பாடல் #1064: நான்காம் தந்திரம் – 5. சக்தி பேதம் (திரிபுரை சக்தியின் வடிவமும் தன்மைகளும்)
அளியொத்த பெண்பிள்ளை யானந்த சுந்தரி
புளியுறு புன்பழம் போலுள்ளே நோக்கித்
தெளியுறு வித்துச் சிவகதி காட்டி
ஒளியுற வைத்தென்னை உய்யவுண் டாளே.
விளக்கம்:
பாடல் #1063 இல் உள்ளபடி நற்கதியை அருளுகின்ற திரிபுரை சக்தியான இறைவி பேரானந்தத்தின் வடிவமாகப் பேரழகுடன் இருக்கின்றாள். புளியம் பழத்தின் மேல்பகுதி கடினமாக இருந்தாலும் அதனுள் இருக்கும் பழுத்த பழம் மென்மையாகவும் ஓடுடன் ஒட்டாமலும் இருப்பது போல திரிபுரை சக்தி தனது அருள் பார்வையால் எமது உள்ளத்திற்குள் பார்த்து எம்மை தெளிய வைத்து எமக்குள் ஒளியாக இருக்கும் இறைவனின் சிவகதியை காட்டி எம்மை மேன்மை அடைய வைத்து தன்னுள்ளே அடக்கிக் கொண்டாள்.