பாடல் #1058: நான்காம் தந்திரம் – 5. சக்தி பேதம் (திரிபுரை சக்தியின் வடிவமும் தன்மைகளும்)
கொம்பனை யாளைக் குவிமுலை மங்கையை
வம்பவிழ் கோதையை வானவிர் நாடியைச்
செம்பவ ளத்திரு மேனிச் சிறுமியை
நம்பியென் னுள்ளே நயந்துவைத் தேனே.
விளக்கம்:
பாடல் #1057 இல் உள்ளபடி ஞானத்தை தாங்கி வளர்க்கின்ற கொம்பைப் போன்றவளும், முழுமையுடன் அழகாக விளங்கும் கொங்கைகளை கொண்டவளும், மணம் கமழ்கின்ற வாசனை மலர்களை தன் கூந்தலில் சூடிக்கொண்டு இருப்பவளும், தேவர்களும் விரும்பி தேடுகின்றவளாக இருப்பவளும், பவளம் போன்ற சிகப்பான மேனியைக் கொண்ட சிறுமியாக இருப்பவளுமாகிய திரிபுரை சக்தி இராஜராஜேஸ்வரி எனும் திருநாமத்தைக் கொண்டு அருளுகின்றாள். இறைவனோடு இரண்டறக் கலக்கும் ஞானத்தை அளிக்கக் கூடியவள் இந்த சக்தியே என்று நம்பி எனது உள்ளத்திற்குள்ளே பணிவோடு வைத்திருக்கின்றேன்.
கருத்து:
திரிபுரை சக்தியானது இராஜராஜேஸ்வரி எனும் பெயருடன் தேவர்களுக்கும் அமிர்தத்தை அருளி ஞானத்தை வளர்ப்பவளாக இருப்பதை இந்தப் பாடலில் உருவகிக்கலாம். கொம்பை போன்றவள் என்பது ஞானம் என்கிற கொடியைத் தாங்கி வளர்க்கின்ற கொம்பாக இருப்பதைக் குறிக்கின்றது. முழுமையான அழகுடன் விளங்கும் கொங்கைகள் என்பது தேவர்களுக்கும் அமிர்தமான பாலை தருபவளாக இருப்பதைக் குறிக்கின்றது. மணம் கமழ்கின்ற வாசனை மலர்களை சூடியுள்ளவள் என்பது வண்டு தேனைத் தேடி வாசனையுள்ள மலரை நோக்கிச் செல்வதைப் போல தேவர்கள் இறைவனேடு இரண்டறக் கலக்கும் ஞானத்தை தேடிப் பெறுவதற்கு இராஜராஜேஸ்வரியை நாடிச் செல்வதைக் குறிக்கின்றது. செம்பவளத் திருமேனியைக் கொண்ட சிறுமி என்பது உச்ச நிலை ஞானத்தின் ஆரம்பத்தைக் கொடுத்து அருளும் இராஜராஜேஸ்வரியின் திருவுருவத்தைக் குறிக்கின்றது.
