பாடல் #673: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)
முடிந்திட்டு வைத்து முயங்கிலோ ராண்டில்
அணிந்த அணிமாகை தானாம் இவனுந்
தணிந்தவப் பஞ்சினுந் தானொய்ய தாகி
மெலிந்தங் கிருந்திடும் வெல்லவொண் ணாதே.
விளக்கம்:
அணிமா சக்தி கைவரப் பெற்றபின் ஓராண்டு யோகப் பயிற்சிகளை விடாமல் செய்து வந்தால் அணிமா சித்தியானது நிரந்தரமாகக் கைவரப் பெறும். அவ்வாறு பெற்றபின் யோகப் பயிற்சி செய்தவரின் உடல் பஞ்சைவிட மெலியதாகி இருந்தாலும் வலிமையானதாகவும் எவராலும் வெல்ல முடியாததாகவும் இருக்கும்.
கருத்து: அணிமா சித்தி கைவரப் பெற்றபின் ஓராண்டு விடாமல் பயிற்சி செய்துவர நிரந்தரமாகி உடல் பஞ்சைவிட மெலியதாகி எவராலும் வெல்லமுடியாமல் இருக்கும்.