பாடல் #396: இரண்டாம் தந்திரம் – 9. சர்வ சிருஷ்டி (அனைத்தும் உருவாகிய முறை)
ஒருவன் ஒருத்தி விளையாடல் உற்றார்
இருவர் விளையாட்டும் எல்லாம் விளைக்கும்
பருவங்கள் தோறும் பயன்பல வான
திருவொன்றிற் செய்கை செகமுற்று மாமே.
விளக்கம்:
பரம்பொருள் அனைத்தையும் உருவாக்க வேண்டும் என்கிற எண்ணத்தால் சிவமாகவும் சக்தியாகவும் வெளிப்பட்டு இருவரின் திருவிளையாடலால் அனைத்தும் உருவாகும். அப்படி உருவாகிய அனைத்தும் காலத்திற்கு ஏற்ற மாதிரியும் அவைகள் அடைந்த பக்குவத்திற்கு ஏற்ற மாதிரியும் பலவகையான வினைப் பயன்களைப் பெறும். எப்போது இறைவனது திருவிளையாட்டால் உருவாகிய ஒன்று இறைவனிடமே சென்று சேர்கின்றதோ அப்போது அதன் உலக வாழ்க்கை முற்றுப் பெற்றுவிடும்.
உட்கருத்து: உலகத்தில் அனைத்தும் இறைவனது திருவிளையாட்டால்தான் உருவாகின்றது. அவை பிறந்து, வாழ்ந்து, இறந்து மீண்டும் பிறக்கும் உலகச் சுழற்சி அந்தந்த ஆன்மாக்களின் காலத்திற்கு ஏற்ற பக்குவத்தைப் பொறுத்து வினைப் பயனாக அமையும். எப்போது இறைவனிடமிருந்து வெளிவந்த ஆன்மா அதன் வினைப் பயன் முழுவதையும் கழித்து இறைவனிடமே சென்று கலந்து விடுகின்றதோ அப்போது அதன் உலகச் சுழற்சி முற்றுப் பெற்றுவிடுகிறது.