பாடல் #899

பாடல் #899: நான்காம் தந்திரம் – 1. அசபை (உச்சரிக்கப் படாமல் மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயக்கும் மந்திரம்)

ஏழா யிரமாய் இருபதாய் முப்பதாய்
ஏழா யிரத்தும் எழுகோடி தானாகி
ஏழா யிரத்துயிர் எண்ணிலா மந்திரம்
ஏழா யிரண்டாக இருக்கின்ற வாறே.

விளக்கம்:

பாடல் #898 ல் உள்ளபடி ஆதார மந்திரங்கள் ஏழாயிரமாக இருந்தாலும் அதன் பரிணாமங்கள் இருபதாயிரமாகவும் முப்பதாயிரமாகவும் பெருகி முடிவில் ஏழு கோடி வரையில் இருக்கின்றது. இந்த மந்திரங்கள் அனைத்தும் இறைவனின் சொரூபமாகவே இருக்கின்றது. ஆதாரமான இந்த ஏழாயிரம் மந்திரங்களே ஏழு கோடி மட்டுமில்லாமல் இன்னும் பல பரிணாமங்களில் எண்ண முடியாத அளவு பெருகிக் கொண்டே இருக்கின்றன. இருந்தாலும் அத்தனை மந்திரங்களும் அகார உகாரமாகிய சிவசக்தியிலேயே அடங்கி இருக்கின்றன.

பாடல் #900

பாடல் #900: நான்காம் தந்திரம் – 1. அசபை (உச்சரிக்கப் படாமல் மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயக்கும் மந்திரம்)

இருக்கின்ற மந்திரம் ஏழா யிரமாம்
இருக்கின்ற மந்திரம் எத்திறம் இல்லை
இருக்கின்ற மந்திரம் சிவன்திரு மேனி
இருக்கின்ற மந்திரம் இவ்வண்ணந் தானே.

விளக்கம்:

அனைத்திற்கும் ஆதாரமாக இருக்கின்ற மந்திரங்கள் ஏழாயிரமாகும். இந்த மந்திரங்களுக்குள் இல்லாத சக்திகளே இல்லை. இந்த மந்திரங்கள் அனைத்தும் இறைவனின் திரு உருவமாக இருக்கின்றது. உள்ளம் உருக சொன்னால் பலனளிக்கக் கூடியதாக இருக்கும் அனைத்து மந்திரங்களும் இறைவனின் திருஉருவமாகவே இருக்கின்றன.

பாடல் #901

பாடல் #901: நான்காம் தந்திரம் – 1. அசபை (உச்சரிக்கப் படாமல் மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயக்கும் மந்திரம்)

தானே தனக்குத் தகுநட்டந் தானாகும்
தானே அகார உகாரம தாய்நிற்கும்
தானே ரீங்காரத்து தத்துவக் கூத்துக்குத்
தானே உலகில் தனிநடனந் தானே.

விளக்கம்:

உலகில் இறைவன் ஆடுகின்ற திருக்கூத்து தாண்டவங்களுக்கு தகுந்த தாளமாகவும் தாள மந்திரமான ஓங்காரத்தில் அகார உகாரமாகவும் தாளங்களின் ஓசையாகவும் தாண்டவ நடனமாகவும் இறைவன் ஒருவனே இருக்கின்றான்.

குறிப்பு: இறைவனின் தாண்டவங்களில் எதுவாகவெல்லாம் அவனே இருக்கின்றான் என்பதை இப்பாடலில் அறியலாம்.

பாடல் #902

பாடல் #902: நான்காம் தந்திரம் – 1. அசபை (உச்சரிக்கப் படாமல் மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயக்கும் மந்திரம்)

நடமிரண் டொன்றே நளினம தாகும்
நடமிரண் டொன்றே நமன்செய்யுங் கூத்து
நடமிரண் டொன்றே நகைசெயா மந்திரம்
நடம்சிவ லிங்கம் நலம்செம்பு பொன்னே.

