பாடல் #399: இரண்டாம் தந்திரம் – 9. சர்வ சிருஷ்டி (அனைத்தும் உருவாகிய முறை)
உற்றமுப் பாலொன்று மாயாள் உதயமாம்
மற்றைய மூன்றுமா மாயோ தயம்விந்து
பெற்றவள் நாதம் பரையிற் பிறத்தலால்
துற்ற பரசிவன் தொல்விளை யாட்டிதே.
விளக்கம்:
மாயையாகிய சக்தியிலிருந்து சுத்த மாயை, அசுத்த மாயை, பிரகிருதி மாயை என மூன்றும் தோற்றுவிக்கப்படுகின்றன. படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்றும் சுத்த மாயையின் தொழிலாகும். இந்த மாயைகளைத் தாண்டி ஒலியும் ஒளியும் இருக்கின்றது. இவை இரண்டும் அசையும் சக்தியாகிய பரையிடமிருந்து பிறப்பதால் இவை அனைத்தும் அசையாத சக்தியாகிய பரம்பொருள் சதாசிவமூர்த்தியின் திருவிளையாடலால் உருவானவையே ஆகும்.
உட்கருத்து: அசையாத சக்தியாகிய பராவிடம் திருவிளையாடல் புரிய எண்ணம் தோன்றும்போது அசையும் சக்தியாகிய பரையிடமிருந்து ஒளியும் ஒலியும் தோன்றுகின்றது. இதிலிருந்து மாயைகள் அனைத்தும் உருவாகின்றது. இவை அனைத்துமே அசையாத சக்தியாகிய பரம்பொருளின் திருவிளையாடலாகும்.