பாடல் #1802

பாடல் #1802: ஏழாம் தந்திரம் – 9. திருவருள் வைப்பு (இறைவன் கொடுத்த அருளை காப்பாற்றுதல்)

பாசத்தி லிட்ட தருள்தந்த பாசத்தில்
நேசத்தை விட்ட தருள்தந்த நேசத்திற்
கூசற்ற முத்தி யருள்தந்த கூட்டத்தில்
நேசமற்றுந் தோன்றா நிலையரு ளாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பாசததி லிடட தருளதநத பாசததில
நெசததை விடட தருளதநத நெசததிற
கூசறற முததி யருளதநத கூடடததில
நெசமறறுந தொனறா நிலையரு ளாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பாசத்தில் இட்டது அருள் தந்த பாசத்தில்
நேசத்தை விட்டது அருள் தந்த நேசத்தில்
கூசு அற்ற முத்தி அருள் தந்த கூட்டத்தில்
நேசம் அற்றும் தோன்றா நிலை அருள் ஆமே.

பதப்பொருள்:

பாசத்தில் (குடும்ப பாசத்தில்) இட்டது (இருக்கும் படி செய்தது) அருள் (இறையருள்) தந்த (கொடுத்த) பாசத்தில் (பாசத்தினால் ஆகும்)
நேசத்தை (அந்த பாசத்தை அனுபவித்து முடித்த பின் ஆசையை) விட்டது (விடும் படி செய்தது) அருள் (இறையருள்) தந்த (கொடுத்த) நேசத்தில் (பேரன்பினால் ஆகும்)
கூசு (அந்த பேரன்பில் நிலை குறைவு) அற்ற (இல்லாத) முத்தி (முக்தியானது) அருள் (இறையருள்) தந்த (கொடுத்த) கூட்டத்தில் (திருவருள் சேர்க்கையினால் ஆகும்)
நேசம் (அந்த திருவருள் சேர்க்கையினால் பாசமும் ஆசையும்) அற்றும் (இல்லாத) தோன்றா (எண்ணங்கள் தோன்றாத) நிலை (நிலையே) அருள் (பேரருள்) ஆமே (ஆகும்).

விளக்கம்:

பாடல் #1801 இல் உள்ளபடி இறைவன் எம்மீது கொண்ட மாபெரும் கருணையாகிய திருவருளால் குடும்ப பாசத்தில் இருக்கும் படி எம்மை வைத்து, அந்த பாசத்தை அனுபவித்து முடித்த பின் ஆசையை விடும் படி செய்து, உள்ளத்தில் ஊற்றெடுத்து வரும் பேரன்பில் குறைவு இல்லாத முக்தி நிலையை கொடுத்து, அவனது திருவருளை எம்மோடு சேர்த்துக் கொடுத்தான். அந்த திருவருள் சேர்க்கையினால் பாசமும் ஆசையும் இல்லாத, எண்ணங்கள் தோன்றாத, அமைதியான நிலையே பேரருள் ஆகும்.

4 thoughts on “பாடல் #1802

  1. சித்ரா Reply

    ஓம் நமசிவாய
    நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த பதிவு கண்டு மிகவும் சந்தோஷம். இந்த பணி தொடர்ந்து நடக்க திருமூலநாயனார் அருள் கிடைக்க வேண்டுகிறோம்.
    மிக்க நன்றி அய்யா

  2. Vaiyapuri Rajendran Udayar Reply

    ஓம் நமசிவாய வாழ்க..

  3. Vaiyapuri Rajendran Udayar Reply

    ஐயா, வணக்கம்! அடியேன் திருவாசகம் 658 பாடல்களையும் உள்ளது உள்ளபடி கையெழுத்து பிரதி எடுத்து அதனை பிரதோஷ வழிபாடு காலத்தில் வைத்து பூசை செய்து நாள் தோறும் வாசித்து வருகிறேன்.
    இப்பொழுது திருமந்திரம் நூலில் இருந்து முதல் தந்திரம் 336 பாடல்கள் எழுதி நிறைவு செய்து, இரண்டாம் தந்திரம் 337 ஆம் பாடலில் இருந்து516 ஆம் பாடல் வரை எழுதி வருகிறேன்.. திருச்சிற்றம்பலம்…

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.