பாடல் #1805: ஏழாம் தந்திரம் – 9. திருவருள் வைப்பு (இறைவன் கொடுத்த அருளை காப்பாற்றுதல்)
ஆயு மறிவோ டறியாத மாமாயை
யாய கரணம் படைக்கு மைம்பூதமு
மாய பலவிந் திரிய மவற்றுட
னாய வருடைந்து மாயருட் செய்கையே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
ஆயு மறிவொ டறியாத மாமாயை
யாய கரணம படைககு மைமபூதமு
மாய பலவிந திரிய மவறறுட
னாய வருடைநது மாயருட செயகையெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
ஆயும் அறிவோடு அறியாத மா மாயை
ஆய கரணம் படைக்கும் ஐம் பூதமும்
ஆய பல இந்திரியம் அவற்றுடன்
ஆய அருள் ஐந்து மா அருள் செய்கையே.
பதப்பொருள்:
ஆயும் (ஆராய்ந்து அறிகின்ற) அறிவோடு (அறிவின் துணையோடு) அறியாத (அறிந்து கொள்ள முடியாத) மா (மாபெரும்) மாயை (மாயை)
ஆய (ஆக இருப்பது) கரணம் (அந்தக் கரணங்களும்) படைக்கும் (அதன் மூலம் படைக்கப்படும்) ஐம் (ஐந்து) பூதமும் (பூதங்களும்)
ஆய (கொண்ட உடம்பாக இருப்பது) பல (பல விதமான) இந்திரியம் (இந்திரியங்கள்) அவற்றுடன் (அவற்றோடு சேர்ந்து)
ஆய (அனைத்தையும் உருவாக்குகின்ற) அருள் (அருளானது) ஐந்து (ஐந்து விதமான) மா (மாபெரும்) அருள் (இறையருளின்) செய்கையே (செயல்களாலே ஆகும்).
விளக்கம்:
புலன்களால் ஆராய்ந்து அறியக்கூடிய உலக அறிவின் துணையால் அறிந்து கொள்ள முடியாத மாபெரும் மாயையாக இருக்கின்ற இறைவன் ஐந்து பூதங்களையும் (நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம்), அந்த ஐம்பூதங்களால் ஆகிய உடலையும், அந்த உடலுக்குள் அந்தக் கரணங்களாக இருக்கின்ற நான்கு விதமான (மனம், புத்தி, சித்தம், அகங்காரம்) உள் உணர்வுகளையும், அந்த உயிருக்கு பல விதமான தத்துவங்களாகவும், அந்த தத்துவமாக இருக்கின்ற ஐந்து விதமான (கண், காது, மூக்கு, வாய், மெய்) இந்திரியங்களையும் தமது படைத்தல், காத்தல், மறைத்தல், அருளல், அழித்தல் ஆகிய ஐந்து தொழில்களின் மூலமே உருவாக்கி அருளுகின்றான்.
இறைவனின் ஐந்து தொழில்கள்:
படைத்தல் – தம்முடைய பேரான்மாவிலிருந்து ஆசையின் காரணமாக பிரிந்த ஜீவான்மாவை உலகத்தில் அந்த ஆசைகளை அனுபவிக்க ஐந்து பூதங்களை சேர்த்து தகுந்த உடலோடு படைத்தல்.
காத்தல் – அந்த உடலுக்குள்ளேயே இயங்குகின்ற சக்தியாக இருந்து உயிர் உள்ள காலம் வரை காத்தல்.
மறைத்தல் – அவ்வாறு தாம் உடலுக்குள் இருப்பதை உயிர்கள் உணராத படி மறக்கருணையினால் மறைத்தல்.
அருளல் – ஆன்மா தனது ஆசைகளை தீர்த்துக் கொள்ளவும், அந்த ஆசைகள் தீரத் தீர மறைந்து இருக்கின்ற இறைவனை உணர்ந்து கொள்ளவும் அருளல்.
அழித்தல் – ஆசைகள் முழுவதையும் அனுபவித்து முடித்த பிறகு அந்த ஜீவான்மாவின் வசித்த உடலில் இருந்து ஐந்து பூதங்களையும் பிரித்து மீண்டும் பரமாத்மாவாகிய தம்மிடமே வந்து சேரும் படி அழித்தல்.
அந்தக் கரணங்கள்:
மனம் – மனமானது சங்கல்பம் (விருப்பம்) மற்றும் விகல்பம் (சந்தேகம்) ஆகியவைகளின் தன்மையாகும்.
புத்தி – மனதின் முடிவெடுக்கும் பகுதி. பொய்யிலிருந்து உண்மையைப் பகுத்தறிந்து அதன் மூலம் ஞானத்தை சாத்தியமாக்கும் பகுதி.
சித்தம் – பதிவுகள், நினைவுகள் மற்றும் அனுபவங்கள் சேமிக்கப்படும் உணர்வு.
அகங்காரம் – நான், என்னுடையது என்று எண்ணுவது.
இந்திரியங்கள்:
கண் – பார்த்தல்
காது – கேட்டல்
மூக்கு – நுகர்தல்
வாய் – சுவைத்தல்
மெய் / உடல் – தொடுதல் / உணர்தல்