பாடல் #1576

பாடல் #1576: ஆறாம் தந்திரம் – 1. சிவகுரு தரிசனம் (இறைவனே குருவாக வந்து தரிசனம் தருவது)

எல்லா வுலகிற்கு மப்பாலோ னிப்பாலாய்
நல்லா ருளத்து மிக்கரு ணல்கலா
லெல்லாரு முய்யக் கொண்டிங்கே யளித்தலாற்
சொல்லார்ந்த நற்குருச் சுத்த சிவமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

எலலா வுலகிறகு மபபாலொ னிபபாலாய
நலலா ருளதது மிககரு ணலகலா
லெலலாரு முயயக கொணடிஙகெ யளிததலாற
சொலலாரநத நறகுருச சுதத சிவமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

எல்லா உலகிற்கும் அப்பாலோன் இப் பால் ஆய்
நல்லார் உளத்து மிக்கு அருள் நல்கல் ஆல்
எல்லாரும் உய்ய கொண்டு இங்கே அளித்தல் ஆல்
சொல் ஆர்ந்த நல் குரு சுத்த சிவமே.

பதப்பொருள்:

எல்லா (அண்ட சராசரங்களில் இருக்கின்ற அனைத்து) உலகிற்கும் (உலகங்களையும்) அப்பாலோன் (தாண்டி இருக்கின்றவனாகிய இறைவன்) இப் (இந்த) பால் (உலகத்தின் பக்கத்திலும்) ஆய் (இருக்கின்றான்)
நல்லார் (அவன் அன்பு கொண்ட நல்லவர்களின்) உளத்து (உள்ளத்தில் இருந்து) மிக்கு (மாபெரும் கருணையினால் மிகவும் அதிக அளவில்) அருள் (அருளை) நல்கல் (கொடுத்துக் கொண்டே) ஆல் (இருப்பதால்)
எல்லாரும் (நல்லவர்கள் மட்டுமின்றி அனைவரும்) உய்ய (மேல் நிலைக்கு) கொண்டு (கொண்டு செல்ல வேண்டும் என்று) இங்கே (இந்த உலகத்திலேயே) அளித்தல் (அவனது திருவருளை வழங்குகின்றான்) ஆல் (ஆதலால்)
சொல் (சொல்லை) ஆர்ந்த (முழுவதுமாக சொல்லி அடியவரை தெளிவு படுத்தும்) நல் (நன்மையே வடிவான) குரு (குருவாக இருப்பது) சுத்த (பரிசுத்தமான) சிவமே (சிவப் பரம் பொருளே ஆகும்).

விளக்கம்:

அண்ட சராசரங்களில் இருக்கின்ற அனைத்து உலகங்களையும் தாண்டி இருக்கின்றவனாகிய இறைவன் இந்த உலகத்தின் பக்கத்திலும் இருக்கின்றான். அவன் அன்பு கொண்ட நல்லவர்களின் உள்ளத்தில் இருந்து மாபெரும் கருணையினால் மிகவும் அதிக அளவில் அருளை கொடுத்துக் கொண்டே இருக்கின்றான். இந்த அருளால் இந்த உலகத்தில் உள்ள நல்லவர்கள் மட்டுமின்றி அனைவரும் மேல் நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று அவனது திருவருளை வழங்குகின்றான். ஆதலால் சொல்லை முழுவதுமாக சொல்லி அடியவரை தெளிவு படுத்தும் நன்மையே வடிவான குருவாக இருப்பது பரிசுத்தமான சிவப் பரம் பொருளே ஆகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.