பாடல் #595: மூன்றாம் தந்திரம் – 7. தாரணை (பிரத்தியாகாரம் மூலம் உள்ளே ஒருநிலைப்படுத்திய மனதை நிலைத்திருக்க வைத்தல்)
நிரம்பிய ஈரைந்தில் ஐந்திவை போனால்
இரங்கி விழித்திருந் தென்செய்வை பேதாய்
வரம்பினைக் கோலி வழிசெய்கு வார்க்குக்
குரங்கினைக் கோட்டை பொதியலு மாமே.
விளக்கம்:
உடம்பில் உள்ள பத்துவித வாயுக்களில் முக்கியமான ஐந்து வாயுக்களை பிராணாயாம முறைப்படி கட்டுப்படுத்தி வெளியே விடாமல் வீணாக வெளியேற்றுபவர்கள் இந்த உலகில் வெறுமனே உயிர் வாழ்ந்து எந்தப் பயனையும் அடையமாட்டார்கள். அந்த ஐந்து வாயுக்களையும் வீணாக்காமல் பிராணாயாம முறையில் கூறிய அளவுகளின்படி அடக்கி வெளியே விடுபவர்களுக்கு மனமாகிய குரங்கை ஒருமுகப்படுத்தி உடம்பின் உள்ளேயே நிலைத்திருக்கும்படி வைக்க முடியும்.
உடலிலுள்ள பத்துவித வாயுக்கள்:
- பிராணன் – உயிர்க்காற்று
- அபாணன் – மலக் காற்று
- வியானன் – தொழிற்காற்று
- உதானன் – ஒலிக்காற்று
- சமானன் – நிரவுக்காற்று
- நாகன் – விழிக்காற்று
- கூர்மன் – இமைக்காற்று
- கிருகரன் – தும்மற் காற்று
- தேவதத்தன் – கொட்டாவிக் காற்று
- தனஞ்செயன் – வீங்கல் காற்று
முறைப்படி கட்டுப்படுத்தி வெளியே விடவேண்டிய ஐந்து வாயுக்கள்:
- பிராணன் – உயிர்க்காற்று
நுரையீரலில் இருந்து மேல் நோக்கிச் செல்வது. பசியையும், தாகத்தையும் ஏற்படுத்துவது. உணவை செரிமானம் செய்வது. - அபாணன் – மலக் காற்று
உடற்கழிவுகளான மலம், ஜலம், சுக்கிலம் (விந்து), சுரோணிதம் (கரு முட்டை) ஆகியவற்றை வெளியேற்ற உதவுவது. - வியானன் – தொழிற்காற்று
உடல் முழுவதும் பரவி தொடு உணர்ச்சியை உணர வைப்பது ஜீரணமான உணவை சத்து வேறாகவும் சக்கை வேறாகவும் பிரிக்கும் பணியைச் செய்வது. - உதானன் – ஒலிக்காற்று
தொண்டையில் இருந்து கொண்டு உணவை விழுங்கச்செய்வது, ஏப்பம் வரச்செய்வது, குறட்டை வரச்செய்வது, உறங்கும் போது ஐம்புலன்களுக்கும் ஓய்வு கொடுப்பதும் விழித்த பின்பு ஐம்புலன்களின் இயல்பிற்கேற்ப மறுபடியும் இயங்கச் செய்வது. - சமானன் – நிரவுக்காற்று
தொப்புள் பகுதியில் இருந்து கொண்டு உணவின் சத்தையெல்லாம் எல்லா உறுப்புகளுக்கும் அதனதன் தேவைக்கேற்ப பகிர்ந்து அளிப்பது.
காற்று வகைகளில் இத்தனை வகைகளா?
காற்றில் இத்தனை வகைகள் உள்ளது. அந்த காற்று தான் உடம்பில் பல வேலைகளைப் பார்த்து கொண்டிருக்கின்றது.