக எமது நிலைக்கு ஏற்ப எமது உடலை மாற்றி அருளியவளும் அது போலவே மேலுலகம் கீழுலகம் ஆகிய இரண்டு விதமான உலகங்களையெல்லாம் அவளுக்கு ஏற்ற படி மாற்றி அவற்றுக்குத் தலைவியாகவும் இருக்கின்றவளும் ஆகிய இறைவியே தான் வீற்றிருக்கும் எமது உடலாகவே மாறி அதற்குள் அமர்ந்து நிற்கின்றாள்.

பாடல் #1254

பாடல் #1254: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

அம்மையு மத்தனு மன்புற்ற தல்லது
அம்மையு மத்தனு மாரறிவா ரென்னை
அம்மையொ டத்தனும் யானு முடனிருந்
தம்மையொடு அத்தனை யான்புரிந் தேனே.

விளக்கம்:

பாடல் #1253 இல் உள்ளபடி எமது உடலாகவே மாறி எமக்குள் அமர்ந்திருக்கும் இறைவியும் பாடல் #1252 இல் உள்ளபடி எம்மோடு ஏகாந்தத்தில் தனித்து இருக்கும் இறைவனும் எம்மீது பேரன்பு கொண்டதைத் தவிர வேறு எவருமே எம்மை முழுவதுமாக அறிந்து கொண்டது இல்லை. எமக்குள் இருக்கும் இறைவியோடு இறைவனும் சேர்ந்து இருக்க அவர்களோடு யானும் சேர்ந்து இருந்து இறைவியோடு இறைவனையும் முழுவதுமாக யான் புரிந்து கொண்டேன்.

பாடல் #1125

பாடல் #1125: நான்காம் தந்திரம் – 7. பூரண சக்தி (சக்தி சிவத்தோடு சேர்ந்திருக்கும் பரிபூரணத் தன்மை)

அளந்தே னகலிடத் தந்தமு மீறும்
அளந்தே னகலிடத் தாதிப் பிரானை
அளந்தே னகலிடத் தாணொடு பெண்ணும்
அளந்தே னவனரு ளாய்ந்துணர்ந் தேனே.

விளக்கம்:

இந்த விரிந்து பரந்த உலகத்தின் முடிவாகவும் ஆன்மாக்களின் முடிவாகவும் உலகத்தின் ஆரம்பமாகவும் உலகத்திலுள்ள அனைத்து உயிர்களில் ஆணாகவும் பெண்ணாகவும் இருக்கின்ற இறைவனை எங்கெல்லாமோ அலைந்து தேடினோம். பின்பு அவனருளால் எமக்குள்ளேயே ஆராய்ந்து பரிபூரணமாக இருக்கும் அந்த சிவசக்தியை முழுவதுமாக உணர்ந்து கொண்டோம்.

பாடல் #1126

பாடல் #1126: நான்காம் தந்திரம் – 7. பூரண சக்தி (சக்தி சிவத்தோடு சேர்ந்திருக்கும் பரிபூரணத் தன்மை)

உணர்ந்தில ரீசனை யூழிசெய் சக்தி
புணர்ந்தது பூரணம் புண்ணியர் தங்கள்
கணங்களைத் தன்னருள் செய்கின்ற கன்னி
கொணர்ந்த வழிகொண்டு கும்பக மாமே.

விளக்கம்:

பாடல் #1125 இல் உள்ளபடி யாம் உணர்ந்து கொண்ட இறைவனையும் பேரூழிக் காலத்தில் அனைத்தையும் அழிக்கின்ற சக்தியாக இருக்கின்ற இறைவி அவனோடு சேர்ந்து இருப்பதே பரிபூரணமான நிலை என்பதையும் யாரும் உணர்ந்து கொள்ளாமல் இருக்கின்றார்கள். இறைவனை அறிந்து கொண்ட அடியார்களுக்கு அருள் புரிகின்ற இறைவியானவள் இறைவனை அடையும் பூர்வ ஜென்ம புண்ணியம் பெற்றவர்களுக்கு உள்ளே குருவாக இருந்து அவரவர்களுக்கு ஏற்ற விதத்தில் அருளிய வழிமுறைகளை மேற்கொண்டு அதன் படியே கடைபிடித்து வருபவர்களின் உள்ளே இறைவன் வந்து வீற்றிருப்பான்.

