பாடல் #402: இரண்டாம் தந்திரம் – 9. சர்வ சிருஷ்டி (அனைத்தும் உருவாகிய முறை)
வாரணி கொங்கை மனோன்மணி மங்கலி
காரண காரிய மாகக் கலந்தவள்
வாரணி ஆரணி வானவர் மோகினி
பூரணி போதஅதி போதமு மாமே.
விளக்கம்:
சூரிய சந்திரனை மார்புக் கச்சையாக சூடியிருக்கும் சிவனின் சக்தியான மனோன்மணி மங்கள சொரூபமானவள். அவளே அனைத்திற்கும் காரணமாகிய அசையா சக்தியான இறைவனுடன் அசையும் சக்தியாகவும் உலக காரியங்களை செய்யும் சிவன், மகேசுவரன், உருத்திரன், திருமால், பிரம்மன் ஆகியோருடன் காரிய சக்திகளாகவும் கலந்து நிற்கின்றாள். அவளே ஓங்கார வடிவாகவும் அழிக்கும் தொழிலில் வாரணியாகவும் படைக்கும் தொழிலில் ஆரணியாகவும் காக்கும் தொழிலில் வானவர் கொண்டாடும் மோகினியாகவும், மறைக்கும் தொழிலில் பூரணியாகவும் பேரறிவாக இருக்கின்றாள்.
உட்கருத்து: அசையா சக்தியாகிய இறைவனின் அசையும் சக்தியாகிய இறைவி உலகம் உருவாக வேண்டும் என்கிற காரணத்தில் பேரறிவு ஞானமாக இருந்து அதை செயலாக்கும் பொருட்டு காரிய சக்திகளாக ஐந்து தேவர்களுடன் ஐந்து தேவிகளாக இருந்து அனைத்தையும் செயல்படுத்துகின்றாள்.
காரணம் – இறைவன் (அசையாசக்தி) – இறைவி (அசையும்சக்தி) – அனைத்தும் உருவாக்குதல்
காரியம் – பிரம்மன் – ஆரணி (சரஸ்வதி) – படைத்தல்
காரியம் – திருமால் – மோகினி (இலட்சுமி) – காத்தல்
காரியம் – உருத்திரன் – வாரணி – அழித்தல்
காரியம் – மகேஸ்வரன் – பூரணி (உமா மகேஸ்வரி) – மறைத்தல்
காரியம் – சிவன் – மனோன்மணி (பார்வதி) – அருளல்
அனைத்தும் சத்தியவாக்கு நந்தியின் அருளால் மூலனின் பெருந்தன்மை யால் இறைவழி நிற்கும் அறவோருக்கு கிடைத்த அற்புத ஆகம நூல்!
அந்தணர் ஒழுக்கத்தில் நான்கு பாடல்கள் உங்களிடம் குறைவது பற்றி பரிசீலனை செய்யவும்.
முனீந்திரன்
வணக்கம்
வலைதளத்தில் அந்தணர் ஒழுக்கத்தில் 14 பாடல்கள் சரியாக உள்ளது. நன்றி