பாடல் #1604: ஆறாம் தந்திரம் – 2. திருவடிப் பேறு (குருவாக வந்த இறைவனின் திருவடிகளால் பெறும் நன்மை)
மந்திர மாவது மாமருந் தாவதுந்
தந்திர மாவதுந் தானங்க ளாவதுஞ்
சுந்தர மாவதுந் தூய்நெறி யாவது
மெந்தை பிரான்ற னிணையடி தானே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
மநதிர மாவது மாமருந தாவதுந
தநதிர மாவதுந தானஙக ளாவதுஞ
சுநதர மாவதுந தூயநெறி யாவது
மெநதை பிரானற னிணையடி தானெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
மந்திரம் ஆவதும் மா மருந்து ஆவதும்
தந்திரம் ஆவதும் தானங்கள் ஆவதும்
சுந்தரம் ஆவதும் தூய் நெறி ஆவதும்
எந்தை பிரான் தன் இணை அடி தானே.
பதப்பொருள்:
மந்திரம் (அனைத்து விதமான மந்திரங்கள் / மாயையால் மூடியிருக்கின்ற மனதை திறக்கின்ற திறவு கோல்) ஆவதும் (ஆக இருப்பதும்) மா (அனைத்து விதமான நோய்களையும் தீர்க்கின்ற / பிறவி பிணி எனும் நோயை தீர்க்கின்ற மாபெரும்) மருந்து (மருந்து) ஆவதும் (ஆக இருப்பதும்)
தந்திரம் (தாந்திரீகம் எனும் இறைவனை அடைவதற்கான வித்தைகள் / இறைவனை விரைவில் அடைவதற்கான வழிகள்) ஆவதும் (ஆக இருப்பதும்) தானங்கள் (அடியவர்கள் செய்கின்ற / அனைத்து விதமான தான தர்மங்கள்) ஆவதும் (ஆக இருப்பதும்)
சுந்தரம் (அழுக்கை நீக்கிய பேரழகு / பிறவி எனும் அழுக்கை நீக்கிய சுந்தரமான அமரர்கள்) ஆவதும் (ஆக இருப்பதும்) தூய் (இறைவனை அடைவதற்கு / மும் மலங்களை நீக்கி தூய்மை அடைவதற்கான) நெறி (வழி முறைகள்) ஆவதும் (ஆக இருப்பதும்)
எந்தை (எமது தந்தையும்) பிரான் (அனைத்திற்கும் தலைவனும்) தன் (ஆகிய இறைவனின்) இணை (ஒன்றாக சேர்ந்தே இருக்கின்ற) அடி (திருவடிகளே) தானே (ஆகும்).
விளக்கம்:
அனைத்து விதமான மந்திரங்களாக இருப்பதும் அனைத்து விதமான நோய்களையும் தீர்க்கின்ற மாபெரும் மருந்தாக இருப்பதும் தாந்திரீகம் எனும் இறைவனை அடைவதற்கான வித்தைகளாக இருப்பதும் உலகத்தில் உள்ள அனைத்து விதமான தான தர்மங்களாக இருப்பதும் அழுக்கை நீக்கிய பேரழகாக இருப்பதும் இறைவனை அடைவதற்கு தூய்மையான வழி முறைகளாக இருப்பதும் எமது தந்தையும் அனைத்திற்கும் தலைவனும் ஆகிய இறைவனின் ஒன்றாக சேர்ந்தே இருக்கின்ற திருவடிகளே ஆகும்.
உள் விளக்கம்:
மாயையால் மூடியிருக்கின்ற மனதை திறக்கின்ற திறவு கோலாக இருப்பதும் பிறவி பிணி எனும் நோயை தீர்க்கின்ற மாபெரும் மருந்தாக இருப்பதும் இறைவனை விரைவில் அடைவதற்கான வழிகளாக இருப்பதும் அடியவர்கள் செய்கின்ற அனைத்து விதமான தான தர்மங்களாக இருப்பதும் பிறவி எனும் அழுக்கை நீக்கிய சுந்தரமான அமரர்களாக இருப்பதும் மும் மலங்களை நீக்கி தூய்மை அடைவதற்கான வழி முறையாக இருப்பதும் இறைவனின் திருவடிகளே ஆகும்.