பாடல் #1072: நான்காம் தந்திரம் – 5. சக்தி பேதம் (திரிபுரை சக்தியின் வடிவமும் தன்மைகளும்)
ஆன வராக முகத்தி பதத்தினள்
ஈன வராக மிடிக்கு முசலத்தொ
டேனை யுழுபடை ஏந்திய வெண்ணகை
ஊன மறவுணர்ந் தாருள்ளத் தோங்குமே.
விளக்கம்:
பாடல் #1071 இல் உள்ளபடி இறைவனின் திருவடிகளைப் போற்றி வணங்குபவர்களின் உள்ளத்தில் திரிபுரை சக்தியானவள் வராஹி எனும் பெயர் கொண்டு பன்றியின் முகத்தோடும் அதற்கேற்ற திருவடிகளோடும் வந்து கீழ்மையான எண்ணத்தை இடித்து மாற்றுகின்ற இரும்பு உலக்கையையும் அந்த எண்ணத்தை சீர்படுத்த உழுகின்ற ஏர் கலப்பையையும் மனதை ஒருநிலைப் படுத்துகின்ற வெண்மையான சங்கையும் கைகளில் ஏந்தி இருக்கின்றாள். அவளின் உருவத்தை மறந்து உருவமற்ற திரிபுரை சக்தியை உணர்ந்தவர்களின் உள்ளத்தில் அவள் ஓங்கி நிற்கின்றாள்.
கருத்து: திரிபுரை சக்தியானது அடியவர்களின் உள்ளத்தில் வராஹி எனும் உருவத்தில் ஓங்கி நிற்பதை இந்தப் பாடலில் உருவகிக்கலாம். திரிபுரை சக்தியைப் போற்றி வணங்குபவர்களின் உள்ளத்தில் அவள் வராஹி உருவம் கொண்டு வந்து தனது கைகளிலுள்ள இரும்பு உலக்கையால் கீழ்மையான எண்ணங்களை இடித்து அதை ஏர் கலப்பையால் சீர்படுத்தி அவர்களின் மனதை வெண்மையான சங்கினால் ஒருநிலைப் படுத்தி அவர்களின் உள்ளத்தில் ஓங்கி நிற்கின்றாள்.
