பாடல் #394: இரண்டாம் தந்திரம் – 9. சர்வ சிருஷ்டி (அனைத்தும் உருவாகிய முறை)
நின்றுயி ராக்கு நிமலன்என் னாருயிர்
ஒன்றுயி ராக்கும் அளவை உடலுற
முன்துய ராக்கும் உடற்குந் துணையதா
நன்றுஉயிர்ப் பானே நடுவுநின் றானே.
விளக்கம் :
உடலில் ஆன்மாவை வைத்து உயிராக மாற்றுபவன் என் ஆருயிர் இறைவனே உயிர்களிடத்தில் கொண்ட மாபெரும் கருணையினால் உடலில் இணைந்த ஆன்மாவுடன் உயிராகக் கலந்து இருக்கின்றான். முன்பிறவியின் வினைகளைத் தீர்க்க வேண்டிப் பிறவி எடுத்த அந்த உயிரின் காலம் முடியும் வரை அந்த உயிர் செய்யும் எந்த செயலிலும் தலையிடாமல் நடு நிலையாக நின்று கவனித்துக் கொண்டு அந்த உயிர் வாழ வேண்டிய காலம் வரை அந்த உயிரின் உடலோடு ஒன்றாகக் கலந்து நன்றாகக் காத்துக் கொண்டு நிற்கின்றான் இறைவன்.