பாடல் #1463: ஐந்தாம் தந்திரம் – 7. யோகம் (இறைவனை அடைவதற்கு அசையாத மனதுடன் செய்வதே யோகம் ஆகும்)
பேணிப் பிறவா வுலகருள் செய்திடுங்
காணிற் றனது கலவியு ளேநிற்கு
நாணில் நரக நெறிக்கே வழிசெய்யு
மூனிற் சுடுமங்கி யுத்தமன் றானே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
பெணிப பிறவா வுலகருள செயதிடுங
காணிற றனது கலவியு ளெநிறகு
நாணில நரக நெறிககெ வழிசெயயு
மூனிற சுடுமஙகி யுததமன றானெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
பேணி பிறவா உலகு அருள் செய்திடும்
காணில் தனது கலவி உளே நிற்கும்
நாணில் நரக நெறிக்கே வழி செய்யும்
ஊனில் சுடும் அங்கி உத்தமன் தானே.
பதப்பொருள்:
பேணி (யோகத்தை அசையாத மனதுடன் இடைவிடாது முறைப்படி கடைபிடித்து வந்தால்) பிறவா (இனி பிறவி எடுக்காத நிலையை) உலகு (இந்த உலகத்திலேயே) அருள் (இறையருள்) செய்திடும் (கொடுத்து விடும்)
காணில் (அந்த இறை சக்தியை தமக்குள் தரிசித்தால்) தனது (தம்முடைய ஆன்மாவோடு) கலவி (ஒன்றாக கலந்து) உளே (உள்ளே) நிற்கும் (வீற்றிருக்கும் அந்த சக்தியை அறிந்து கொள்ளலாம்)
நாணில் (அப்படி இறையோடு கலந்து இருக்கின்ற நிலையில் இருப்பதற்கு வெட்கப் பட்டுக் கொண்டு விலகி நின்றால்) நரக (மனமானது ஐம்புலன்களின் வழியே) நெறிக்கே (ஆசைகளின் பின்னால் செல்லுகின்ற தவறான) வழி (வழியையே) செய்யும் (கொடுக்கும்)
ஊனில் (இறையோடு கலந்து இருக்கின்ற நிலையிலேயே வெட்கப் படாமல் தொடர்ந்து இருந்தால் உடலுக்குள்) சுடும் (இருக்கின்ற மலங்களை சுட்டெரிக்கின்ற) அங்கி (மூலாக்கினியாக) உத்தமன் (இருக்கின்ற உத்தமனாகிய இறைவனாகவே) தானே (தாமும் ஆகிவிடுவார்கள்).
விளக்கம்:
யோகத்தை அசையாத மனதுடன் இடைவிடாது முறைப்படி கடைபிடித்து வந்தால் இனி பிறவி எடுக்காத நிலையை இந்த உலகத்திலேயே இறையருள் கொடுத்து விடும். அந்த இறை சக்தியை தமக்குள் தரிசித்தால் தம்முடைய ஆன்மாவோடு ஒன்றாக கலந்து உள்ளே வீற்றிருக்கும் அந்த சக்தியை அறிந்து கொள்ளலாம். அப்படி இறையோடு கலந்து இருக்கின்ற நிலையில் இருப்பதற்கு வெட்கப் பட்டுக் கொண்டு விலகி நின்றால் மனமானது ஐம்புலன்களின் வழியே ஆசைகளின் பின்னால் செல்லுகின்ற தவறான வழியையே கொடுக்கும். இறையோடு கலந்து இருக்கின்ற நிலையிலேயே வெட்கப் படாமல் தொடர்ந்து இருந்தால் உடலுக்குள் இருக்கின்ற மலங்களை சுட்டெரிக்கின்ற மூலாக்கினியாக இருக்கின்ற உத்தமனாகிய இறைவனாகவே தாமும் ஆகிவிடுவார்கள்.
