பாடல் #397: இரண்டாம் தந்திரம் – 9. சர்வ சிருஷ்டி (அனைத்தும் உருவாகிய முறை)
புகுந்தறி வான்புவ னாபதி அண்ணல்
புகுந்தறி வான்புரி சக்கரத் தண்ணல்
புகுந்தறி வான்மலர் மேலுறை புத்தேள்
புகுந்தறி யும்முடிக் காகிநின் றாரே.
விளக்கம்:
உலகத்தை அழிக்கும் உருத்திரனும் சங்கு சக்கரத்தைத் தரித்து காக்கின்ற திருமாலும் தாமரை மலரின் மேல் அமர்ந்து படைக்கின்ற பிரம்மனும் தாங்கள் செய்ய வேண்டியது என்ன என்பதை தமக்குள் புகுந்து தம்மோடு கலந்து நிற்கும் பரம்பொருளாகிய சதாசிவமூர்த்தியை உணர்ந்து அறிந்து கொள்வதனால் பரம்பொருளின் விருப்பத்தை செய்லாக்கும் கருவிகளாகவே இவர்கள் மூவரும் இருக்கின்றார்கள்.
உட்கருத்து: உயிர்கள் சென்று அடைய வேண்டியது அழிக்கின்ற உருத்திரனையோ காக்கின்ற திருமாலையோ படைக்கின்ற பிரம்மனையோ இல்லை. இவர்கள் மூவரையும் தம் விருப்பத்தை செயலாக்கும் படி வைத்து இயக்கும் பரம்பொருளாகிய சதாசிவமூர்த்தியை அடைந்தால் மட்டுமே பாடல் #396 இல் கூறியுள்ளபடி உயிர்களின் உலகச் சுழற்சி முற்றுப் பெறும்.