பாடல் #1787: ஏழாம் தந்திரம் – 8. சம்பிரதாயம் (இறையருளால் உணர்த்தப் பட்ட தர்மத்தை முறையாக கடைபிடிப்பது)
காய பரத்தி லலைந்து துரியத்துச்
சாய விரிந்து குவிந்து சகலத்தி
லாய வவ்வாறே யடைந்து திரிந்தோர்குத்
தூய வருள்தந்த நந்திக்கென் சொல்வதே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
காய பரததி லலைநது துரியததுச
சாய விரிநது குவிநது சகலததி
லாய வவவாறெ யடைநது திரிநதொரகுத
தூய வருளதநத நநதிககென சொலவதெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
காய பரத்தில் அலைந்து துரியத்து
சாய விரிந்து குவிந்து சகலத்தில்
ஆய அவ்வாறே அடைந்து திரிந்தோர்கு
தூய அருள் தந்த நந்திக்கு என் சொல்வதே.
பதப்பொருள்:
காய (உடலாக இருக்கின்ற) பரத்தில் (பரம்பொருளின் அடையாளத்தில்) அலைந்து (வெளிப்புறமாக பல விதமாக அலைந்து திரிந்து அனுபவித்தலும்) துரியத்து (கனவு நிலையை)
சாய (சார்ந்து வாழ்ந்து) விரிந்து (மனதில் பல வித ஆசைகள் தோன்றி விரிந்து அனுபவித்தலும்) குவிந்து (மாயையே உண்மை என்ற ஒரு எண்ணத்திலேயே மனதை குவித்து) சகலத்தில் (வைத்து அதுவே எல்லாம் என்று நம்புதலும்)
ஆய (ஆகிய பலவிதமான வழிகளால் தமது பிறவிக்கான ஆசைகளையும் வினைகளையும் அனுபவித்துக் கொண்டு இருந்தாலும்) அவ்வாறே (அந்த ஆசைகளின் வழியிலேயே) அடைந்து (இறைவனால் உணர்த்தப் பட்ட தர்மத்தை கடை பிடித்து) திரிந்தோர்கு (திரிகின்ற அடியவர்களுக்கு)
தூய (மாயை இல்லாத தூய்மையான) அருள் (அருளை) தந்த (தந்து அனைத்தும் மாயை தாமே உண்மை என்பதை உணர்த்திய) நந்திக்கு (குருநாதனாகிய இறைவனின் மாபெரும் கருணையை) என் (என்னவென்று) சொல்வதே (யான் எடுத்து சொல்வது?).
விளக்கம்:
உடலாக இருக்கின்ற பரம்பொருளின் அடையாளத்தில் வெளிப்புறமாக பல விதமாக அலைந்து திரிந்து அனுபவித்தலும், கனவு நிலையை சார்ந்து வாழ்ந்து மனதில் பல வித ஆசைகள் தோன்றி விரிந்து அனுபவித்தலும், மாயையே உண்மை என்ற ஒரு எண்ணத்திலேயே மனதை குவித்து வைத்து அதுவே எல்லாம் என்று நம்புதலும், ஆகிய பலவிதமான வழிகளால் தமது பிறவிக்கான ஆசைகளையும் வினைகளையும் அனுபவித்துக் கொண்டு இருந்தாலும், அந்த ஆசைகளின் வழியிலேயே இறைவனால் உணர்த்தப் பட்ட தர்மத்தை கடை பிடித்து திரிகின்ற அடியவர்களுக்கு, மாயை இல்லாத தூய்மையான அருளை தந்து அனைத்தும் மாயை தாமே உண்மை என்பதை உணர்த்திய குருநாதனாகிய இறைவனின் மாபெரும் கருணையை என்னவென்று யான் எடுத்து சொல்வது?