பாடல் #1067: நான்காம் தந்திரம் – 5. சக்தி பேதம் (திரிபுரை சக்தியின் வடிவமும் தன்மைகளும்)
ஏடங்கை நங்கை யிறைஎங்கண் முக்கண்ணி
வேடம் படிகம் விரும்பும்வெண் டாமரை
பாடுந் திருமுறை பார்ப்பனி பாதங்கள்
சூடுமென் சென்னிவாய்த் தோத்திரஞ் சொல்லுமே.
விளக்கம்:
பாடல் #1066 இல் உள்ளபடி சிவகதியைச் சொல்கின்ற அனைத்து சொற்களாகவும் இருக்கின்ற திரிபுரை சக்தியே எங்கள் இறைவியாகும். அவள் மூன்று கண்களை உடையவள். உருவமில்லாத அவளே படிகம் போன்ற ஊடுருவிப் பார்க்கும் திருமேனியை விரும்பி வெள்ளைத் தாமரையில் அமர்ந்து கொண்டு எப்போதும் வேதங்களை ஓதிக் கொண்டிருக்கும் பிரம்மனின் தேவியான சரஸ்வதியாக இருக்கின்றாள். இவளது திருப்பாதங்களை தரிசித்து எமது தலைமேல் தாங்கி அவளின் தோத்திரங்களை எப்போதும் எமது வாய் சொல்லிக் கொண்டே இருக்கின்றது.
கருத்து:
திரிபுரை சக்தியானவள் பிரம்மனின் தேவியான சரஸ்வதி எனும் பெயருடன் உயிர்கள் வாழும் வாழ்க்கைக்குத் தேவையான அறிவைக் (கல்வி) கொடுத்து அருளுவதை இந்தப் பாடலில் உருவகிக்கலாம். முக்கண்ணி என்பது மூன்று காலங்களையும் பார்க்கின்ற இறைவியானவள் உயிர்களின் சென்ற பிறவிகளின் கர்மங்களைப் பார்த்து இந்த பிறவியை படைப்பதையும் இந்தப் பிறவியின் கர்மங்களைப் பார்த்து பின்பு வரும் பிறவிகளை தீர்மானித்து சிவகதியை அடைய வைப்பதையும் குறிக்கின்றது. வெள்ளைத் தாமரையில் அமர்ந்திருக்கும் படிகம் போன்ற உருவம் என்பது தூய்மையான எண்ணங்களுடன் அனைத்தையும் ஊடுருவிப் பார்க்கின்ற ஞானத்தின் உருவமாக இருப்பதைக் குறிக்கின்றது. திருமுறை பாடும் பார்ப்பனி என்பது உயிர்கள் சிவகதி அடைவதற்கு தமது கர்மங்களைத் தீர்க்க பல பிறவிகளை எடுக்க வேண்டும் என்பதற்காக வேதங்களை ஓதிக்கொண்டே படைக்கும் தொழிலை செய்யும் பிரம்மாவும் அவருக்கு சக்தியாக சரஸ்வதியும் இருப்பதைக் குறிக்கின்றது.