பாடல் #1807: ஏழாம் தந்திரம் – 9. திருவருள் வைப்பு (இறைவன் கொடுத்த அருளை காப்பாற்றுதல்)
சிவமோடு சத்தி திகழ்நாத விந்துத்
தவமான வைமுக னீச னரனும்
பவமுறு மால் பதுமத்தோ னிறுதி
நவமவை யாகி நடிப்பவன் றானே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
சிவமொடு சததி திகழநாத விநதுத
தவமான வைமுக னீச னரனும
பவமுறு மால பதுமததொ னிறுதி
நவமவை யாகி நடிபபவன றானே.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
சிவமோடு சத்தி திகழ் நாதம் விந்து
தவம் ஆன ஐம் முகன் ஈசன் அரனும்
பவம் உறு மால் பதுமத்தோன் இறுதி
நவம் அவை ஆகி நடிப்பவன் தானே.
பதப்பொருள்:
சிவமோடு (ஆதி பராபரனாகிய சிவத்தோடு) சத்தி (ஆதி பராபரையாகிய சக்தியும்) திகழ் (அதற்குள்ளிருந்து தோன்றுகின்ற) நாதம் (ஒலியாகிய சத்தமும்) விந்து (ஒளியாகிய வெளிச்சமும்)
தவம் (பெரும் தவங்கள் புரிந்து தகுதி பெற்று) ஆன (இறை நிலையை அடைந்த) ஐம் (ஐந்து) முகன் (முகங்களைக் கொண்டு) ஈசன் (அருளுகின்ற சதாசிவனும்) அரனும் (அழிக்கின்ற உருத்திரனும்)
பவம் (உலகத்தை காப்பதில்) உறு (மிகுதியாக நிற்கின்ற) மால் (திருமாலும்) பதுமத்தோன் (தாமரை மலரின் மேல் தவம் புரிந்து படைக்கின்ற பிரம்மனும்) இறுதி (கடைசியாக)
நவம் (மொத்தம் ஒன்பது) அவை (வகையான இறை சக்திகள்) ஆகி (ஆக உருமாறி) நடிப்பவன் (நடிக்கின்றவன்) தானே (ஆதிப் பரம்பொருளாகிய இறைவன் ஒருவன் தான்).
விளக்கம்:
அண்ட சராசரங்கள் அனைத்திலும் ஆதி பராபரனாகிய சிவம், ஆதி பராபரையாகிய சக்தி, அவர்களுக்கு உள்ளிருந்து தோன்றுகின்ற ஒலியாகிய சத்தம், ஒளியாகிய வெளிச்சம், பெரும் தவங்கள் புரிந்து தகுதி பெற்று இறை நிலையை அடைந்த ஐந்து முகங்களைக் கொண்டு அருளுகின்ற சதாசிவன், அழிக்கின்ற உருத்திரன், உலகத்தை காப்பதில் மிகுதியாக நிற்கின்ற திருமால், தாமரை மலரின் மேல் தவம் புரிந்து படைக்கின்ற பிரம்மன் ஆகிய ஒன்பது விதமான இறை சக்திகளாக உருமாறி நடித்துக் கொண்டு இருக்கின்றவன் ஆதிப் பரம்பொருளாகிய இறைவன் ஒருவனே.