பாடல் #1603: ஆறாம் தந்திரம் – 2. திருவடிப் பேறு (குருவாக வந்த இறைவனின் திருவடிகளால் பெறும் நன்மை)
அடிசார லாமண்ணல் பாத மிரண்டு
முடிசார வைத்தனர் முன்னே முனிவர்
படிசார்ந்த வின்பப் பழவடி வெள்ளங்
குடிசார் நெறிகூடி நிற்பவர் கொள்கையே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
அடிசார லாமணணல பாத மிரணடு
முடிசார வைததனர முனனெ முனிவர
படிசாரநத வினபப பழவடி வெளளங
குடிசார நெறிகூடி நிறபவர கொளகையெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
அடி சாரல் ஆம் அண்ணல் பாதம் இரண்டும்
முடி சார வைத்தனர் முன்னே முனிவர்
படி சார்ந்த இன்ப பழ அடி வெள்ளம்
குடி சார் நெறி கூடி நிற்பவர் கொள்கையே.
பதப்பொருள்:
அடி (இறைவனின் திருவடிகளையே) சாரல் (சார்ந்து) ஆம் (இருக்கின்றவர்கள்) அண்ணல் (இறைவனின்) பாதம் (பாதங்கள்) இரண்டும் (இரண்டையும்)
முடி (தமது தலையின் மேல்) சார (சேர்ந்து இருக்கும்படி) வைத்தனர் (வைத்து இருக்கின்றார்கள்) முன்னே (ஆதிகாலத்தில்) முனிவர் (முற்றும் துறந்த முனிவர்கள்)
படி (அந்த திருவடிகளால் பெற்ற அருளை உலக உயிர்களின் பக்குவத்துக்கு ஏற்றபடி படிப் படியாக) சார்ந்த (சேர்ந்து இருக்கும் படி கொடுக்கின்றார்கள்) இன்ப (பேரின்பத்தை அருளும்) பழ (பழம் பெரும் இறைவனின்) அடி (திருவடிகளில் இருந்து) வெள்ளம் (வெள்ளம் போல் பெற்ற அருளை)
குடி (இறைவனின் திருவடிகளை தங்களின் தலையில் குடி வைத்து) சார் (அதையே சார்ந்து இருக்கின்ற) நெறி (வழிமுறையில்) கூடி (ஒன்றாக கூடி) நிற்பவர் (நிற்கின்ற அனைத்து முனிவர்களின்) கொள்கையே (கொள்கையும் இதுவே ஆகும்).
விளக்கம்:
இறைவனின் பாதங்கள் இரண்டையும் தமது தலையின் மேல் சேர்ந்து இருக்கும்படி வைத்து இறைவனின் திருவடிகளையே சார்ந்து இருக்கின்றார்கள் ஆதிகாலத்தில் முற்றும் துறந்த முனிவர்கள். பழம் பெரும் இறைவனின் அந்த திருவடிகளில் இருந்து அவர்கள் வெள்ளம் போல் பெற்ற அருளை உலக உயிர்களின் பக்குவத்துக்கு ஏற்றபடி படிப் படியாக அவர்களின் அனுபவிக்கும் படி படி கொடுக்கின்றார்கள் அவர்கள். இறைவனின் திருவடிகளை தங்களின் தலையில் குடி வைத்து அதையே சார்ந்து இருக்கின்ற வழிமுறையில் ஒன்றாக கூடி நிற்கின்ற அனைத்து முனிவர்களின் கொள்கையும் இதுவே ஆகும்.
கருத்து:
வெள்ளம் போன்ற இறைவனின் அருளை அப்படியே வழங்கினால் தாங்கிக் கொள்ள முடியாத உயிர்களுக்கு அவர்கள் அனுபவிக்க வேண்டிய ஆசைகளுக்கு ஏற்றபடி படிப்படியாக அனுபவிக்கும் படி மாற்றிக் கொடுத்து இறைவனின் திருவடிகளையே சார்ந்து இருக்கின்றார்கள் முற்றும் துறந்த முனிவர்கள். திருவடி பேற்றை அடைந்த இவர்களின் தன்மையை இந்தப் பாடலில் திருமூலர் அருளுகின்றார்.