பாடல் #590: மூன்றாம் தந்திரம் – 7. தாரணை (பிரத்தியாகாரம் மூலம் உள்ளே ஒருநிலைப்படுத்திய மனதை நிலைத்திருக்க வைத்தல்)
மேலை நிலத்தினாள் வேதகப் பெண்பிள்ளை
மூல நிலத்தில் எழுகின்ற மூர்த்தியை
ஏல எழுப்பி இவளுடன் சந்திக்கப்
பாலனும் ஆவான் பார்நந்தியின் ஆணையே.
விளக்கம்:
மூலாதாரத்தில் இருக்கும் குண்டலினியாகிய இறைவனை சுழுமுனை வழியே மேல் நோக்கி எடுத்துச் சென்று தலை உச்சியிலிருக்கும் சகஸ்ரதளத்தில் இருக்கும் சக்தியுடன் சேர்த்துவிட்டால் அமுதம் சுரந்து அதன் விளைவாக வயதானவரும் வாலிபனாக மாறி என்றும் இளமையுடன் இருப்பார். இது உலகாளும் நந்தியின் ஆணை.