பாடல் #1574: ஆறாம் தந்திரம் – 1. சிவகுரு தரிசனம் (இறைவனே குருவாக வந்து தரிசனம் தருவது)
பாசத்தைக் கூட்டியே கட்டிப் பறித்திட்டு
நேசத்த காயம் விடுவித்து நேர்நேரே
கூசற்ற முத்தியிற் கூட்டலா னாட்டகத்
தாசற்ற சற்குரு வப்பர மாமே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
பாசததைக கூடடியெ கடடிப பறிததிடடு
நெசதத காயம விடுவிதது நெரநெரெ
கூசறற முததியிற கூடடலா னாடடகத
தாசறற சறகுரு வபபர மாமெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
பாசத்தை கூட்டியே கட்டி பறித்து இட்டு
நேசத்த காயம் விடுவித்து நேர் நேரே
கூசு அற்ற முத்தியில் கூட்டல் ஆல் நாட்டு அகத்து
ஆசு அற்ற சற் குரு அப் பரம் ஆமே.
பதப்பொருள்:
பாசத்தை (அடியவர் உலகப் பற்றுக்களின் மேல் வைத்திருக்கும் பல விதமான பந்த பாசங்களை) கூட்டியே (ஒன்றாக கூட்டி) கட்டி (அதை ஒரு கட்டாக கட்டி வைத்து) பறித்து (அதை அடியவரிடமிருந்து பறித்து நீக்கி) இட்டு (வெளியில் எறிந்து விட்டு)
நேசத்த (இது வரை என்னுடையது என்று அடியவர்) காயம் (தனது உடலின் மீது) விடுவித்து (வைத்திருந்த ஆசையை விடுவித்து) நேர் (இறைவனுக்கு நேரானதாகவும்) நேரே (சரிசமமாகவும் இருக்கின்ற)
கூசு (ஒரு பழியும்) அற்ற (இல்லாத) முத்தியில் (முக்தியில்) கூட்டல் (சேர்த்து) ஆல் (அருளியதால்) நாட்டு (இந்த உலகத்தில்) அகத்து (இருக்கும் போதே)
ஆசு (ஒரு குற்றமும்) அற்ற (இல்லாத) சற் (உண்மையான) குரு (குருவாக) அப் (அந்த) பரம் (பரம்பொருளே) ஆமே (வந்து வழிகாட்டி அருளுகின்றான்).
விளக்கம்:
அடியவர் உலகப் பற்றுக்களின் மேல் வைத்திருக்கும் பல விதமான பந்த பாசங்களை ஒன்றாக கூட்டி அதை ஒரு கட்டாக கட்டி வைத்து அதை அடியவரிடமிருந்து பறித்து நீக்கி வெளியில் எறிந்து விட்டு இது வரை என்னுடையது என்று அடியவர் தனது உடலின் மீது கொண்டிருந்த ஆசையை விடுவித்து இறைவனுக்கு நேரானதாகவும் சரிசமமாகவும் இருக்கின்ற ஒரு பழியும் இல்லாத முக்தியில் சேர்த்து அருளியதால் இந்த உலகத்தில் இருக்கும் போதே ஒரு குற்றமும் இல்லாத உண்மையான குருவாக அந்த பரம்பொருளே வந்து வழிகாட்டி அருளுகின்றான்.