பாடல் #894

பாடல் #894: நான்காம் தந்திரம் – 1. அசபை (உச்சரிக்கப் படாமல் மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயக்கும் மந்திரம்)

வாறே சதாசிவ மாறிலா ஆகமம்
வாறே சிவகதி வண்டுறை புன்னையும்
வாறே திருக்கூத் தாகம வசனங்கள்
வாறே பொதுவாகு மன்றின் அமலமே.

விளக்கம்:

ஓங்காரத்தின் அகார உகாரங்களே சதாசிவ தத்துவமாகவும், எக்காலத்திலும் மாறாத ஆகமங்களாகவும், வண்டுகள் மகிழ்ந்து தங்கும் புன்னை மரம் போல் அடியவர்கள் மகிழ்ந்து தங்கும் சிவ பரம்பொருளின் சரணாகதி திருவடிகளாகவும் தில்லையில் ஆடும் திருக்கூத்தாகவும் ஆகமங்கள் கூறும் சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நான்கு வழிமுறைகளாகவும் உலகங்கள் அனைத்திற்கும் பொதுவான தென்னாட்டு சிற்றம்பலத்தின் மலமாசுக்களை நீக்கும் பொன் மன்றமாகவும் இருக்கின்றன.

பாடல் #895

பாடல் #895: நான்காம் தந்திரம் – 1. அசபை (உச்சரிக்கப் படாமல் மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயக்கும் மந்திரம்)

அமலம் பதிபசு பாசம் ஆகமம்
அமலம் திரோதாயி யாகுமா னந்தம்
அமலம் சொல்ஆணவ மாயை காமியம்
அமலம் திருக்கூத்தா டுமிடந் தானே.

விளக்கம்:

பதி பசு பாசம் என்ற சைவ சித்தாந்தத்தை உணர்வது அமலமாகும். ஆகமங்களை உணர்வதின் மூலம் மாயையை நீங்கி கிடைக்கும் பேரானந்தம் அமலமாகும். ஆணவம் மாயை கன்மம் ஆகிய மூன்று மலங்களும் இல்லாதது அமலமாகும். இறைவன் திருக்கூத்தாடுகின்ற இடங்களெல்லாம் மல மாசுக்கள் இல்லாத தூய்மையான அமலமாகும்.

குறிப்பு: ஆணவம் மாயை கன்மம் ஆகிய மாசுக்கள் இல்லாத தூய்மை அமலம் எனப்படும்.

பாடல் #896

பாடல் #896: நான்காம் தந்திரம் – 1. அசபை (உச்சரிக்கப் படாமல் மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயக்கும் மந்திரம்)

தானே தனக்குத் தலைவனு மாய்நிற்குந்
தானே தனக்குத் தன்மலையு மாய்நிற்குந்
தானே தனக்குத் தன்மயமு மாய்நிற்குந்
தானே தனக்குத் தலைவனு மாய்ஆமே.

விளக்கம்:

இறைவன் தனக்குத் தானே குருவாக நின்றும் அனைத்தையும் தாங்கி தன்னையும் தாங்கி நிற்கும் மலையாக நின்றும் அனைத்திலும் பரவி தனக்குள்ளும் பரவி நின்றும் தனக்கு தானே இறைவனாகவும் இருக்கின்றான்.

குறிப்பு: இறைவன் தனக்குத் தானே என்னவாகவெல்லாம் இருக்கின்றார் என்பதை இப்பாடலில் அருளுகின்றார்.

பாடல் #897

பாடல் #897: நான்காம் தந்திரம் – 1. அசபை (உச்சரிக்கப் படாமல் மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயக்கும் மந்திரம்)

தலைவனு மாய்நின்ற தற்பரக் கூத்தனைத்
தலைவனு மாய்நின்ற சற்பாத் திரத்தைத்
தலைவனு மாய்நின்ற தாதவிழ் ஞானத்
தலைவனு மாய்நின்ற தாளிணை தானே.

விளக்கம்:

அனைத்திற்கும் தலைவனான இறைவன் அனைத்திற்கும் மேலான திருக்கூத்தின் தலைவனாகவும் அனைத்தையும் தாங்கி நிற்கும் சத்திய பாத்திரத்தின் தலைவனாகவும் பேரறிவான ஞானத்தின் தலைவனாகவும் இணையில்லாத திருவடிகளுக்கு தலைவனாகவும் இருக்கின்றான்.

