பாடல் #216: முதல் தந்திரம் – 11. அக்கினி காரியம் (யாகம் / வேள்வி செய்வதன் முக்கியத்துவம்)
அணைதுணை அந்தணர் அங்கியுள் அங்கி
அணைதுணை வைத்ததின் உட்பொரு ளான
இணைதுணை யாமத் தியங்கும் பொழுது
துணையணை யாயதோர் தூய்நெறி யாமே.
விளக்கம்:
உயிர்களைக் காத்துக் கொண்டு அவற்றின் துணையாக கூடவே இருப்பது அந்தணர் வளர்க்கும் வேள்வித் தீயினுள் ஜோதியாக இருக்கும் இறைவனே ஆகும். உயிர்களைக் காத்து துணையாக இருக்கும் இறைவன் அருள் வேண்டி அந்தணர்கள் வேள்விகளை முறையாக செய்ய வேண்டும். முறையாக செய்யப்படும் வேள்வியில் இருக்கும் இறைவனுடன் ஹோமத் தீ இணைந்து வளரும் போது அதன் பயனால் கிடைக்கும் இறையருளே உயிர்களுக்கு துணையாக இருந்து அவர்களை முக்தி பெறும் தூய்மையான வழியில் நடத்திச் சென்று முக்தியையும் அளித்துவிடும்.