பாடல் #1784: ஏழாம் தந்திரம் – 8. சம்பிரதாயம் (இறையருளால் உணர்த்தப் பட்ட தர்மத்தை முறையாக கடைபிடிப்பது)
கொண்டா னடியென் னடிகைக் குறிதனைக்
கொண்டா னுயிர்பொருள் காயக் குழாத்தினைக்
கொண்டான் மலமுற்றுந் தந்தவன் கோடலால்
கொண்டா னெனவொன்றுங் கூடிநி லானே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
கொணடா னடியென னடிகைக குறிதனைக
கொணடா னுயிரபொருள காயக குழாததினைக
கொணடான மலமுறறுந தநதவன கொடலால
கொணடா னெனவொனறுங கூடிநி லானே.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
கொண்டான் அடி என் அடி கை குறி தன்னை
கொண்டான் உயிர் பொருள் காய குழாத்தினை
கொண்டான் மலம் முற்றும் தந்த அவன் கோடல் ஆல்
கொண்டான் என ஒன்றும் கூடி நில்லானே.
பதப்பொருள்:
கொண்டான் (எம்மை ஆட்கொண்ட இறைவன்) அடி (தமது திருவடி கருணையால்) என் (உலக வாழ்க்கையை வினைகளுக்கு ஏற்ப அனுபவிக்கின்ற எம்மை) அடி (அவனது அருளால் உணர்த்தப்பட்ட தர்மத்தை கடை பிடிக்கும் வழியில் செல்ல வைத்து) கை (தமது திருக்கையினால் அபயம்) குறி (என்கிற அருள் குறியைக் காட்டி) தன்னை (எம்மை)
கொண்டான் (ஆட்கொண்டு அருளி) உயிர் (எமது உயிர்) பொருள் (எமக்குள் பொருளாக மறைந்து இருக்கின்ற அறிவு வடிவாகிய இறை சக்தி) காய (எமது உடல்) குழாத்தினை (ஆகிய மூன்றும் சேர்ந்து இருக்கின்ற கூட்டத்தை)
கொண்டான் (தனதாக ஏற்றுக் கொண்டு) மலம் (எமக்குள் இருக்கின்ற ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று விதமான மலங்களையும்) முற்றும் (முழுவதுமாக நீக்கி விட்டு) தந்த (அவற்றை தந்த) அவன் (அவனே) கோடல் (மீண்டும் எடுத்துக்) ஆல் (கொள்வதின் மூலம்)
கொண்டான் (எம்மை ஆட்கொண்டு எம்மோடு இருக்கின்றான்) என (என்றாலும்) ஒன்றும் (எதனுடனும்) கூடி (கூடி) நில்லானே (இருக்காமல் அனைத்தையும் தாண்டியும் நிற்கின்றான்).
விளக்கம்:
எம்மை ஆட்கொண்ட இறைவன் தமது திருவடி கருணையால் உலக வாழ்க்கையை வினைகளுக்கு ஏற்ப அனுபவிக்கின்ற எம்மை அவனது அருளால் உணர்த்தப்பட்ட தர்மத்தை கடை பிடிக்கும் வழியில் செல்ல வைத்து, தமது திருக்கையினால் அபயம் என்கிற அருள் குறியைக் காட்டி எம்மை ஆட்கொண்டு அருளினான். அதன் பிறகு எமது உயிர், எமக்குள் பொருளாக மறைந்து இருக்கின்ற அறிவு வடிவாகிய இறை சக்தி, எமது உடல், ஆகிய மூன்றும் சேர்ந்து இருக்கின்ற கூட்டத்தை தனதாக ஏற்றுக் கொண்டு, எமக்குள் இருக்கின்ற ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று விதமான மலங்களையும் முழுவதுமாக நீக்கி வீட்டு அவற்றை தந்த அவனே மீண்டும் எடுத்துக் கொள்வதின் மூலம் எம்மை ஆட்கொண்டு எம்மோடு இருக்கின்றான் என்றாலும் எதனுடனும் கூடி இருக்காமல் அனைத்தையும் தாண்டியும் நிற்கின்றான்.