விளக்கம்:

இறைவன் தாம் ஒருவனாகவே ஆடுகின்ற திருநடனங்கள் இரண்டு வகையாகும். அதில் முதலாவது அனைத்தையும் உருவாக்குகின்ற அழகிய ஆனந்த நடனம். இரண்டாவது அனைத்தையும் அழிக்கின்ற ருத்ர தாண்டவ கூத்தாகும். இந்த நடனம் கூத்து இரண்டையும் மகிழ்ச்சியோ துன்பமோ இல்லாமல் சமமாகப் பார்க்க வைக்கும் பிரணவ மந்திரத்தை உணர்ந்து இந்த இரண்டு திருநடனங்களின் உருவமாக இருக்கும் சிவலிங்கத் தத்துவமே தமக்குள்ளும் இருக்கிறது என்பதை உணர்ந்த சாதகர்களுக்கு செம்பு போன்ற கடினமான உடல் பொன் போல் ஜொலிக்கின்ற ஒளி உடம்பு ஆகிவிடும்.

பாடல் #903

பாடல் #903: நான்காம் தந்திரம் – 1. அசபை (உச்சரிக்கப் படாமல் மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயக்கும் மந்திரம்)

செம்புபொன் னாகுஞ் சிவாய நமஎன்னில்
செம்புபொன் னாகத் திரண்டது சிற்பரஞ்
செம்புபொன் னாகும் ஸ்ரீயுங் கிரீயுமெனச்
செம்புபொன் னாவது திருவம் பலமே.

விளக்கம்:

சிவாயநம என்னும் மந்திரத்தை மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயக்கினால் பாடல் #902 ல் உள்ளபடி செம்பு போன்ற கடினமான உடல் பொன் போல் ஜொலிக்கின்ற ஒளி உடம்பு ஆகிவிடும். அதன் பின்பு இறைவன் ஆடுகின்ற சித்தர்களின் அம்பலத்தில் சாதகர்களின் எண்ணங்கள் சென்று சேரும். அதன்பிறகு அகார உகாரத்தின் எழுத்து வடிவங்களான ஸ்ரீம் கிரீம் என்னும் மந்திரங்கள் சாதகர்களின் எண்ணத்தில் உருவாகும். அதன் பிறகு சாதகர்களின் பொன்னாக மாறிய ஒளி உடம்பு இறைவன் திருக்கூத்து ஆடுகின்ற திருஅம்பலமாகும்.

குறிப்பு: பொன்னாக மாறிய ஒளி உடம்பில் இறைவன் திருக்கூத்து ஆடுகின்றார் என்பதை அறிந்து கொள்ளலாம்.

பாடல் #904

பாடல் #904: நான்காம் தந்திரம் – 1. அசபை (உச்சரிக்கப் படாமல் மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயக்கும் மந்திரம்)

திருவம் பலமாகச் சீர்ச்சக் கரத்தைத்
திருவம் பலமாக ஈராறு கீறித்
திருவம் பலமாக இருபத் தைஞ்சு
திருவம் பலமாச் செபிக்கின்ற வாறே.

விளக்கம்:

இறைவன் திருக்கூத்தாடுகின்ற திருவம்பலத்தை ஸ்ரீ சக்கரமாக வடிவமைக்க மேலிருந்து கீழாக ஆறு கோடுகளும் இடமிருந்து வலமாக ஆறு கோடுகளும் வரைந்தால் அதில் இருபத்தைந்து கட்டங்கள் வரும். இந்த கட்டங்களுக்குள் சிவயநம எனும் மந்திர எழுத்துக்களை மாற்றி எழுதி அதை உச்சரிக்காமல் ஜெபிக்க சாதகரின் உடம்பு இறைவன் திருக்கூத்து ஆடுகின்ற திருஅம்பலமாகும்.

குறிப்பு: இப்பாடலில் வரும் ஸ்ரீசக்கரம் என்பது புடம் செய்யப்பட்ட கட்டம் வரைந்து சிவயநம என்னும் எழுத்தை எழுத தகுதிவாய்ந்த உலோகத்தை குறிக்கும்.

பாடல் #905

பாடல் #905: நான்காம் தந்திரம் – 1. அசபை (உச்சரிக்கப் படாமல் மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயக்கும் மந்திரம்)

வாறே சிவாய நமச்சி வாயநம
வாறே செபிக்கில் வரும்பேர் பிறப்பில்லை
வாறே அருளால் வளர்கூத்துக் காணலாம்
வாறே செபிக்கில் வருஞ்செம்பு பொன்னே.

விளக்கம்:

பாடல் 904ல் உள்ளபடி சிவயநம என்ற மந்திரத்தை இடைவிடாது பல காலம் உச்சரிக்காமல் மூச்சுக்காற்றோடு சேர்த்து ஜெபித்தால் பிறப்பில்லாத நிலையை அடையலாம். இறைவன் அருளால் திருவம்பலக் கூத்தின் தரிசனம் காணலாம். சாதகரின் செம்பு போன்ற கடினமான உடல் பொன் போல் ஜொலிக்கின்ற ஒளி உடம்பு ஆகிவிடும்.

