பாடல் #219: முதல் தந்திரம் – 11. அக்கினி காரியம் (யாகம் / வேள்வி செய்வதன் முக்கியத்துவம்)
பாழி அகலும் எரியும் திரிபோலிட்
டூழி அகலும் உறுவினை நோய்பல
ஆழி செய்தங்கி உதிக்க அவைவிழும்
வீழி செய்துஅங்கி வினைசுடு மாமே.
விளக்கம்:
இரவு நேர இருளை நீக்க ஆழமான அகல் விளக்கில் எண்ணெய் ஊற்றித் திரியை இட்டு எரித்து ஒளியைப் பெறுவது போல பிறக்கும்போதே உயிர்களுடன் பிறக்கும் வினைகளையும் அவற்றின் பயனால் வரும் பலவித துன்பங்களையும் நீக்க யாகக் குழி ஏற்படுத்தி அதில் நெய்யை ஊற்றித் திரிபோல குச்சிகளை இட்டு முறைப்படி மந்திரங்கள் ஓதி யாகம் செய்தால் அந்த யாகத்திலிருந்து தோன்றும் இறைஜோதியானது மேலெழும்பிய உடனே வினைகளை சுட்டு எரித்து விடும் வினையினால் ஏற்பட்ட துன்பங்கள் அனைத்தும் விழுந்துவிடும்.
கருத்து: மோட்சத்திற்குத் தடையாக இருப்பதும் பிறந்த பிறவியில் துன்பங்களைத் தருவதும் பிறப்போடு உடன்வரும் வினைகளே ஆகும். அந்த வினைகளும் அதனால் ஏற்படும் துன்பங்களும் நீங்கி நிரந்தர மோட்சம் கிடைக்க முறையாக மூட்டிய வேள்வித்தீ உதவி செய்யும்.