குறிப்பு: இறைவன் எதற்கெல்லாம் தலைவனாக இருக்கின்றார் என்பதை இப்பாடலில் அருளுகின்றார்.

பாடல் #898

பாடல் #898: நான்காம் தந்திரம் – 1. அசபை (உச்சரிக்கப் படாமல் மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயக்கும் மந்திரம்)

இணையார் திருவடி எட்டெழுத் தாகும்
இணையார் கழலிணை யீரைஞ்ச தாகும்
இணையார் கழலிணை ஐம்பத்தொன் றாகும்
இணையார் கழலிணை ஏழா யிரமே.

விளக்கம்:

ஈடுஇணையில்லாத இறைவனின் திருவடிகளின் உருவமே அகாரம் உகாரம் மகாரம் எனும் மூன்று எழுத்துக்கள் சேர்ந்த ஓங்காரமாகவும் நமசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரமாகவும் இருக்கின்றது. அந்தத் திருவடிகளே உயிர்களின் உடலுக்குள் பத்துவித காற்றுக்களாகவும் மொத்தம் 51 இதழ்கள் கொண்ட ஆறு ஆதார சக்கரங்களின் 51 யோக நாடிகளாகவும் ஆதார ஏழாயிரத்திலிருந்து அதன் பரிணாமங்களில் மொத்தம் ஏழு கோடி வரையிலும் இருக்கும் மந்திரங்களாகவும் இருக்கின்றன.

குறிப்பு: இறைவனுடைய இணையில்லாத திருவடிகள் எதுவாகவெல்லாம் இருக்கின்றது என்பதை இப்பாடலில் அருளுகின்றார்.

பாடல் #899

பாடல் #899: நான்காம் தந்திரம் – 1. அசபை (உச்சரிக்கப் படாமல் மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயக்கும் மந்திரம்)

ஏழா யிரமாய் இருபதாய் முப்பதாய்
ஏழா யிரத்தும் எழுகோடி தானாகி
ஏழா யிரத்துயிர் எண்ணிலா மந்திரம்
ஏழா யிரண்டாக இருக்கின்ற வாறே.

விளக்கம்:

பாடல் #898 ல் உள்ளபடி ஆதார மந்திரங்கள் ஏழாயிரமாக இருந்தாலும் அதன் பரிணாமங்கள் இருபதாயிரமாகவும் முப்பதாயிரமாகவும் பெருகி முடிவில் ஏழு கோடி வரையில் இருக்கின்றது. இந்த மந்திரங்கள் அனைத்தும் இறைவனின் சொரூபமாகவே இருக்கின்றது. ஆதாரமான இந்த ஏழாயிரம் மந்திரங்களே ஏழு கோடி மட்டுமில்லாமல் இன்னும் பல பரிணாமங்களில் எண்ண முடியாத அளவு பெருகிக் கொண்டே இருக்கின்றன. இருந்தாலும் அத்தனை மந்திரங்களும் அகார உகாரமாகிய சிவசக்தியிலேயே அடங்கி இருக்கின்றன.

பாடல் #900

பாடல் #900: நான்காம் தந்திரம் – 1. அசபை (உச்சரிக்கப் படாமல் மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயக்கும் மந்திரம்)

இருக்கின்ற மந்திரம் ஏழா யிரமாம்
இருக்கின்ற மந்திரம் எத்திறம் இல்லை
இருக்கின்ற மந்திரம் சிவன்திரு மேனி
இருக்கின்ற மந்திரம் இவ்வண்ணந் தானே.

விளக்கம்:

அனைத்திற்கும் ஆதாரமாக இருக்கின்ற மந்திரங்கள் ஏழாயிரமாகும். இந்த மந்திரங்களுக்குள் இல்லாத சக்திகளே இல்லை. இந்த மந்திரங்கள் அனைத்தும் இறைவனின் திரு உருவமாக இருக்கின்றது. உள்ளம் உருக சொன்னால் பலனளிக்கக் கூடியதாக இருக்கும் அனைத்து மந்திரங்களும் இறைவனின் திருஉருவமாகவே இருக்கின்றன.

