பாடல் #1461: ஐந்தாம் தந்திரம் – 7. யோகம் (இறைவனை அடைவதற்கு அசையாத மனதுடன் செய்வதே யோகம் ஆகும்)
எழுத்தோடு பாடலு மெண்ணெண் கலையும்
பழித்தலைப் பாசப் பிறவியு நீங்கார்
வழித்தலைச் சோமனோ டங்கி யருக்கன்
வழித்தலை செய்யும் வகையுணர்ந் தேனே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
எழுததொடு பாடலு மெணணெண கலையும
பழிததலைப பாசப பிறவியு நீஙகார
வழிததலைச சொமனொ டஙகி யருககன
வழிததலை செயயும வகையுணரந தெனெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
எழுத்தோடு பாடலும் எண் எண் கலையும்
பழி தலை பாச பிறவியும் நீங்கார்
வழி தலை சோமனோடு அங்கி அருக்கன்
வழி தலை செய்யும் வகை உணர்ந்தேனே.
பதப்பொருள்:
எழுத்தோடு (எழுதப் பட்ட எழுத்துக்களும்) பாடலும் (அவற்றோடு சேர்ந்து பாடுகின்ற பாடல்களும் இவற்றை கொண்டு இருக்கும்) எண் (எட்டும்) எண் (எட்டும்) கலையும் (பெருக்கி வரும் மொத்தம் அறுபத்து நான்கு கலைகளும் ஆகியவற்றால்)
பழி (இறைவனை அடையாமல் வாழ்க்கையை வீணடிக்கின்ற பழிக்கு) தலை (தலைமையாக இருக்கின்ற) பாச (பாசத்தையும்) பிறவியும் (அதனால் எடுக்கின்ற பிறவிகளையும்) நீங்கார் (ஒருவர் நீக்கி விட முடியாது)
வழி (பாசத்தையும் பிறவியையும் நீக்குகின்ற வழிக்கு) தலை (தலைமையாக இருக்கின்ற) சோமனோடு (சந்திர கலையோடு) அங்கி (அக்கினி கலையையும்) அருக்கன் (சூரிய கலையையும்)
வழி (சேர்த்து பயன்படுத்துகின்ற வழிமுறைக்கு) தலை (தலைமையாக இருக்கின்ற) செய்யும் (அசையாத மனதுடன் செய்கின்ற யோகத்தின்) வகை (வகைகளை) உணர்ந்தேனே (எமக்குள் செய்த யோகத்தினால் உணர்ந்து கொண்டோம்).
விளக்கம்:
பாடல் #1457 இல் உள்ளபடி அசையாத மனதுடன் செய்யாமல் அலைகின்ற மனதுடன் செய்யப்படுகின்ற எழுதப் பட்ட எழுத்துக்களும் அவற்றோடு சேர்ந்து பாடுகின்ற பாடல்களும் இவற்றை கொண்டு இருக்கும் அறுபத்து நான்கு கலைகளும் ஆகியவற்றால் இறைவனை அடையாமல் வாழ்க்கையை வீணடிக்கின்ற பழிக்கு தலைமையாக இருக்கின்ற பாசத்தையும் அதனால் எடுக்கின்ற பிறவிகளையும் ஒருவரால் நீக்கி விட முடியாது. பாசத்தையும் பிறவியையும் நீக்குகின்ற வழிக்கு தலைமையாக இருக்கின்ற சந்திர கலையோடு அக்கினி கலையையும் சூரிய கலையையும் சேர்த்து பயன்படுத்துகின்ற வழிமுறைக்கு தலைமையாக இருக்கின்ற யோகத்தை அசையாத மனதுடன் செய்கின்ற வகைகளை எமக்குள் செய்த யோகத்தினால் யாம் உணர்ந்து கொண்டோம்.
குறிப்பு: பாசமும் பிறவிகளும் நீங்கி இறைவனை அடைவதற்கு எந்த முறையை பயன்படுத்தினாலும் அதில் அசையாத மனதுடன் செய்தால் மட்டுமே அடைய முடியும்.