பாடல் #1592

பாடல் #1592: ஆறாம் தந்திரம் – 2. திருவடிப் பேறு (குருவாக வந்த இறைவனின் திருவடிகளால் பெறும் நன்மை)

தானவ னாதிச் சொரூபத் துள்வந்திட்டு
வானச் சொரூபங் கணான்கு மகன்றற
வேனைய முத்திரை யீறாண்ட னனந்தி
தானடி முற்சூட்டித் தாபித்த துண்மையே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தானவ னாதிச சொரூபத துளவநதிடடு
வானச சொரூபங கணானகு மகனறற
வெனைய முததிரை யீறாணட னனநதி
தானடி முறசூடடித தாபிதத துணமையெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தான் அவன் ஆதி சொரூபத்து உள் வந்து இட்டு
ஆன சொரூபங்கள் நான்கும் அகன்று அற
ஏனைய முத்திரை ஈறு ஆண்டனன் நந்தி
தான் அடி முன் சூட்டி தாபித்தது உண்மையே.

பதப்பொருள்:

தான் (அடியவருக்கு) அவன் (இறைவன்) ஆதி (தமது ஆதியில் இருக்கின்ற) சொரூபத்து (சுய ரூபமாகிய ஜோதியை) உள் (அவரின் உள்ளத்திற்குள்) வந்து (வந்து) இட்டு (வைத்து அருளுகின்றார்)
ஆன (இறைவனாகவே ஆகிவிட்ட அடியவரின்) சொரூபங்கள் (பஞ்ச கோசங்களாகிய சுய ரூபங்களில்) நான்கும் (அன்னம், பிராணன், மனம், விஞ்ஞானம் ஆகிய நான்கும்) அகன்று (விலகிச் சென்று) அற (நீங்கி விட)
ஏனைய (மீதி இருக்கின்ற ஆனந்த மய கோசத்தையே) முத்திரை (முத்திரையாக / ரூபமாக வைத்து) ஈறு (அதையே தமக்கு எல்லையாக கொண்டு) ஆண்டனன் (ஆண்டு அருளுகின்றான்) நந்தி (குருவாக இருக்கின்ற இறைவன்)
தான் (அந்த குருநாதனாகிய இறைவன்) அடி (தமது திருவடியை) முன் (அடியவரின் தலை மேல் முன்னரே) சூட்டி (கிரீடமாக சூட்டி) தாபித்தது (அடியவருக்குள் உறுதியாக ஸ்தாபித்தது) உண்மையே (பேருண்மையே ஆகும்).

விளக்கம்:

அடியவருக்கு இறைவன் தமது ஆதியில் இருக்கின்ற சுய ரூபமாகிய ஜோதியை அவரின் உள்ளத்திற்குள் வந்து வைத்து அருளுகின்றார். அப்போது இறைவனாகவே ஆகிவிட்ட அடியவரின் பஞ்ச கோசங்களாகிய சுய ரூபங்களில் அன்னம் பிராணன் மனம் விஞ்ஞானம் ஆகிய நான்கும் விலகிச் சென்று நீங்கி விட மீதி இருக்கின்ற ஆனந்த மய கோசத்தையே முத்திரையாக (ரூபம்) வைத்து அதையே தமக்கு எல்லையாக கொண்டு ஆண்டு அருளுகின்றான் குருவாக இருக்கின்ற இறைவன். அந்த குருநாதனாகிய இறைவன் தமது திருவடியை அடியவரின் தலை மேல் பாடல் #1590 இல் உள்ளபடி முன்னரே கிரீடமாக சூட்டி அடியவருக்குள் உறுதியாக ஸ்தாபித்தது பேருண்மையே ஆகும்.

பஞ்ச கோசங்கள்:

  1. அன்னமய கோசம் = உணவால் தோன்றி உணவால் வளர்ந்து உணவின் மூலமாகிய மண்ணில் சிதைந்து அழிகிற உடல்.
  2. பிராணமய கோசம் = மூச்சாக உள் வந்து உடலின் அனைத்து இயக்கங்களையும் செயல் படுத்துகின்ற காற்று.
  3. மனோமய கோசம் = எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் ஆதாரமாக இருக்கின்ற மனம்.
  4. விஞ்ஞானமய கோசம் = பகுத்தறிவும் சிந்தனைத் திறனும் கொண்டு இருக்கின்ற அறிவு.
  5. ஆனந்தமய கோசம் = புலன்களுக்கு அப்பாற்பட்டு இருக்கின்ற பேரின்பம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.