பாடல் #208: முதல் தந்திரம் – 9. மகளிரிழிவு (பெண்களின் மேல் கொண்ட காமத்தால் பெறும் இழிவு)
கோழை ஒழுக்கங் குளமூடு பாசியில்
ஆழ நடுவார் அளப்புறு வார்களைத்
தாழத் துடக்கித் தடுக்ககில் லாவிடில்
பூழை நுழைந்துஅவர் போகின்ற வாறே.
விளக்கம்:
உணவாக மாறும் விளையும் பயிரை பாசிபடிந்த குளத்தின் அடியில் நட்டால் அது விளையாமல் பாசியோடு பாசியாகி அழிந்து போய்விடும். அதே குளத்தைப் பாசி நீக்கித் தூர்வாரி வரும் நீரை சேமித்தால் அந்த நீர் பெரும் விளைச்சலுக்கு உதவும். அதுபோலவே இல்லறத்தின் மூலம் பிள்ளைகள் பெற்று சந்ததி வளர உபயோகமாகும் விந்துவை பொது மகளிரின் மேல் மோகம் கொண்டு அவர்களின் பாசிபடிந்த கருவறைக்குள் நட்டுவைத்து அதில் இன்பம் காண்பவர்களை உண்மை அறிவுள்ளவர்கள் தடுத்து அவர்களின் மயக்கத்தைப் போக்க முயலாவிட்டால் தம் குலமும் தம்மால் பிறக்குக் கிடைக்க வேண்டிய நலமும் கெட்டு அதனால் பல இழிவுகள் ஏற்பட்டுப் பின்பு இறந்தும் போவார்கள்
கருத்து: உரிமையில்லாத பெண்களைக் கூடுவது கெடுதல் என்பதைப் புரிந்துகொள்ளாமல் அதில் கிடைக்கும் இன்பத்திலேயே திளைத்திருக்கும் மூடர்களை தடுத்து நிறுத்தி சரியான பாதையைக் காட்டி வழி நடத்துதல் அறிவுள்ளவர்களின் கடமையாகும். அப்படிச் செய்வதனால் மூடர்கள் நலம் பெறுவது மட்டுமின்றி அவர்களால் பலரும் நலம் பெறுவார்கள்.
தங்கள் சேவைக்கு மிக்க நன்றிகள்…✌✨