பாடல் #901

பாடல் #901: நான்காம் தந்திரம் – 1. அசபை (உச்சரிக்கப் படாமல் மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயக்கும் மந்திரம்)

தானே தனக்குத் தகுநட்டந் தானாகும்
தானே அகார உகாரம தாய்நிற்கும்
தானே ரீங்காரத்து தத்துவக் கூத்துக்குத்
தானே உலகில் தனிநடனந் தானே.

விளக்கம்:

உலகில் இறைவன் ஆடுகின்ற திருக்கூத்து தாண்டவங்களுக்கு தகுந்த தாளமாகவும் தாள மந்திரமான ஓங்காரத்தில் அகார உகாரமாகவும் தாளங்களின் ஓசையாகவும் தாண்டவ நடனமாகவும் இறைவன் ஒருவனே இருக்கின்றான்.

குறிப்பு: இறைவனின் தாண்டவங்களில் எதுவாகவெல்லாம் அவனே இருக்கின்றான் என்பதை இப்பாடலில் அறியலாம்.

பாடல் #902

பாடல் #902: நான்காம் தந்திரம் – 1. அசபை (உச்சரிக்கப் படாமல் மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயக்கும் மந்திரம்)

நடமிரண் டொன்றே நளினம தாகும்
நடமிரண் டொன்றே நமன்செய்யுங் கூத்து
நடமிரண் டொன்றே நகைசெயா மந்திரம்
நடம்சிவ லிங்கம் நலம்செம்பு பொன்னே.

விளக்கம்:

இறைவன் தாம் ஒருவனாகவே ஆடுகின்ற திருநடனங்கள் இரண்டு வகையாகும். அதில் முதலாவது அனைத்தையும் உருவாக்குகின்ற அழகிய ஆனந்த நடனம். இரண்டாவது அனைத்தையும் அழிக்கின்ற ருத்ர தாண்டவ கூத்தாகும். இந்த நடனம் கூத்து இரண்டையும் மகிழ்ச்சியோ துன்பமோ இல்லாமல் சமமாகப் பார்க்க வைக்கும் பிரணவ மந்திரத்தை உணர்ந்து இந்த இரண்டு திருநடனங்களின் உருவமாக இருக்கும் சிவலிங்கத் தத்துவமே தமக்குள்ளும் இருக்கிறது என்பதை உணர்ந்த சாதகர்களுக்கு செம்பு போன்ற கடினமான உடல் பொன் போல் ஜொலிக்கின்ற ஒளி உடம்பு ஆகிவிடும்.

பாடல் #903

பாடல் #903: நான்காம் தந்திரம் – 1. அசபை (உச்சரிக்கப் படாமல் மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயக்கும் மந்திரம்)

செம்புபொன் னாகுஞ் சிவாய நமஎன்னில்
செம்புபொன் னாகத் திரண்டது சிற்பரஞ்
செம்புபொன் னாகும் ஸ்ரீயுங் கிரீயுமெனச்
செம்புபொன் னாவது திருவம் பலமே.

விளக்கம்:

சிவாயநம என்னும் மந்திரத்தை மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயக்கினால் பாடல் #902 ல் உள்ளபடி செம்பு போன்ற கடினமான உடல் பொன் போல் ஜொலிக்கின்ற ஒளி உடம்பு ஆகிவிடும். அதன் பின்பு இறைவன் ஆடுகின்ற சித்தர்களின் அம்பலத்தில் சாதகர்களின் எண்ணங்கள் சென்று சேரும். அதன்பிறகு அகார உகாரத்தின் எழுத்து வடிவங்களான ஸ்ரீம் கிரீம் என்னும் மந்திரங்கள் சாதகர்களின் எண்ணத்தில் உருவாகும். அதன் பிறகு சாதகர்களின் பொன்னாக மாறிய ஒளி உடம்பு இறைவன் திருக்கூத்து ஆடுகின்ற திருஅம்பலமாகும்.

குறிப்பு: பொன்னாக மாறிய ஒளி உடம்பில் இறைவன் திருக்கூத்து ஆடுகின்றார் என்பதை அறிந்து கொள்ளலாம்.