பாடல் #1460: ஐந்தாம் தந்திரம் – 7. யோகம் (இறைவனை அடைவதற்கு அசையாத மனதுடன் செய்வதே யோகம் ஆகும்)
உய்ந்தன மென்றீ ருறுபொருட் காண்கிலீர்
கந்த மலரிற் கரக்கின்ற நந்தியைச்
சிந்தை யுறவே தெளிந்திரு ணீக்கினால்
முந்தைப் பிறவிக்கு மூலவித் தாமே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
உயநதன மெனறீ ருறுபொருட காணகிலீர
கநத மலரிற கரககினற நநதியைச
சிநதை யுறவெ தெளிநதிரு ணீககினால
முநதைப பிறவிககு மூலவித தாமெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
உய்ந்தனம் என்றீர் உறு பொருள் காண்கிலீர்
கந்த மலரில் கரக்கின்ற நந்தியை
சிந்தை உறவே தெளிந்து இருள் நீக்கினால்
முந்தை பிறவிக்கு மூல வித்து ஆமே.
பதப்பொருள்:
உய்ந்தனம் (முக்திக்கான ஞானத்தை பெற்று விட்டோம்) என்றீர் (என்று கூறுகின்றீர்கள்) உறு (உங்களுக்கு உள்ளேயே இருக்கின்ற) பொருள் (பரம்பொருளை) காண்கிலீர் (கண்டு உணராமல் இருக்கின்றீர்கள்)
கந்த (நறுமணம்) மலரில் (மலருக்குள்) கரக்கின்ற (மறைந்து இருப்பது போல ஜீவாத்மாவிற்குள் மறைந்து இருக்கின்ற) நந்தியை (குருநாதனாகிய இறைவனை)
சிந்தை (சிந்தை முழுவதும் அவன் மேல் வைத்து) உறவே (யோகம் செய்து) தெளிந்து (தமக்குள் அவனை அறிந்து கொண்டு தெளிவு பெற்று) இருள் (அதன் பயனால் மும்மலங்களாகிய இருளை) நீக்கினால் (நீக்கி விட்டால்)
முந்தை (முதன் முதலில்) பிறவிக்கு (இறைவனிடமிருந்து பிரிந்து வந்து பிறவி எடுப்பதற்கு) மூல (மூல) வித்து (காரணமாக இருக்கின்ற ஆசைகள் நீங்கப் பெற்று) ஆமே (இனி பிறவியே இல்லாத நிலையை அடையலாம்).
விளக்கம்:
முக்திக்கான ஞானத்தை பெற்று விட்டோம் என்று கூறுகின்றீர்கள் உங்களுக்கு உள்ளேயே இருக்கின்ற பரம்பொருளை கண்டு உணராமல் இருக்கின்றீர்கள். நறுமணம் மலருக்குள் மறைந்து இருப்பது போல ஜீவாத்மாவிற்குள் மறைந்து இருக்கின்ற குருநாதனாகிய இறைவனை சிந்தை முழுவதும் அவன் மேல் வைத்து யோகம் செய்து தமக்குள் அவனை அறிந்து கொண்டு தெளிவு பெற்று அதன் பயனால் மும்மலங்களாகிய இருளை நீக்கி விட்டால் முதன் முதலில் இறைவனிடமிருந்து பிரிந்து வந்து பிறவி எடுப்பதற்கு மூல காரணமாக இருக்கின்ற ஆசைகள் நீங்கப் பெற்று இனி பிறவியே இல்லாத நிலையை அடையலாம்.