பாடல் #1061: நான்காம் தந்திரம் – 5. சக்தி பேதம் (திரிபுரை சக்தியின் வடிவமும் தன்மைகளும்)
நின்றவள் நேரிழை நீள்கலை யோடுற
என்றெ னகம்படிந் தேழுல குந்தொழ
மன்றது வொன்றி மனோன்மணி மங்கலி
ஒன்றெனோ டொன்றிநின் றொத்தடைந் தாளே.
விளக்கம்:
பாடல் #1060 இல் உள்ளபடி எனக்குள் நிறைந்து நின்ற திரிபுரை சக்தி தான் செய்யும் செயல்களுக்கு ஏற்ற அணிகலன்களை அணிந்து கொண்டு அனைத்து செயல்களோடு கலந்து எனது உள்ளத்தில் பதிந்து இருக்கின்றாள். ஏழு உலகத்திலும் அவளை உணர்ந்தவர்கள் வந்து தொழுகின்றபடி எனது மனமாகிய அம்பலத்தில் ஆடுகின்ற இறைவனோடு ஒன்றி மனோன்மணி எனும் பெயருடன் தான் செய்கின்ற அனைத்து செயல்களையும் மங்கலமாக்குகின்றாள். சிவம் வேறு திரிபுரை சக்தி வேறு என்று வேறுபடாமல் ஒன்றோடு ஒன்றாக ஒன்றி நின்று எப்போதும் பிரியாமல் எனது உள்ளத்துள் ஒன்றாக அடைந்திருக்கின்றாள்.
குறிப்பு: இறைவன் ஆடுகின்ற அனைத்து இடங்களும் (அடியவர்களின் உள்ளம் உட்பட) அம்பலம் என்று அறியப்படும். இறைவனோடு திரிபுரை சக்தி ஒன்றாகக் கலந்து நிற்பதை மனோன்மணி என்ற பெயரில் அறியலாம்.
