பாடல் #1593: ஆறாம் தந்திரம் – 2. திருவடிப் பேறு (குருவாக வந்த இறைவனின் திருவடிகளால் பெறும் நன்மை)
உரையற் றுணர்வற் றுயிர்பர மற்றுத்
திரையற்ற நீர்போற் சிவமாதல் தீர்வு
கரையற்ற சத்தாதி நான்குங் கடந்த
சொரூபத் திருத்திநற் சொல்லிறந் தோமே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
உரையற றுணரவற றுயிரபர மறறுத
திரையறற நீரபொற சிவமாதல தீரவு
கரையறற சததாதி நானகுங கடநத
சொரூபத திருததிநற சொலலிறந தொமெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
உரை அற்று உணர்வு அற்று உயிர் பரம் அற்று
திரை அற்ற நீர் போல் சிவம் ஆதல் தீர்வு
கரை அற்ற சத்து ஆதி நான்கும் கடந்த
சொரூபத்து இருத்தி நல் சொல் இறந்தோமே.
பதப்பொருள்:
உரை (பேச்சும்) அற்று (இல்லாமல்) உணர்வு (உணர்வும்) அற்று (இல்லாமல்) உயிர் (உயிரும்) பரம் (பரம்பொருளும் வேறு வேறு எனும் நிலையும்) அற்று (இல்லாமல்)
திரை (நுரையம் அலையும்) அற்ற (இல்லாத) நீர் (தெளிவான நீரை) போல் (போல) சிவம் (எனது மனமானது தெளிவு பெற்று சிவமாகவே) ஆதல் (ஆகி விடுவதை) தீர்வு (உறுதியாகப் பெற்று)
கரை (வரம்புகள்) அற்ற (இல்லாத) சத்து (உலக இயக்கத்திற்கு காரணமாகிய சக்திகளாக) ஆதி (ஆதியிலிருந்தே இருக்கின்ற பஞ்ச பூதங்களில்) நான்கும் (நிலம், நீர், காற்று, நெருப்பு ஆகிய நான்கையும்) கடந்த (கடந்து)
சொரூபத்து (ஆகாயத்தில் இருக்கின்ற இறை சொரூபத்தை) இருத்தி (எனக்குள் இருத்தி) நல் (நன்மை தீமை ஆகிய இரண்டு விதமான) சொல் (சொற்களுமே) இறந்தோமே (இறந்து போய்விட அசைவற்ற சமாதி நிலையில் இருந்தேன் யான்).
விளக்கம்:
பாடல் #1590 இல் உள்ளபடி இறைவனே குருவாக வந்து தமது திருவடியை எனது உள்ளத்திற்குள் வைத்த பிறகு பேச்சும் இல்லாமல், உணர்வும் இல்லாமல், உயிரும் பரம்பொருளும் வேறு வேறு எனும் நிலையும் இல்லாமல், நுரையம் அலையும் இல்லாத தெளிவான நீரை போல எனது மனமானது தெளிவு பெற்று சிவமாகவே உறுதியாக ஆகி, வரம்புகள் இல்லாத உலக இயக்கத்திற்கு காரணமாகிய சக்திகளாக ஆதியிலிருந்தே இருக்கின்ற பஞ்ச பூதங்களில் நிலம் நீர் காற்று நெருப்பு ஆகிய நான்கையும் கடந்து ஆகாயத்தில் இருக்கின்ற இறை சொரூபத்தை எனக்குள் இருத்தி, நன்மை தீமை ஆகிய இரண்டு விதமான சொற்களுமே இறந்து போய்விட அசைவற்ற சமாதி நிலையில் இருந்தேன் யான்.
கருத்து:
பஞ்ச பூதங்களில் நிலம் நீர் காற்று நெருப்பு ஆகிய நான்கிற்கும் உலக அளவில் வரையறுக்கப் பட்ட எல்லைகள் உண்டு. ஆனால் ஆகாயத்திற்கு எல்லையே இல்லை. அப்படி எல்லையே இல்லாத ஆகாயத்தில் பரந்து விரந்து இருக்கின்ற இறைவனது சொரூபத்தை எனது உள்ளத்திற்குள் இருத்தி எந்த விதமான எண்ணங்களும் அசைவுகளும் இல்லாத சமாதி நிலையில் இருந்தேன் என்று அருளுகின்றார்.