பாடல் #906

பாடல் #906: நான்காம் தந்திரம் – 1. அசபை (உச்சரிக்கப் படாமல் மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயக்கும் மந்திரம்)

பொன்னான மந்திரம் புகலவும் ஒண்ணாது
பொன்னான மந்திரம் பொறிகிஞ்சு கத்தாகும்
பொன்னான மந்திரம் புகையுண்டு பூரிக்கிற்
பொன்னாக வல்லோர்க் குடம்புபொற் பாதமே.

விளக்கம்:

பாடல் #904 இல் உள்ளபடி ஸ்ரீ சக்கரத்தில் பொறிக்கப்படும் சிவயநம எனும் மந்திரம் பொன் போன்ற மந்திரமாகும். அந்த மந்திரத்தை வாயால் உச்சரிக்காமல் மூச்சுக்காற்றோடு சேர்த்து ஜெபித்தால் உடலுக்குள் இருக்கும் ஐம்புலன்களும் இறையருளால் செம்மையாகும். அதன் பிறகு மந்திரத்தோடு இழுக்கப்பட்ட மூச்சுக்காற்றை உடம்பின் அனைத்து பகுதிக்கும் செலுத்தக்கூடிய சாதகர்களின் உடம்பே இறைவனின் பொன்னான பாதங்களாக மாறும்.

பாடல் #907

பாடல் #907: நான்காம் தந்திரம் – 1. அசபை (உச்சரிக்கப் படாமல் மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயக்கும் மந்திரம்)

பொற்பாதம் காணலாம் புத்திர ருண்டாகும்
பொற்பாதத் தாணையே செம்புபொன் னாயிடும்
பொற்பாதங் காணத் திருமேனி யாயிடும்
பொற்பாத நன்னடஞ் சிந்தனை சொல்லுமே.

விளக்கம்:

பாடல் #906 இல் உள்ளபடி சாதகர்களின் உடம்பே இறைவனின் பொன்னான பாதங்களாக மாறிய பிறகு இறைவனும் தானும் வேறில்லை எனும் ஞானம் கிடைக்கும். இறைவனின் திருவடி மேல் ஆணையாக செம்பு போன்ற உடல் பொன் போன்ற ஒளி உடம்பாகும். இறைவனின் திருவடிகளை தமக்குள் தரிசிக்க இறைவனின் திருஉருவமே தாமாக உணரலாம். அவ்வாறு தரிசித்த சாதகர்களுக்கு பேரறிவு ஞானம் அடையும் வழிகள் சிந்தனையாக கிடைக்கும்.

பாடல் #908

பாடல் #908: நான்காம் தந்திரம் – 1. அசபை (உச்சரிக்கப் படாமல் மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயக்கும் மந்திரம்)

சொல்லு மொருகூட்டிற் புக்குச் சுகிக்கலாம்
நல்ல மடவார் நயந்துட னேவருஞ்
சொல்லினும் பாசச் சுடர்ப்பாம்பு நீங்கிடுஞ்
சொல்லுந் திருக்கூத்தின் சூக்குமமுந் தானே.

விளக்கம்:

பாடல் #907 இல் உள்ளபடி சாதகருக்கு கிடைத்த சிந்தனைகளை செயல்படுத்தினால் உடலை விட்டு ஆத்மா வெளியே சென்று பேரின்பத்தை அனுபவிக்கும். சாதகரின் உடலை விட்டு ஆன்மா வெளியே சென்றாலும் ஆன்மாவிற்கும் நல்ல உடலுக்குமான இணைப்பு விட்டு பிரியாமல் தானாகவே இணைந்து இருக்கும். இதனால் பாசமாகிய பற்று அறுந்து குண்டலினி சக்தி உடலைவிட்டு வெளியே சென்று பாடல் #858 இல் உள்ளபடி தலைக்கு மேல் இருக்கும் சந்திரமண்டலத்தோடு இணைந்துவிடும். இதனால் கிடைக்கும் ஞானம் இறைவன் ஆடுகின்ற திருக்கூத்துகளின் சூட்சுமங்களாகும்.

குறிப்பு: நல்ல உடல் என்பது பாடல் #902 இல் உள்ளபடி சாதகருக்கு கிடைக்கும் பொன் போன்ற ஒளி உடம்பாகும்.