பாடல் #597: மூன்றாம் தந்திரம் – 7. தாரணை (பிரத்தியாகாரம் மூலம் உள்ளே ஒருநிலைப்படுத்திய மனதை நிலைத்திருக்க வைத்தல்)
அரித்த வுடலைஐம் பூதத்தில் வைத்து
பொருத்தஐம் பூதஞ்சத் தாதியிற் போந்து
தெரித்த மனாதிசத் தாதியிற் செல்லத்
தரித்தது தாரணை தற்பரத் தோடே.
விளக்கம்:
ஆற்று வெள்ளம் கரையினை அரித்துப் பாழாக்குவது போல ஐம்பூதங்களான மெய் (உணர்வது) கண் (பார்ப்பது) காது (கேட்பது) மூக்கு (நுகர்வது) வாய் (சுவைப்பது) ஆகிய ஐம்புலன்கள் உடம்பினை அரித்துப் பாழாக்குகின்றது. ஐம்புலன்களும் உடலுக்குள் அடங்கும் முறையை உணர்ந்தால் உலகம் அழியக்கூடியது சிவமே அழியாதது என்ற உண்மையை உணரலாம். அவ்வாறு உணர்ந்து விட்டால் உலகப்பற்று அறுந்துவிடும். உடலைக் கட்டுப்படுத்தும் ஐம்பூதங்களையும் மனதால் கட்டுப்படுத்த வேண்டும். வெளியே உள்ள ஐம்பூதங்களின் (உணர்ச்சி, காட்சி, சத்தம், வாசனை, சுவை) உணர்வுகளை உள்ளுக்குள் உணர வேண்டும். மனதை மூலாதாரத்தில் ஒருநிலைப்படுத்த வேண்டும். உடலில் இருக்கும் ஆத்மாவை இறைவனோடு சேர்த்தல் வேண்டும். இவை அனைத்தும் செய்வதே தாரணை எனப்படும்.