பாடல் #1127

பாடல் #1127: நான்காம் தந்திரம் – 7. பூரண சக்தி (சக்தி சிவத்தோடு சேர்ந்திருக்கும் பரிபூரணத் தன்மை)

கும்பக் களிறைந்துங் கோலொடு பாகனும்
வம்பிற் றிகழு மணிமுடி வண்ணனும்
இன்பக் கலவி யினிதுறை தையலும்
அன்பிற் கலவியு ளாயொழிந் தாரே.

விளக்கம்:

பாடல் #1126 இல் உள்ளபடி அடியவர்களின் உள்ளுக்குள் வந்து வீற்றிருக்கின்ற இறைவன் அவர்களின் ஐந்து புலன்களையும் அவர்களின் மனமாகிய கோலின் மூலம் ஆன்மாவாகிய பாகனைக் கொண்டு அடக்கி ஆளுகின்றான். குற்றம் குறையில்லாமல் பிரகாசிக்கும் நவரத்தினங்களால் ஆன கிரீடத்தை அணிந்து கொண்டு பிரகாசிக்கும் ஒளி வண்ணத்தில் திருமேனியை உடைய இறைவனும் அவனோடு பேரின்பத்தில் கலந்து இனிமையாக பின்னிப் பிணைந்து வீற்றிருக்கின்ற இறைவியும் உண்மையான அன்போடு இறைவனை நேசிக்கின்ற அடியவர்களின் உள்ளுக்குள் வந்து ஒன்றாக வீற்றிருப்பார்கள்.

கருத்து: அடியவர்களின் உள்ளுக்குள் வந்து வீற்றிருந்த இறைவன் அவர்களின் ஐந்து புலன்களையும் அவர்களின் மனதால் அடக்கி அவர்களின் ஆன்மாவை அன்பினால் பேரின்பத்தில் பின்னிப் பிணைத்து வீற்றிருக்கின்றான்.

பாடல் #1128

பாடல் #1128: நான்காம் தந்திரம் – 7. பூரண சக்தி (சக்தி சிவத்தோடு சேர்ந்திருக்கும் பரிபூரணத் தன்மை)

இன்பக் கலவியி லிட்டெழு கின்றதோர்
அன்பிற் புகவல்ல னாமெங்க ளப்பனுந்
துன்பக் குழம்பிற் துயருறு பாசத்துள்
என்பிற் பராசக்தி யென்னம்மை தானே.

விளக்கம்:

பாடல் #1127 இல் உள்ளபடி உன்மையான அன்போடு நேசிக்கின்ற அடியவர்களின் உள்ளுக்குள் வந்து வீற்றிருக்கின்ற இறைவன் அவர்களை பேரின்பத்தில் ஆழ்த்தி இருக்கும்படி செய்து அதிலிருந்து வெளிப்படுகின்ற தூய்மையான அன்பில் வீற்றிருந்து ஆருயிர்களின் தந்தையாக இருக்கின்றார். அடியவர்கள் இந்த உலகத்தில் ஆசையினாலும் பாசத்தினாலும் எடுத்த பிறவியில் அனுபவிக்கின்ற துன்பங்களைத் தாங்குகின்ற அன்பை அருளுகின்றவளாக பரம்பொருளாகிய இறைவியும் அவர்களுக்குள் புகுந்து வீற்றிருந்து ஆருயிர்களின் தாயாக இருக்கின்றாள்.

கருத்து:

அடியவர்களின் உள்ளுக்குள் பூரண சக்தியாக இருக்கும் சிவசக்தி அம்மையும் அப்பனுமாக சேர்ந்தே வீற்றிருக்கின்றார்கள். உயிர்கள் துன்பத்தை அனுபவிக்கும் போது அதை தாங்கிக் கொள்கின்ற பக்குவத்தை அன்பாக அம்மை அருளுகின்றாள். துன்பத்தை அனுபவித்துக் கழித்த உயிர்கள் இறைவனை நினைத்து உருகி கிடைக்கும் பேரின்பத்தை அனுபவிக்கும் போது அதிலிருந்து வெளிப்படுகின்ற தூய்மையான அன்பாக அப்பன் வீற்றிருக்கின்றார்.