பாடல் #1457: ஐந்தாம் தந்திரம் – 7. யோகம் (இறைவனை அடைவதற்கு அசையாத மனதுடன் செய்வதே யோகம் ஆகும்)
நெறிவழி யேசென்று நேர்மையி லொன்றித்
தறியிருந் தாப்போலத் தம்மை யிருத்திச்
சொறியினுந் தாக்கினுந் துண்ணென் றுணராக்
குறியறி வாளர்குக் கூடலு மாமே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
நெறிவழி யெசெனறு நெரமையி லொனறித
தறியிருந தாபபொலத தமமை யிருததிச
சொறியினுந தாககினுந துணணென றுணராக
குறியறி வாளரகுக கூடலு மாமெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
நெறி வழியே சென்று நேர்மையில் ஒன்றி
தறி இருந்தால் போல தம்மை இருத்தி
சொறியினும் தாக்கினும் துண் என்று உணரா
குறி அறிவாளர்கு கூடலும் ஆமே.
பதப்பொருள்:
நெறி (இறைவனை அடைவதற்கு என்று குருநாதர் அருளிய நெறிமுறைகளின்) வழியே (வழியாகவே) சென்று (மனதை செலுத்தி) நேர்மையில் (அந்த வழிமுறையில் சிறிது அளவும் குறை இல்லாமல் முறைப்படி செய்து) ஒன்றி (அதிலேயே மனதை ஒன்றி வைத்து)
தறி (தரையில் ஊன்றி வைத்த கழி) இருந்தால் (அசையாமல் இருப்பதைப்) போல (போலவே) தம்மை (தாமும்) இருத்தி (எதனாலும் அசையாமல் இருந்து)
சொறியினும் (மழை பொழிந்தாலும் / மனது எங்கோ உள்ளுக்குள் அழைத்து சென்றாலும்) தாக்கினும் (காற்று அடித்தாலும் / சுற்றுப் புறத்தில் எது நடந்தாலும்) துண் (அசையாத கழியைப் போலவே அதனால் பயம்) என்று (என்ற) உணரா (உணர்வே சிறிது அளவும் இல்லாமல்)
குறி (இறைவனை அடைவது மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு) அறிவாளர்கு (அவனை தமக்குள் அறிந்து தெளிந்தவர்களுக்கு) கூடலும் (இறைவனோடு ஒன்றாக கூடுவது) ஆமே (இயலும்).
விளக்கம்:
இறைவனை அடைவதற்கு என்று குருநாதர் அருளிய நெறிமுறைகளின் வழியாகவே மனதை செலுத்தி அந்த வழிமுறையில் சிறிது அளவும் குறை இல்லாமல் முறைப்படி செய்து அதிலேயே மனதை ஒன்றி வைத்து தரையில் ஊன்றி வைத்த கழி அசையாமல் இருப்பதைப் போலவே தாமும் எதனாலும் அசையாமல் இருந்து, மழை பொழிந்தாலும் காற்று அடித்தாலும் அதனால் சிறிதும் அசையாத கழியைப் போலவே தம்மை சுற்றி எது நடந்தாலும் அதனால் பயம் என்ற உணர்வே சிறிது அளவும் இல்லாமல் இறைவனை அடைவது மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு அவனை தமக்குள் அறிந்து தெளிந்தவர்களுக்கு இறைவனோடு ஒன்றாக கூடுவது இயலும்.