பாடல் #593: மூன்றாம் தந்திரம் – 7. தாரணை (பிரத்தியாகாரம் மூலம் உள்ளே ஒருநிலைப்படுத்திய மனதை நிலைத்திருக்க வைத்தல்)
வாய்திற வாதார் மனத்திலோர் மாடுண்டு
வாய்திறப் பாரே வளியிட்டுப் பாய்ச்சுவர்
வாய்திற வாதார் மதியிட்டு மூட்டுவர்
கோய்திற வாவிடிற் கோழையு மாமே.
விளக்கம்:
பேசாமல் மெளன நிலையில் இருப்பவர்களின் மனதில் பிராணன் என்னும் பெரும் செல்வம் உள்ளது. அவ்வாறு மெளன நிலையில் இல்லாமல் பேசிக்கொண்டே இருப்பவர்கள் அந்தப் பிராணனாகிய செல்வத்தை வீணாக்குகின்றார்கள். பேசாமல் மெளன நிலையில் இருப்பவர்கள் தங்கள் அறிவை அந்தப் பிராணனாகிய செல்வத்தின் மீது செலுத்தி அதை சுழுமுனை வழியாகத் தலை உச்சியிலிருக்கும் சகஸ்ரதளத்திற்கு கொண்டு சென்று அந்தச் செல்வத்தை அடைவார்கள். அவ்வாறு பிராணனாகிய செல்வத்தை சுழுமுனை வழியாக மேலே உள்ள சகஸ்ரதளத்திற்குக் கொண்டு செல்லும் பயிற்சியை செய்யாமல், பெரும் செல்வத்தை மட்டும் அடைய நினைப்பவர்கள் கோழையாவார்கள்.