பாடல் #1801: ஏழாம் தந்திரம் – 9. திருவருள் வைப்பு (இறைவன் கொடுத்த அருளை காப்பாற்றுதல்)
அருளா லமுதப் பெருங்கட லாட்டி
யருளா லடிபுனைந் தாரமுந் தந்திட்
டருளான வானந்தத் தாரமு தூட்டி
யருளா லென்னந்தி யகம்புகுந் தானே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
அருளா லமுதப பெருஙகட லாடடி
யருளா லடிபுனைந தாரமுந தநதிட
டருளான வானநதத தாரமு தூடடி
யருளா லெனனநதி யகமபுகுந தானெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
அருள் ஆல் அமுத பெரும் கடல் ஆட்டி
அருள் ஆல் அடி புனைந்து ஆரமும் தந்து இட்டு
அருள் ஆன ஆனந்தத்து ஆர் அமுது ஊட்டி
அருள் ஆல் என் நந்தி அகம் புகுந்தானே.
பதப்பொருள்:
அருள் (அவனது திருவருள்) ஆல் (மூலம்) அமுத (அமுதத்தால் நிறைந்த) பெரும் (மிகப் பெரிய) கடல் (கடலில்) ஆட்டி (எம்மை மூழ்க வைத்து நீராட்டி)
அருள் (அவனது திருவருள்) ஆல் (மூலம்) அடி (அவனுடைய திருவடியை) புனைந்து (எமது தலைமேல் இருக்கும் படி செய்து) ஆரமும் (அவன் கழுத்தில் அணிகின்ற மாலையையும்) தந்து (எமக்கு கொடுத்து) இட்டு (யாம் அணியம் படி செய்து)
அருள் (அவனது திருவருள்) ஆன (ஆகிய) ஆனந்தத்து (பேரானந்தத்தினால்) ஆர் (நிறைந்து இருக்கும்) அமுது (அமிழ்தத்தை) ஊட்டி (எமக்கு ஊட்டிக் கொடுத்து)
அருள் (அவனது திருவருள்) ஆல் (மூலம்) என் (எமது) நந்தி (குருநாதனாகிய இறைவன்) அகம் (எமக்குள்) புகுந்தானே (புகுந்து கொண்டானே).
விளக்கம்:
இறைவன் எம்மீது கொண்ட மாபெரும் கருணையாகிய திருவருளால் அமுதத்தால் நிறைந்த மிகப் பெரிய கடலில் எம்மை மூழ்க வைத்து நீராட்டி, அவனது திருவடிகளை எமது தலை மேல் வைத்து, அவன் கழுத்தில் அணிகின்ற மாலையையும் எம்மை அணிய வைத்து, பேரானந்தமாகிய அமிழ்தத்தை எமக்கு ஊட்டி, எமது குருநாதனாகிய இறைவனே எமக்குள் புகுந்து கொண்டான்.