பாடல் #1698: ஆறாம் தந்திரம் – 14. பக்குவன் (இறைவனை அறிவதற்கான மன முதிர்ச்சியை பெற்றவர்கள்)
அடிவைத் தருளுதி யாசானின் றென்னாய்
வடிவைத்த மாமுடி மாயாப் பிறவி
யடிவைத்த காய வருட்சத்தி யாலே
யடிபெற்ற ஞானத்த னாசற்று ளானே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
அடிவைத தருளுதி யாசானின றெனனாய
வடிவைதத மாமுடி மாயாப பிறவி
யடிவைதத காய வருடசததி யாலெ
யடிபெறற ஞானதத னாசறறு ளானெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
அடி வைத்து அருளுதி ஆசான் நின்று என் ஆய்
அடி வைத்த மா முடி மாயா பிறவி
அடி வைத்த காய அருள் சத்தி ஆலே
அடி பெற்ற ஞானத்தன் ஆசு அற்று உளானே.
பதப்பொருள்:
அடி (தங்களின் திருவடியை) வைத்து (என் தலை மீது வைத்து) அருளுதி (அருளுங்கள்) ஆசான் (குருநாதரே) நின்று (என்று வேண்டி நிற்கின்ற) என் (தனது) ஆய் (உடல் பொருள் ஆவியெல்லாம் குருவிற்கே உடமையாக்கிய சீடனின்)
அடி (வேண்டுகோளுக்கு இணங்கி அதன் படியே திருவடியை) வைத்த (வைத்த) மா (மாபெரும்) முடி (தலைவனாகிய இறைவனாகவே இருக்கின்ற குருவின் திருவருளால்) மாயா (மாயையாகிய) பிறவி (பிறவி நீங்கப் பெற்று)
அடி (அவரின் திருவடியை) வைத்த (வைத்த) காய (சீடனின் உடல்) அருள் (இறைவனது திருவருள்) சத்தி (சக்தியின்) ஆலே (மூலம் முழுமையடையும் போது)
அடி (குருவின் திருவடியினால்) பெற்ற (பெற்ற) ஞானத்தன் (ஞானத்தினால் உண்மை ஞானியாகி) ஆசு (ஒரு குற்றமும்) அற்று (இல்லாமல்) உளானே (இருப்பவனே உண்மையான சீடன் ஆவான்).
விளக்கம்:
தங்களின் திருவடியை என் தலை மீது வைத்து அருளுங்கள் குருநாதரே என்று வேண்டி நிற்கின்ற, தனது உடல் பொருள் ஆவியெல்லாம் குருவிற்கே உடமையாக்கிய சீடனின் வேண்டுகோளுக்கு இணங்கி, அதன் படியே திருவடியை வைத்த மாபெரும் தலைவனாகிய இறைவனாகவே இருக்கின்ற குருவின் திருவருளால் மாயையாகிய பிறவி நீங்கப் பெற்று, அவரின் திருவடியை வைத்த சீடனின் உடல் இறைவனது திருவருள் சக்தியின் மூலம் முழுமையடையும் போது, குருவின் திருவடியினால் பெற்ற ஞானத்தினால் உண்மை ஞானியாகி, ஒரு குற்றமும் இல்லாமல் இருப்பவனே உண்மையான சீடன் ஆவான்.