பாடல் #1051: நான்காம் தந்திரம் – 5. சக்தி பேதம் (திரிபுரை சக்தியின் வடிவமும் தன்மைகளும்)
நின்ற திரிபுரை நீளும் புராதனி
குன்றலில் மோகினி மாதிருக் குஞ்சிகை
நன்றறி கண்டிகை நாற்காற் கரீடணி
துன்றிய நற்சுத்த தாமரைச் சுத்தையே.
விளக்கம்:
பாடல் #1050 இல் உள்ளபடி நான்கு திசைகளையும் தாங்கி நிற்கின்ற திரிபுரை சக்தி ஆதியிலிருந்தே தொடர்ந்து இருக்கின்ற பராசக்தியாகும். இவள் குறையில்லாத அழகுடன் அண்டசராசரங்கள் அனைத்தையும் வசப்படுத்தி வைத்திருப்பவள். மிகவும் அழகாக அசைந்தாடும் தலை முடியைக் கொண்டவள். நன்மையை வழங்கும் உருத்திராட்சத்தை அணிந்தவள். நான்கு கால்களுடன் கரிய உருவத்தைக் கொண்ட யானையை வாகனமாகக் கொண்ட கஜலட்சுமியானவள். இவள் சுத்தமாக மலராமல் நெருங்கி இருக்கும் தாமரை இதழ்களைப் போலத் தூய்மையானவள்.
கருத்து:
திரிபுரை சக்தியானது கஜலெட்சுமி எனும் பெயருடன் அனைத்தையும் தன் வசப்படுத்தி இருப்பதை இந்தப் பாடலில் உருவகிக்கலாம். புராதனி என்பது ஆதிகாலத்திலிருந்தே அண்டசராசரங்கள் இருக்கும் வரை எப்போதும் இருப்பதைக் குறிக்கின்றது. குறைவில்லாத மோகினி என்பது அண்டசராசரங்கள் அனைத்தையும் தன் செயலுக்கு ஏற்ப வசப்படுத்தி வைத்திருப்பதைக் குறிக்கின்றது. அழகாக அசைந்தாடும் தலை முடி என்பது அண்டசராசரங்கள் அனைத்தையும் தனது அசைவுக்கு ஏற்ப ஆட்டி வைப்பதைக் குறிக்கின்றது. உருத்திராட்ச மாலை என்பது பாடல் #1050 இல் குறிப்பிட்ட நவகிரகங்கள் உலகங்களுக்கு நன்மை தருவதை குறிக்கின்றது. நான்கு கால்களுடன் கரிய உருவத்தைக் கொண்ட யானை என்பது அனைத்தையும் அருளும் அஷ்ட லட்சுமிகளில் நடுநாயகமாக இருக்கும் கஜலட்சுமியைக் குறிக்கின்றது. சுத்தமான தாமரை என்பது தண்ணீரில் இருந்தாலும் தாமரையின் இதழ்களானது தண்ணீருடன் ஒட்டாமல் இருப்பதைப் போல திரிபுரையான கஜலட்சுமி அனைத்து செயல்களையும் செய்பவளாக இருந்தாலும் அதனுடன் ஒட்டாமல் விலகி இருப்பதைக் குறிக்கின்றது.
