பாடல் #1796: ஏழாம் தந்திரம் – 9. திருவருள் வைப்பு (இறைவன் கொடுத்த அருளை காப்பாற்றுதல்)
தானே யறியும் வினைக ளறிந்தபின்
நானே யறுதியென் னந்தி யறியுங்கோ
னூனே யுருக்கி யுணர்வை யுணர்ந்தபின்
தேனே யனைய நந்திதேவர் பிரானே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
தானெ யறியும வினைக ளறிநதபின
நானெ யறுதியென னநதி யறியுஙகொ
னூனெ யுருககி யுணரவை யுணரநதபின
தெனெ யனைய நநதிதெவர பிரானெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
தானே அறியும் வினைகள் அறிந்த பின்
நானே அறுதி என் நந்தி அறியும் கோன்
ஊனே உருக்கி உணர்வை உணர்ந்த பின்
தேனே அனையன் நந்தி தேவர் பிரானே.
பதப்பொருள்:
தானே (இறைவன் உள்ளுக்குள் இருந்து உணர்த்துகின்ற அறிவின் துணையால் அடியவர்கள் தாமே) அறியும் (அறிந்து கொள்ளக் கூடிய) வினைகள் (தங்களின் வினைகளையும் அவற்றை நீக்குகின்ற வழிகளையும்) அறிந்த (அறிந்து கொண்ட) பின் (பிறகு)
நானே (அவர்களின் அறிவுக்கு அவர்களே) அறுதி (வகுத்துக் கொண்ட வரை முறைப்படி இருப்பதை) என் (அவர்களுக்குள் இருக்கின்ற) நந்தி (குருநாதராகிய இறைவன்) அறியும் (அறிவான்) கோன் (அனைத்திற்கும் தலைவனாகிய அவனின் மேல் கொண்ட)
ஊனே (பேரன்பினால் தமது உடலையும்) உருக்கி (உருக்கிக் கொள்ளுகின்ற) உணர்வை (அளவிற்கு உருகின்ற மனதின் உணர்ச்சி நிலையை) உணர்ந்த (உண்மையாக உணர்ந்த) பின் (பிறகு)
தேனே (எவ்வளவு அருந்தினாலும் தெகிட்டாத தேனைப்) அனையன் (போன்று அவர்களுக்கு துணையாக இருப்பவன்) நந்தி (குருநாதனாகவும்) தேவர் (தேவர்களுக்கெல்லாம்) பிரானே (தலைவனாகவும் இருக்கின்ற இறைவன்).
விளக்கம்:
இறைவன் உள்ளுக்குள் இருந்து உணர்த்துகின்ற அறிவின் துணையால் அடியவர்கள் தாமே அறிந்து கொள்ளக் கூடிய தங்களின் வினைகளையும் அவற்றை நீக்குகின்ற வழிகளையும் அறிந்து கொண்ட பிறகு, அவர்களின் அறிவுக்கு அவர்களே வகுத்துக் கொண்ட வரை முறைப்படி இருப்பதை அவர்களுக்குள் இருக்கின்ற குருநாதராகிய இறைவன் அறிவான். இப்படி வரை முறைப்படி வாழ்வதினால் தங்களின் வினைகள் அழிந்து போகும் போது அவர்களுக்குள் இருந்து பேரன்பானது வெளிப்படுகின்றது. அனைத்திற்கும் தலைவனாகிய இறைவனின் மேல் கொண்ட பேரன்பினால் தமது உடலையும் உருக்கிக் கொள்ளுகின்ற அளவிற்கு உருகின்ற மனதின் உணர்ச்சி நிலையை உண்மையாக உணர்ந்த பிறகு எவ்வளவு அருந்தினாலும் தெகிட்டாத தேனைப் போன்று அவர்களுக்கு துணையாக இருப்பவன் குருநாதனாகவும் தேவர்களுக்கெல்லாம் தலைவனாகவும் இருக்கின்ற இறைவன்.